இலங்கைக்கு நோர்வேயினால் 490 மில்லியன் ரூபா அன்பளிப்பு
இலங்கையின் உணவு, போஷாக்கு மற்றும் பின்தங்கிய நிலையிலுள்ள சிறுவர்கள் மற்றும் பெண்களை பாதுகாப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இலங்கையிலுள்ள உலக உணவுத் திட்டம் (WFP), ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (UNICEF) மற்றும் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் (UNFPA) ஆகியவற்றுக்கு 13 மில்லியன் நோர்வே குரோன்களை (அண்ணளவாக ரூ. 490 மில்லியன்) நிதி உதவிகளை நோர்வே அரசாங்கம் வழங்கியுள்ளது.
இது தொடர்பில் நோர்வே வெளிவிவகார அமைச்சின் சார்பாக, வெளி விவகார அமைச்சர் அன்னிகென் ஹுட்ஃவெல்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“இலங்கையில் நாம் தற்போது எதிர்கொண்டுள்ள உணவு மற்றும் போஷாக்கு நெருக்கடி தொடர்பில் நான் அதிகம் கவலை கொள்கின்றேன். இந்த நெருக்கடியான சூழல் காரணமாகப் பெண்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் பாரதூரமான தாக்கம் ஏற்பட்டுள்ளது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
“இலங்கையில் நிலவும் உணவு, போஷாக்கு மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக நோர்வே 13 மில்லியன் நோர்வே குரோன்களை ஒதுக்கீடு செய்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்புகளினூடாக இந்த உதவித் தொகை பகிரப்படும் என்பதுடன், உணவுப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு முயற்சிகளுக்காக பயன்படுத்தப்படும்.” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கான நோர்வே தூதுவர் டீரன யுரன்லி எஸ்கடேல் (Trine Jøranli Eskedal) கருத்துத் தெரிவிக்கையில்,
"இலங்கையில் தற்போது நிலவும் இந்த நெருக்கடி சூழ்நிலைக்கு முன்னதாக, அதிகளவு போஷணைக் குறைபாடுடைய சிறுவர்கள் காணப்பட்டனர். தற்போதைய பொருளாதார நெருக்கடியான சூழ்நிலை காரணமாக, கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மாருக்கு மற்றும் சிறுவர்கள் மத்தியில் பாரதூரமான போஷாக்குத் தொடர்பான பிரச்சனைகள் எழுந்துள்ளது.
இந்த சவால்கள் நிறைந்த சூழலில், பெண்கள் மற்றும் சிறுவர்கள் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் வன்முறைகளுக்கு பெருமளவில் முகங்கொடுக்க வேண்டிய நிலையும் அதிகரித்துள்ளது" என்றார்.
விவசாய விளைச்சல்கள் பாதிப்பு மற்றும் நாட்டில் தற்போது நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக இந்த நிலை மேலும் மோசமடையக்கூடும் என ஐக்கிய நாடுகள் சபை அச்சம் வெளியிட்டுள்ளது.
அத்துடன், முழு அளவிலான மனிதநேயம் சார்ந்த நெருக்கடியை நோக்கி வியாபிக்கலாம் எனவும் எதிர்வுகூரியுள்ளது. துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிடின், எதிர்வரும் மாதங்களில் இந்த நிலை மேலும் மோசமடையக்கூடும். இதன் காரணமாக, ஐக்கிய நாடுகள் சபையினால் மனிதநேய பிரதிவினைத் திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளது.
உலக உணவு ஸ்தாபனத்துக்கு நோர்வே 5 மில்லியன் நோர்வே குரோன்களை வழங்கும். இதனூடாக, பின்தங்கிய குழுக்களை இலக்காகக் கொண்ட நிவாரண உதவித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.
மேலும் 5 மில்லியன் குரோன்கள் மற்றும் 3 மில்லியன் குரோன்கள் முறையே ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் மற்றும் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் போன்றவற்றுக்கு வழங்கப்படும்.
அதனூடாக சிறுவர்கள் மற்றும் பெண்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். சிறுவர்களுக்குப் பாதுகாப்பளிப்பது மற்றும் பாலியல் வன்முறைகளுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு நோர்வே முன்னுரிமையளிக்கின்றது.
இலங்கையில் தற்போது நிலவும் இந்தச் சூழ்நிலை மேலும் மோசமடைவதைத் தவிர்க்கும் வகையில் இந்த முயற்சிகள் அத்தியாவசியமானவையாக அமைந்துள்ளன.
இந்த உதவித் திட்டம் தொடர்பில் உலக உணவு ஸ்தாபனத்தின் இலங்கைக்கான பணிப்பாளரும் பிரதிநிதியுமான அப்துர்ரஹிம் சித்திக்கி கருத்துத் தெரிவிக்கையில்,
“உலக உணவு ஸ்தாபனத்தினால் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு அவசியமாக அமைந்திருந்த உதவிகளை வழங்க நோர்வே அரசாங்கம் முன்வந்துள்ளதையிட்டு நாம் நன்றி தெரிவிக்கின்றோம்.
பல மில்லியன் கணக்கானவர்கள் அடிப்படை உணவுத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதில் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர். தற்போது எழுந்துள்ள மனிதநேய நெருக்கடிச் சூழல் மேலும் மோசமடைவதைத் தவிர்க்கும் வகையில் எமது முயற்சிகளை மேம்படுத்துவதற்கு சகல உதவிகளும் பங்களிப்பும் எமக்கு அவசியமானதாக அமைந்துள்ளது” என்றார்.
இலங்கையில் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் இடைக்கால பிரதிநிதி எம்மா பிரிக்ஹம் கருத்துத் தெரிவிக்கையில்,
“இலங்கை தற்போது எதிர்கொண்டு இந்த நெருக்கடிய நிலை சிறுவர்களை பல வழிகளில் பாதித்துள்ளது. அவர்களின் கல்வியை அணுகும் திறன், பாதுகாப்பு, போஷாக்கு, சுகாதாரம் மற்றும் நீர், தூய்மை சார்ந்த சேவைகள் போன்றன இதில் அடங்குகின்றன.
ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் குழுவினர் களத்தில் செயலாற்றுவதுடன், இந்த அவசரத் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் பணியாற்றுகின்றனர். நோர்வேயினால் வழங்கப்பட்டுள்ள இந்தப் பங்களிப்பினூடாக, ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்துக்கு மேலும் பின்தங்கிய நிலையில் காணப்படும் சிறுவர்களையும் அவர்களின் குடும்பத்தாரையும் சென்றடைந்து, அவர்களுக்கு அவசியமான சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு உதவியாக அமையும்” என்றார்.
இலங்கையில் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் பாலின வன்முறைகளை தவிர்ப்பது தொடர்பில் முக்கியத்துவமளிக்க வேண்டியமை தொடர்பில் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் பிரதிநிதி குன்லி அதெனியி கருத்துத் தெரிவிக்கையில்,
“நோர்வே அரசாங்கத்திடமிருந்து கிடைத்திருந்த உதவியினூடாக, தற்போதைய நெருக்கடியான சூழலில், பாலின வன்முறைக்கு முகங்கொடுக்கக்கூடிய பின்தங்கிய நிலையில் காணப்படும் பெண்களுக்கு அவசியமான சுகாதார மற்றும் பாதுகாப்பு சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு உதவியாக அமைந்திருக்கும்” என்றார்.
உலகளாவிய ரீதியில், ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதான பங்காளராகவும் நன்கொடை வழங்குநராகவும் நோர்வே திகழ்கின்றது. இதில் உலக உணவு ஸ்தாபனம், ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் மற்றும் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் போன்றனவும் அடங்குகின்றன.
இலங்கை மக்களுக்கு அவசியமான தருணங்களில் மனிதநேய உதவிகளை வழங்கிய வரலாற்றை நோர்வே அரசாங்கம் கொண்டுள்ளது. குறிப்பாக சுனாமி அனர்த்தம் மற்றும் வெள்ள அனர்த்தங்களின் போது இவ்வாறான உதவிகளை நோர்வே இலங்கைக்கு வழங்கியுள்ளது. மேலும், இலங்கையில் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கும் நோர்வே தொடர்ச்சியான உதவிகளை வழங்குகின்றது.
Comments (0)
Facebook Comments (0)