மாகாண சபை முறைமையில் எனக்கு உடன்பாடில்லை: கிழக்கு ஆளுநர்
மாகாண சபைகள் எப்போதும் மத்திய அரசாங்கத்தின் கீழேயே செயற்பட வேண்டும். அதனை மீறி தன்னிச்சையாக செயற்பட முயற்சிக்கும்போது தேவையற்ற பல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளன. மத்திய அரசாங்கத்தின் கீழ் இல்லாவிட்டால் மாகாணங்கள் தனிமைப்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். இந்த தனிமைப்படுத்தலுக்கும் பிரிவினைவாதத்திற்கும் நான் எப்போதும் எதிராகவே இருக்கிறேன் என கிழக்கு மாகாணத்தின் முதலாவது பெண் ஆளுநரான அனுராதா யஹம்பத் தெரிவித்தார்.
'விடியல்' இணையத்தளத்திற்கு அவர் வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். குறித்த நேர்காணலின் முழுமை:
ஆளுநர் எனும் பொறுப்புவாய்ந்த பதவியொன்று கிடைக்குமென்று நீங்கள் எதிர்பார்த்திருந்தீர்களா?
நான் ஒரு தகுதிவாய்ந்த ஆடை வடிவமைப்பாளர் என்ற வகையில் தனியார் துறையில் பல்வேறு வியாபார செயற்றிட்டங்களை கடந்த பல தசாப்தங்களாக முன்னெடுத்திருந்தேன். அத்துடன் ஆளுநராகப் பதவியேற்கும் வரை தனியார் துறையில் பல்வேறு பதவி நிலைகளில் கடமையாற்றியுள்ளேன்.
சர்வதேசத்தின் தலையீடு எமது நாட்டுக்கு ஒருபோதும் சிறந்ததல்ல. கடந்த ஆட்சிக்காலத்தில் வெளிநாடுகளின் தலையீடு எமது நாட்டில் கடுமையாக காணப்பட்டது. அதுமாத்திரமல்லாமல் நாட்டின் இறைமைக்குப் பாதிப்பேற்படக்கூடிய பல்வேறு சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன.
இதன்போது நாட்டின் இறைமையைப் பாதுகாக்கும் வகையில் ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட பல சர்வதேச மாநாடுகளில் நாட்டுக்காக வேண்டி தொடர்ச்சியாக குரல்கொடுத்து வந்தேன்.
இந்தக் காலகட்டங்களில் அரசாங்க அதிகாரியாக இணைவேன் என்று ஒருபோதும் நான் நினைக்கவில்லை. இந்த நிலையிலேயே கிழக்கு மாகாண ஆளுநர் பதவி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் எனக்கு வழங்கப்பட்டது.
இதனை நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக் ஷ வெற்றிபெற்று இரண்டு நாட்களின் பின்னர் இந்த நியமனம் தொடர்பில் என்னிடம் அறிவித்தார்.
அரசாங்கத்தில் இதுபோன்ற பெரிய பதவியொன்று கிடைக்குமென்று எதிர்பார்க்காமலிருந்த எனக்கு அந்த தகவல் அதிர்ச்சியையே ஏற்படுத்தியது. எனினும், குறித்த சமயத்தில் எனக்குத் தீர்மானமொன்றை எடுக்க முடியாமலிருந்தது. இது தொடர்பில் எனது பிள்ளைகளுடன் கலந்துரையாடிய பின்னர் சிறந்த தீர்மானமொன்றை மேற்கொண்டேன்.
இந்தப் பதவியினூடாக நாட்டுக்கு சிறந்த முறையில் சேவையாற்ற கிடைத்த ஒரு சந்தர்ப்பம் என்றபடியினால் குறித்த பதவியினை பொறுப்பேற்றுள்ளேன். இந்த ஆளுநர் பதவியின் ஊடாக கிழக்கு மாகாண மக்களுக்கும் நாட்டுக்கும் சிறந்த சேவையினை மேற்கொள்வேன் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது.
ஆளுநராக நியமிக்கப்பட்ட பின்னர் எவ்வாறான சவால்களை நீங்கள் எதிர்நோக்குகின்றீர்கள்?
நானும் எனது குடும்பமும் கொழும்பில் வாழ்ந்து வந்த நிலையில் இந்தப் பதவியை அடுத்து நான் கிழக்கு மாகாணத்தில் அதிக நேரத்தினை செலவழிக்க வேண்டியுள்ளது.
இதனால் எனது குடும்பத்தைப் பிரிந்து வாழவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமை ஒரு சவாலான விடயமாகும். அதுபோன்று அதிக நேரம் வாகனத்தில் பயணிக்க வேண்டியுள்ளது. ஆளுநராக நியமிக்கப்பட்ட பின்னர், சுமார் 15 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக வாகனத்தில் பயணித்த நாட்களும் உண்டு.
கிழக்கு மாகாணத்திற்கு சென்றபோது அங்கு அரசியல் ரீதியாக மக்கள் வேறுபடுத்தப்படுவதை என்னால் நேரடியாக உணர முடிந்தது. இதனைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன். எமது நாட்டுக்கு இதுவொரு புதிய விடயமாகும். இதுபோன்ற விடயங்களினால் நாட்டில் ஒரு போதும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது. இதனை முற்றாக ஒழிக்க வேண்டும்.
இந்த அனைத்து சவால்களையும் கையாளக்கூடிய திறன் என்னிடமுள்ளமையினால் இதுபோன்ற சவால்களை சாதகமாக எடுத்து அப்பிராந்திய மக்களுக்கு எதிர்காலத்தில் சிறந்த சேவைகளை மேற்கொள்ளவுள்ளேன்.
கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கு எவ்வாறான திட்டங்களை வைத்துள்ளீர்கள்?
கிழக்கு மாகாணம் இன்று ஒரு பின்தங்கிய மாகாணமாக உள்ளது. இந்த மாகாணத்தில் நிலவும் வறுமையை ஒழிப்பதே எனது பிரதான இலக்காகும். அதுபோன்று மக்களின் வாழ்க்கை தரத்தினையும் அதிகரிக்க வேண்டியுள்ளது. இந்த மாகாணத்திலுள்ள அனைத்தின மக்களும் சந்தோசமாகவும் ஒற்றுமையாகவும் வாழவேண்டும்.
இந்த மாகாணத்திலுள்ள சில அரசியல்வாதிகள் இனங்கள் மத்தியில் பாரிய இடைவெளியினை ஏற்படுத்தியுள்ளமையை தெளிவாக உணர முடிகின்றது. இதனை இல்லாமலாக்கி அனைத்தின மக்களும் ஒற்றுமையாக வாழ நடவடிக்கை எடுக்க வேண்டிய பாரிய பொறுப்பொன்று என்னிடம் உள்ளது.
மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட பின்னர் இந்த மாகாண மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நேரடியாக என்னால் அவதானிக்க முடிந்தது. இதற்கமைய மாகாணத்திலுள்ள மூன்று மாவட்ட மக்களை பல்வேறு வழிகளில் தரமுயர்த்த வேண்டியுள்ளது. இதுதொடர்பில் எந்தவித இன வேறுபாடுமின்றி மக்களுக்கு சேவையாற்றவுள்ளேன்.
குறிப்பாக, இந்த மாகாண மக்கள் சமுர்த்தி போன்ற அரச மானியங்களில் தங்கியிருக்க வேண்டிய நிலையை மாற்றியமைக்கத் திட்டமிட்டுள்ளேன். அதேபோன்று அபிவிருத்தி செயற்பாடுகளில் பொதுமக்களின் பங்களிப்பு அவசியமாகும். இந்த செயற்பாடு தற்போது கிழக்கு மாகாணத்தில் இல்லாமல் பொதுமக்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர்.
இந்த செயற்பாடு மாகாணத்திலுள்ள அரசியல்வாதிகளினாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை தவிர்த்து எதிர்காலத்தில் பொதுமக்களின் பங்குபற்றலுடனான அபிவிருத்தி திட்டங்களை எதிர்காலத்தில் முன்னெடுக்கவுள்ளேன்.
பெண் தொழில் முற்சியாளரான நீங்கள் மாகாணத்தின் முதலாவது பெண் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இம் மாகாணத்திலுள்ள பெண்களின் விடயத்தில் எவ்வாறான செயற்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளீர்கள்?
இன்று, பெண்களின் பிரச்சினை ஒரு முக்கிய பிரச்சினையாகும். நானுமொரு பெண் என்ற அடிப்படையில் பெண்களின் பிரச்சினைக்கு மனிதாபிமான அடிப்படையில் தீர்வுகள் வழங்கப்படும்.
அதேவேளை, மாகாணத்தில் பல்லாயிரக்கணக்கான விதவைகள் உள்ளனர். இவர்களில் அதிகமானவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே உள்ளனர். இதுவொரு முக்கிய விடயமாகும். இது தொடர்பில் அதிக கவனம் செலுத்தவுள்ளேன்.
அதேபோன்று, பெண் முயற்சியாளர் என்ற அடிப்படையில் மாகாணத்தின் பிரச்சினைகள் தொடர்பில் தற்போது விரிவாக ஆராய்ந்து வருகின்றேன். இதற்கமைய வைத்தியசாலைகளில் வைத்தியர் பற்றாக்குறையும் பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறையும் நிலவுவதை அறிய முடிந்தது.
இதற்குப் பிரதான காரணம் மாகாணத்திலுள்ள வளங்கள் ஒழுங்கான முறையில் முகாமைத்துவம் செய்யப்படாமையேயாகும். இதற்கான தீர்வுகளை காணவுள்ளதுடன், இதற்குத் தேவையான தரநிர்ணயமொனறையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளேன். இதனூடாக வளங்களின் வீண்விரயங்களை பாரியளவில் குறைக்க முடியும்.
மாகாணத்தில் இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளீர்கள்?
எமது நாடு பின்தங்கிய வறுமையான நாடாக காணப்படுவதற்கு பிரதான காரணம் ஊழலாகும். இலஞ்சம் மற்றும் ஊழல் செயற்பாட்டினை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவும் அங்கீகரிக்கவில்லை. இதற்கு எதிராக பல்வேறு செயற்றிட்டங்களை ஜனாதிபதி முன்னெடுத்துள்ளார்.
அந்த திட்டங்களை நான் கிழக்கு மாகாணத்திலும் முன்னெடுக்கவுள்ளேன். மாகாணத்திலுள்ள எந்தவொரு அரச அதிகாரிகளும் இலஞ்சம் பெற்றால் அவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுப்பேன்.
அது மாத்திரமல்லாமல், கடந்த வருட இறுதியில் மாகாண ஆளுநர் என்ற அடிப்படையில் எனக்கு வழங்கப்பட்ட எந்தவொரு பரிசுப் பொருட்களையும் நான் பொறுப்பேற்காமல் அனைத்தையும் உரிய நபர்களுக்கே திருப்பியனுப்பிவிட்டேன். குறிப்பாக பேனா அல்லது கேக்கைக்கூட நான் எடுக்கவில்லை.
பரிசுப்பொருட்களை வழங்கி என்னை வாங்க முடியாது எனும் செய்தியை தெளிவாக கூறும் அடிப்படையிலேயே இதனை மேற்கொண்டதுடன், இலஞ்ச விடயத்தில் ஏனைய அரச அதிகாரிகளுக்கு முன்னுதாரணமாக செயற்படும் விடயத்திலும் இதனை மேற்கொண்டேன்.
13ஆவது திருத்தச் சட்டம் மற்றும் அதிகார பரவலாக்கம் தொடர்பில் தங்களின் நிலைப்பாடு என்ன?
மாகாண மட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றமையினால் சில சமயங்களில் இந்த அதிகாரப் பரவலாக்கம் அவசியமாகும். இந்த அதிகாரப் பரவலாக்கம் இல்லாவிடின் மாகாணங்களில் பிரச்சினைகள் முன்னிலைப்படுத்தப்படமாட்டாது.
எனினும், இது மத்திய அரசின் கீழே எப்போதும் செயற்பட வேண்டும். தற்போது நான் ஆளுநராக உள்ளபோதும் இந்த மாகாண சபை முறைமை செயற் பாட்டில் எனக்கு உடன்பாடில்லை. 13 ஆவது சட்டமூலம் ஒரு வெள்ளை யானையாகும். இதன் மூலம் அதிக செலவுகளே நாட்டுக்கு ஏற்படுகின்றன.
குறிப்பாக அபிருவித்தியைவிட இந்த மாகாண சபை முறைமையின் நிர்வாக நடவடிக்கைகளுக்காகவே அதிக நிதியொதுக்கப்படுகின்றது. மாகாண சபைகள் எப்போதும் மத்திய அரசாங்கத்தின் கீழேயே செயற்பட வேண்டும். அதனை மீறி தன்னிச்சையாக செயற்பட முயற்சிக்கும்போது தேவையற்ற பல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகளுள்ளன.
அதுமாத்திரமல்லாமல் மத்திய அரசாங்கத்தின்கீழ் இல்லாவிட்டால் மாகாணங்கள் தனிமைப்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். இந்த தனிமைப்படுத்தலுக்கும் பிரிவினைவாதத்திற்கும் நான் எப்போதும் எதிராகவே இருக்கிறேன்.
இதுவொரு சிறிய நாடாகும். இதனால் இதன் நிர்வாகமும் ஒரு சிறிய முறையில் காணப்படுகின்றது. இதனால் அனைத்தின மக்கள் மத்தியிலும் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும். இதன் ஊடாக நாட்டில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியும்.
நேர்கண்டவர்: றிப்தி அலி
Comments (0)
Facebook Comments (0)