சிங்கப்பூர் நிறுவனத்தினால் கடற்கரையை சுத்தம் செய்யும் இயந்திரங்கள் அன்பளிப்பு
கடற்கரையை சுத்தம் செய்யும் எட்டு (8) பீச் டெக் ஹைட்ரோ ஸ்வீபி இயந்திரங்களை சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட உலகளாவிய இலாப நோக்கமற்ற கூட்டமைப்பு இலங்கையின் கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணைக்குழுவுக்கு வழங்கியுள்ளது.
இந்த நன்கொடை வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகேயினால் இன்று (02) நடைபெற்ற விழாவில் முறையாக கடலோரப் பாதுகாப்பு மற்றும் தாழ்வான நிலங்கள் அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்ஷன டி சில்வா மற்றும் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணைக்குழுவின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.
ஜேர்மனியில் உள்ள கோஸ்போஹெர் ஜெலன்டெஃபாஹெர்ஜியூக் ஏஜி நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட கடற்கரையை சுத்தம் செய்யும் பீச்டெக் ஹைட்ரோ ஸ்வீபி இயந்திரங்கள், பிளாஸ்டிக் நாற்றுகள் மற்றும் ஏனைய வகை கழிவுகளை திறம்பட மற்றும் திறமையாக சுத்தம் செய்யும் திறன் கொண்டவையாகும்.
அபாயகரமான பொருட்களுடன் மனிதத் தொடர்பைக் குறைப்பதன் மூலம் பாதுகாப்பான முறையில் கடற்கரையை சுத்தம் செய்ய உதவுவது இந்த இயந்திரத்தின் மற்றுமொரு நன்மையாகும்.
மே 2021 இல் இலங்கையின் மேற்குக் கடற்கரையில் மூழ்கிய எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை சுத்தம் செய்வதற்கு இந்த இயந்திரங்கள் உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நன்கொடை சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தால் ஒருங்கிணைக்கப்பட்டது.
கூட்டமைப்பின் உதவிகள் குறித்த ஆரம்பக் கலந்துரையாடல்கள் சிங்கப்பூருக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் சசிகலா பிரேமவர்த்தன, வெளிநாட்டு அமைச்சின் சமுத்திர விவகாரங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் ஹசந்தி திஸாநாயக்க, கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணைக்குழுவின் பொது முகாமையாளர் கலாநிதி. டேர்னி பிரதீப் குமார மற்றும் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், திட்டங்களின் துணைத் தலைவர் நிக்கொலஸ் கோலெஷ், வெளியீடு மற்றும் கற்கைகளின் தலைவர் கிம் ஸ்டெங்கர்ட் மற்றும் அரசாங்க மற்றும் பொது விவகாரங்களின் தலைவர் ரவி அல்ஃபிரட்ஸ் ஆகியோரின் பங்களிப்புடன் நடைபெற்றது.
சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம், பிராங்பேர்ட்டில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம், வெளிநாட்டு அமைச்சு, கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணைக்குழு மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஆகியவற்றின் அதிகாரிகள் இந்த இயந்திரங்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான ஒருங்கிணைப்பு முயற்சியில் ஈடுபட்டனர்.
பிராங்பேர்ட்டில் இருந்து கொழும்புக்கு இயந்திரங்களை இலவசமாக எடுத்துச் செல்வதற்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் தலைவர் அசோக் பத்திரகே சம்மதித்ததுடன், மேலேற்றும் ஏற்பாடுகளை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பிராந்திய முகாமையாளர் மொஹான் மீகொல்ல ஒருங்கிணைத்து மேற்கொண்டார்.
ஆரம்பக் கலந்துரையாடல்கள் மற்றும் உபகரணங்களை வழங்குவதில் உள்ள செயன்முறைகள் ஆகியவற்றை கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணைக்குழுவின் தலைவரான தர்ஷனி லஹந்தபுர மற்றும் அவரது குழுவினர் எளிதாக்கினர்.
பீச்டெக் ஸ்வீப்பி இயந்திரங்களை நன்கொடையாக வழங்குவதன் மூலம் இலங்கையின் கடற்கரைகளைத் தூய்மைப்படுத்தும் முயற்சிகளுக்கு உதவிகளை வழங்கியமைக்காக கூட்டமைப்பின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் குழுவினருக்கு இலங்கை உயர் ஸ்தானிகராலயம் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், நாட்டின் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக கூட்டாண்மை மற்றும் வலையமைப்புக்களை உருவாக்குவதில், 'பிளாஸ்டிக் கழிவுகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான கூட்டணி' யுடன் இணைந்து பணியாற்றுவதற்கும் எதிர்பார்க்கின்றது.
Comments (0)
Facebook Comments (0)