நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றியளிக்குமா?
றிப்தி அலி
நாட்டில் பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரிப்பது போல், அரசியல் நெருக்கடியும் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருகின்றமையினால் அரசியல் களமும் கொதிநிலையிலேயே காணப்படுகின்றது.
இதனால், நாட்டின் அரசியலுக்கும், பொருளாதாரத்திற்கும் நாளை என்ன நடக்கும் என்று எதிர்வு கூற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருகின்றன.
ஜனாதிபதி செயலகம் முன்பாக 20 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டம் நடந்து வருகின்றது. எனினும், மக்களின் கோரிக்கைக்கு அடிபணியாது தங்களின் பதவிகளை தக்கவைக்கும் நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதியும், பிரதமரும் காணப்படுகின்றனர்.
இவ்வாறான நிலையில் மஹிந்த ராஜபக்ஷவினை பிரதமர் பதவியிலிருந்து விலக்குவதன் மூலம் தற்போதை பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என ஜனாதிபதி கருதுகின்றார்.
இதனாலேயே, மகாநாயக்க தேரர்களின் கோரிக்கையினை ஏற்று இடைக்கால அரசாங்கத்தினை நிறுவுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விருப்பம் வெயிட்டுள்ளதுடன் இதில் அனைத்து கட்சிகளையும் இணையுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுப்பத்துள்ளார்.
அதுபோல், அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பதன் ஊடாக தற்போதைய நெருக்கடி தீர்வு காணலாம் என பிரதமர் கருதுகின்றார்.
இதனால் அண்ணன், தம்பி இருவருக்கும் இடையில் இன்று பாரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த விரிசலின் ஒரு அங்கமாகவே பிரதமரினால் சிபாரிசு செய்யப்பட்ட சிரேஷ்ட உறுப்பினர்கள் யாரும் புதிய அமைச்சரவையில் ஜனாதிபதியினால் உள்வாங்கப்படவில்லை.
குறிப்பாக ராஜபக்ஷ குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமாக காணப்பட்ட ஜோன்சன் பெர்ணான்டோ, புதிய அமைச்சரவை நியமனத்தின் போது நெடுஞ்சாலைகள் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வாறான நிலையில் ஜனாதிபதிக்கு நெருக்கமான சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்த ராஜபக்ஷவினை உடனடியாக பிரதமர் பதவியிலிருந்து நீக்குமாறு ஜனாதிபதிக்கு அழுத்தம் பிரயோகிக்கின்றனர்.
எனினும், இராஜினாமச் செய்யும் கோரிக்கையினை மஹிந்த ராஜபக்ஷ தொடர்;ச்சியாக நிராகரித்து வருவதுடன் புதிய இடைக்கால அரசாங்கத்திலும் நானே பிரதமர் என்ற அறிவிப்பினையும் அண்மையில் வெளியிட்டிருந்தார்.
பிரதமருக்கு பக்கபலமாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ செயற்பட்டு வருகின்றார். இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (26) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாகாண சபை உறுப்பினர்கள் பேரவையின் கூட்டமொன்று இடம்பெற்றது.
இதன்போது மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்யக்கூடாது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ஆளும் கட்சி பாராளுமன்ற குழுக் கூட்டத்திலும் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
எதிர்வரும் மே 4ஆம் திகதி பாராளுமன்றம் கூடவுள்ளது. இதன்போது பிரதி சபாநாயகர் தேர்வு இடம்பெறவுள்ளமையினால் பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் பெரும்பான்மையினை நிரூபிக்க வேண்டியுள்ளது.
இதற்கு முன் ஆயத்தமாக பிரதமருக்கு ஆதரவு தெரிவித்து 113 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்தினை சேகரிக்கும் நடவடிக்கையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒரு தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்கள் களமிறங்கியுள்ளனர்.
எனினும், குறித்த நடவடிக்கை இன்னும் வெற்றியளிக்கவில்லை. இதற்கு பிரதான காரணம் ஆளும் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இரண்டாக பிளவுபட்டுள்ளமையேயாகும்.
இவ்வாறான நிலையில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
எனினும், இந்த பிரேரணை வெற்றியடையுமா என்பது தான் இன்றுள்ள கேள்விக்குரியாகும். இதற்கு பிரதான காரணம் எதிர்க்கட்சியினரிடம் ஒற்றுமையினையாகும்.
சஜித் அணி, ரணில் அணி, அனுர அணி, தமிழ்க் கூட்டமைப்பு, மைத்ரி தலைமையிலான சுயாதீன அணி மற்றும் பொதுஜன பெரமுன சுயாதீன அணி என பல கூறுகளாக எதிர்க்கட்சி பிரிந்து செயற்படுகின்றமையே இதற்கான காரணமாகும்.
எவ்வாறாயினும், 120 பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்வில அறிவித்துள்ளார்.
எனினும், இப்பிரேரணைக்கு ஆதரவளிப்பது தொடர்பில் இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னும் தீர்மானிக்கவில்லை என அக்கட்சியின் பேச்சாளரான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றியடைந்து மறு தினம் விமல் வீரவன்ச பிரதமராவது தமிழ் கூட்டமைப்பு ஆதரவளிக்க முடியுமா என்ற கேள்வியினையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, நம்பிக்கையில்லா பிரேரணையில் எதிர்க்கட்சி வெற்றியடைந்தால் உடனடியாக அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்படும். அதனை அடுத்து சபாநாயகரை அகற்றி ஜனாதிபதியையும் குற்றவியல் பிரேரணையின் ஊடாக அகற்ற முயற்சிப்பர் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதனால், நம்பிக்கையில்லா பிரேரணையினை முறியடிக்கும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேரம் பேசும் நடவடிக்கையில் பசில் ராஜபக்ஷ களமிறங்கியுள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் இது எந்தளவு வெற்றியளிக்கும் என்பதே கேள்விக்குரியாகும். எவ்வாறாயினும், மக்களின் கோரிக்கைக்கு தலைசாய்க்கமால் தொடர்ச்சியாக தங்களின் பதவிகளை தக்கவைக்கும் நோக்கில் ஆளும் மற்றும் எதிர்த்தரப்பு அரசியல்வாதிகள் செயற்படுவதை ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது.
இதற்கு எதிராக பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டங்கள் திசைமாறுவதற்கு முன்னர் அரசியல்வாதிகள் சிறந்த தீர்மானமொன்றினை மேற்கொள்வது சிறப்பாகும். அவ்வாறில்லாத பட்சத்தில் நாட்டில் ஏற்படப் போகும் விரும்பத்தகாத செயற்படுகளிற்கு அரசியல்வாதிகளே பொறுப்புக்கூற வேண்டி வரும்.
Comments (0)
Facebook Comments (0)