முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாரூக் காலமானார்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் யூ.எல்.எம்.பாரூக், இன்று (06) காலை காலமானார்.
சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த அவர் தனது 80 ஆவது வயதில் காலமானார். அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் இன்று மாலை 4 மணிக்கு கன்னத்தோட்டையில் இடம்பெற்றது.
சப்ரகமுவ மாகாணத்தில், கேகாலை மாவட்டத்தில், ருவன்வெல்ல தேர்தல் தொகுதியில் கன்னத்தோட்டையைச் சேர்ந்த மறைந்த யூ.எல்.எம்.பாரூக் ஆரம்பத்தில் கிராம சபையினூடாக நேரடி அரசியலில் பிரவேசித்தார்.
கேகாலை மாவட்ட அபிவிருத்தி சபையிலும் உறுப்பினராக இருந்துஇ பின்னர் மறைந்த பி.சி.இம்புலான ஆளுநராக நியமிக்கப்பட்டதன் காரணத்தினால் பொது மக்களின் அமோக ஆதரவுடன்இ வெறுமனே மூவாயிரம் முஸ்லிம் வாக்காளர்களையே கொண்டிருந்த ருவன்வெல்ல தேர்தல் தொகுதியை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் நிலைக்கு உயர்ந்தார்.
போக்குவரத்து இராஜாங்க அமைச்சராக இருந்தபோது அவர் நாடளாவிய ரீதியில் சேவையாற்றியதை மக்கள் இன்றும் சிலாகித்துப் பேசுகின்றனர்.இலங்கை போக்குவரத்து சபையின் தலைவராகவும் அவர் சிறிது காலம் செயற்பட்டிருந்தார்.
அன்னாரின் சேவைகளை பாராட்டி எழுதப்பட்ட 'யுகப் புரட்சியொன்றின் மூன்று கோரளை அபிமானம்' என்ற நூலின் வெளியீட்டு நிகழ்வு சில வருடங்களுக்கு முன்னர் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
கேகாலை மாவட்ட முஸ்லிம் கல்வி அபிவிருத்தி சங்கத்திலும் அவர் பிரதான பங்கு வகித்தார். அவர் மக்கள் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த நிலையில் 'யூ.எல்.எம்.பாரூக் மன்றம்' என்ற ஓர் அமைப்பு 2015ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தில் கூட்டிணைக்கப்பட்டது.
மறைந்த யூ.எல்.எம்.பாரூக், சாதாரண பொது மக்களுடன் மிகவும் நெருங்கிப் பழகி வந்தது அவரது சிறப்பியல்புகளில் ஒன்றாகும். இவரின் மறைவினையொட்டி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான ரவூப் ஹக்கீம் அனுதாப செய்தியொன்றினை வெளியிட்டுள்ளார்.
Comments (0)
Facebook Comments (0)