MCC மீளாய்வுக் குழுவின் அறிக்கையினை ஐக்கிய தேசிய கட்சி நிராகரிப்பு
மிலேனியம் சவால் ஒப்பந்தம் (MCC) தொடர்பில் பேராசிரியர் லலிதசிறி குணருவன் அவர்களின் மீளாய்வுக் குழு அறிக்கையின் மூலம் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுக்களை ஐக்கிய தேசிய கட்சி முற்றாக மறுக்கின்றது.
ஊடக அறிக்கைகளின் படி, 2017 மற்றும் 2018 ஆகிய வருடங்களில் MCC உடன் இரு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டதன் பின்னர் அன்றைய அரசாங்கத்திற்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் MCC இன் மூலம் வழங்கப்பட்டதாக பேராசிரியர் குணருவன் அவர்களின் அறிக்கையின் மூலம் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
எனினும் இந்நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் எவ்வித ஆவணமும் நிதி அமைச்சில் காணப்படவில்லை எனவும் குணருவன் மேலும் தெரிவித்துள்ளார். MCC இன் மூலம் இலங்கை அரசாங்கத்திற்கு எவ்வித நிதியும் விடுவிக்கப்படவில்லை என இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளதுடன் இலங்கை அரசாங்கத்திற்கு MCC இன் மூலம் ஒரு தொகை நிதி விடுவிக்கப்பட்டுள்ளது என எழும் குற்றச்சாட்டுக்களை முழுமையாக அது நிராகரித்துள்ளது.
ஐக்கிய அமெரிக்க குடியரசு அரசாங்கத்தின் மூலம் விடுக்கப்பட்டுள்ள இந்த உத்தியோகபூர்வ அறிக்கையின் மூலம் MCC மீளாய்வுக் குழுவின் அறிக்கை தொடர்பான நம்பகத்தன்மையானது கேள்விக்குறிக்கு உள்ளாக்கப்படுவதுடன், ஜனாதிபதியும் அரசாங்கமும் தேர்தல் காலப்பகுதியினுள் ஐக்கிய தேசிய கட்சியின் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்துவதற்காக வேண்டி உத்தியோகபூர்வ அரச வளங்களை பயன்படுத்துகின்றனர் என்பதும் எமக்கு தெளிவாகின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியானது ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் இந்த MCC அறிக்கை தொடர்பில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி பொதுமக்களை திசைத்திருப்பியதுடன், தற்போது மீண்டும் இந்த தேர்தலில் கூட அவ்வாறான செயலில் ஈடுபட்டு பொதுமக்களை திசைதிருப்புவதற்கு ஆயத்தமாகின்றனர் என்பது தெளிவாகின்றது.
2011 ம் ஆண்டிலிருந்து 2019ம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் காலம் வரை அரசாங்கத்தினுள் ஆரம்பநிலை ஒப்பந்தங்கள் சில கைச்சாத்திடப்பட்டதுடன் இவ்வொப்பந்தம் தொடர்பில் விபரிப்பதற்காக மற்றும் விவாதிப்பதற்காக பாராளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்பட்டது.
எனினும், COVID 19 நோய்த்தொற்று காலப் பகுதியினுள் ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு உலக வங்கி, ஐரோப்பா சங்கம் மற்றும் ஐக்கிய அமெரிக்க குடியரசு உட்பட சர்வதேச அமைப்புக்கள் மற்றும் பல நாடுகளின் மூலம் நிதி மற்றும் வைத்திய நன்கொடைகள் கிடைக்கப் பெற்றன.
எனினும், அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள குறித்த நிதி மற்றும் ஏனைய உதவிகள் எந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து வெளிப்படையாக பகிரங்கப்படுத்துவதற்கு அரசாங்கம் தவறியுள்ளது.
MCC ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவீர்களா? இல்லையா? என்பது தொடர்பில் வெளிப்படையாக தமது நிலைப்பாட்டை அறிவிக்குமாறு அரசாங்கத்திடம் ஐக்கிய தேசிய கட்சி கேட்டுக் கொள்வதுடன் அவ்வாறு செய்ய மறுக்கும் சந்தர்ப்பத்தில் இது தொடர்பில் அரசாங்கத்தின் இறுதி தீர்மானம் என்ன என்பது தொடர்பில் உடனடியாக நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி சுட்டிக்காட்டுகின்றது.
ஊடகப் பிரிவு
ஐக்கிய தேசிய கட்சி
Comments (0)
Facebook Comments (0)