எதிர்வரும் மாதத்திற்குள் மௌலவி ஆசிரியர் நியமனம்: டலஸ்
மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் கல்வி அமைச்சராகவிருந்த சுசில் பிரேமஜயந்தவுக்குப் பின்னர் இந்நாட்டில் மௌலவி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவில்லையென என்னிடம் தெரிவிக்கப்பட்டது. மௌலவி ஆசிரியர் நியமனம் எதிர்வரும் மாதத்திற்குள் வழங்கப்படுமென நான் உறுதியளிக்கிறேன் என்று கல்வி, விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
கடந்த காலங்களில் தேர்தல் நெருங்கும்போது போட்டிப் பரீட்சைகள் மற்றும் நேர்முகப் பரீட்சை நடத்தப்படும். ஆனால் நியமனங்கள் வழங்கப்படுவதில்லை. இவ்வாறான ஒரு கலாசாரமே கடந்த ஆட்சியில் இடம்பெற்றது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்து விரைவில் மௌலவி ஆசிரியர் நியமனம் வழங்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
வெலிகம பாரி அரபுக் கல்லூரியின் 135ஆவது வருட பூர்த்திவிழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். இவ்விழாவுக்கு கல்லூரியின் அதிபர் மௌலவி அல்-ஹாபிழ் ஏ.ஆர்.அப்துர்ரஹ்மான் (மழாஹிரி) தலைமை வகித்தார். தொடர்ந்து அமைச்சர் அங்கு உரையாற்றுகையில்,
1884ஆம் ஆண்டு இலங்கையில் முதன் முதலாக ஸ்தாபிக்கப்பட்ட வெலிகம மத்ரஸதுல் பாரி அரபுக் கல்லூரி தமது 135 ஆவது வருட பூர்த்தி விழாவை கொண்டாடும் இச்சந்தர்ப்பத்தில், 1869ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இலங்கைக் கல்வித் திணைக்களம் 150 வருட பழமையானது. இது பிரித்தானிய ஆட்சியின்போதே ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையின் பழைய அரபுக் கல்லூரியான இம்மத்ரஸாவின் 135வது வருட பூர்த்தி விழாவில் கலந்துகொள்ளக் கிடைத்ததையிட்டு பெருமகிழ்ச்சியடைகிறேன்.
இன்று பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் இங்கு கல்வி கற்று மௌலவிகளாக, ஹாபிழ்களாக பட்டம் பெறும் உங்களுக்கு இலங்கை அரசாங்கம் என்றவகையில் நான் இச்சந்தர்ப்பத்தில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் இன்று கல்வி அமைச்சுப் பதவியை பொறுப்பேற்று ஒரு மாதகாலம் மாத்திரமே. இவ்வொருமாத காலத்துக்குள் நான் இதுவரை நான் கற்ற பாடசாலைகளான கொழும்பு ஆனந்தாக் கல்லூரி, மாத்தறை சென்ட் சேர்விஸஸ் கல்லூரி ஆகியவைக்கு நான் சென்றதில்லை.
படித்த பாடசாலைக்கு முதன்முதலாக செல்வதே சம்பிரதாயம். எனினும், எமது தலைவர், முன்னாள் வெலிகம நகரசபை தலைவர் எச்.எச்.முஹம்மதின் வேண்டுகோளை எனக்கு நிராகரிக்க முடியாது. எனவேதான் நான் இன்று இங்கு வந்துள்ளேன்.
உலக முஸ்லிம்களின் சனத்தொகை 1.8 பில்லியன் ஆகும். இது உலக சனத் தொகையின் 24 வீதம் ஆகும். இலங்கை சனத் தொகையில் 11 மில்லியன் ஆகும். இதனை உலக சனத் தொகையுடன் சேர்க்கும் போது 1.8 பில்லியன் ஆகும். அனைவரும் ஒரே மனித குலம் தான் நாம் இன்று சிங்களம், தமிழ், முஸ்லிம், பறங்கியர் என வேறாகப் பிரிந்தாலும் மனிதன் என்ற வகையில் நாம் அனைவரும் ஒரே மனிதகுலமே.
நாம் மொழி ரீதியாக் பிரிந்திருந்தாலும் எமது கலாசாரம், சம்பிரதாயம் என்ன? எல்லா இனத்திலும் தடுக்கப்பட்டவை, அனுமதிக்கப்பட்டவை என இரண்டுதான் உள்ளன. முஸ்லிம்கள் இதைத்தான் ஹராம், ஹலால் என்பர். இதில் சிங்களவர் முஸ்லிம்களுக்கிடையில் என்ன வேறுபாடு இருக்கின்றது.
அதற்கு மேலாக செய்யாமல் இருந்தால் நன்று என்ற ஒன்றும் உண்டு அதுதான் ‘மக்ரூஹ்’ என்பர். இது அனைத்திலும் சமத்துவம் காணப்படுகின்றன. இன்று அதிகமானோர் சமத்துவமில்லாததையே நாடிச் செல்கின்றனர். சமத்துவம் இல்லாததற்கு பிரதான காரணம் மொழிப் பிரச்சினையாகும்.
எமது நாடு ஒரு சிறிய தீவு இச்சிறிய தீவுக்குள் இரண்டு மொழிகள்தான் உள்ளன. அது தமிழ் மொழி, சிங்கள மொழி ஆகும். என்றாலும் அதனையும் எமக்குப் புரிந்துகொள்ள முடியாதுள்ளது. ஐரோப்பிய நாடுகளை நோக்கினால் அவர்களுக்கு அவர்களது சுதேச மொழியோடு அண்டை நாட்டு மொழிகளும் பேசவும் விளங்கவும் முடியுமாக உள்ளன. பல மொழிகளைப் பேசக்கூடிய ஆற்றல் உள்ளவர்களாக ஐரோப்பிய நாட்டு மக்கள் உள்ளனர்.
எமது நாட்டின் முதல் பிரதமர் டீ.எஸ். சேனாநாயக்க அன்று எமது நாட்டின் இரு மொழிகளையும் அதாவது, தமிழ் – சிங்களம் ஆகியவையை அரசகரும மொழியாக அங்கீகரித்திருந்தால் பிரச்சினை எதுவும் உருவாகியிருக்க மாட்டாது. அவ்வாறு அவர் அன்று செய்யாததினால்தான் இன்று பிரச்சினைகள் உருவாகியுள்ளன.
சிங்களவர்களுக்குத் தமிழ் புரிவதில்லை, தமிழர்களுக்கு சிங்களம் புரிவதில்லை. புரியாத மொழியில் பேசும்போது அது மூளைக்கு மாத்திரம்தான் சென்றடையும். ஆனால் தெரிந்த மொழியில் பேசும்போது அது உள்ளத்திற்குப் போய்ச் சேருமென நெல்சன் மண்டேலா ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டதையும் அமைச்சர் நினைவூட்டினார்.
இன்று எமது நாட்டுக்கு சிறந்த தலைமைத்துவம் ஒன்று கிடைத்துள்ளது. இதனால்தான் சிங்களவர், தமிழர் மற்றும் முஸ்லிம்கள் அச்சமின்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அரசியல் சதிகளுக்குள் யாரும் சிக்கிக்கொள்ள வேண்டாம். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் தலைமையிலான இவ்வரசாங்கம் இந்நாட்டு மக்கள் அனைவரும் இலங்கையர் என்றே நோக்குகின்றது. நாம் அனைவரும் இலங்கை நாட்டு குடும்பத்தினரைச் சேர்ந்தவர்கள்.
இந்த நம்பிக்கையை உள்ளத்தில் உறுதி கொள்ளுங்கள். கடந்த மஹிந்த ராஜபக் ஷவின் அரசாங்கத்தில் கல்வி அமைச்சராக இருந்த சுசில் பிரேம ஜயந்தவுக்குப் பின்னால் இந்நாட்டில் மௌலவி நியமனங்கள் வழங்கப்படவில்லையென இங்கு நகரசபை முன்னாள் தலைவரால் சுட்டிகாட்டப்பட்டது.
எதிர்வரும் சில மாத காலத்துக்குள் இந்த மௌலவி நியமனத்தைப் பெற்றுக்கொடுக்க நான் இச்சந்தர்ப்பத்தில் உறுதியளிக்கிறேன். தேர்தல் நெருங்கும்போது போட்டிப் பரீட்சை, நேர்முகப் பரீட்சை என்பன நடாத்தப்படும். ஆனால் நியமனம் வழங்கப்படுவதில்லை. இவ்வாறான ஒரு கலாசாரமே கடந்த வருடங்களில் இருந்தன என்றார்.
இந்நிகழ்வில் இராஜாங்க அமைசசர் மஹிந்த யாப்பா அபேவர்தன. வெலிகம பிரதேச சபை தலைவர் புஷ்பகுமார பெட்டகே, வெலிகம நகரசபை முன்னாள் தலைவர் எச்.எச்.முஹம்மத், வெலிகம நகரசபையின் தற்போதைய உபதவைலர் எம்.ஜே.மின்ஹாஜ் உட்பட பெருமளவிலான உலமாக்கள், மத்ரஸா மாணவர்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.
-வெலிகம நிருபர்-
Comments (0)
Facebook Comments (0)