'ஜோசப் ஸ்டாலினை கைது செய்தமையானது, அரச அடக்குமுறை தொடர்ச்சியின் நீட்சியாகும்'
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் பிரபல சமூக ஆர்வலருமான ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டமையானது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் கருத்துரிமை உட்பட அடிப்படை உரிமைகள்மீதான அடக்குமுறையின் நீட்சி எனக் கருதும் சுதந்திர ஊடக இயக்கம் குறித்த கைது நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கின்றது.
இது தொடர்பில் சுதந்திர ஊடக இயக்கத்தின் ஏற்பட்டாளர் லசந்த டி சில்வா மற்றும் செயலாளர் ஹனா இப்ராஹீம் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"ஆகஸ்ட் 03 ஆம் திகதி மாலை, கொழும்பில் உள்ள இலங்கை ஆசிரியர் சங்க அலுவலகத்தில் வைத்துப் காவல்துறை வாகனத்தில் வந்த பொலிஸ் குழுவினர் அலுவலகத்தைச் சுற்றிவளைத்து அவரைக் கைது செய்துள்ளனர்.
மே மாதம் 28ஆம் திகதி நீதிமன்ற உத்தரவை மீறிப் போராட்டத்தில் ஈடுபட்டமையே கைதுக்கான காரணம் என்பதாக பொலிஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அதே நேரத்தில், குறித்த போராட்டத்தில் கலந்துகொண்ட முன்னணி செயற்பாட்டாளரான சமன் ரத்னப்பிரிய இரண்டு நாட்களுக்கு முன்னர் தொழிற்சங்க பணிப்பாளர் நாயகமாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டமை இங்கு நகைச்சுவைக்குரிய காரணமாகத் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
முன்னாள் ஜனாதிபதி உட்பட அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்ட பெருமளவிலான நபர்களைப் பொலிஸார் அண்மையில் கைது செய்துள்ளனர். மேலும் ஊடகவியலாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் பலர் விசாரணைக்காகக் குற்றவியல் விசாரணைத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
அரசாங்கத்தை விமர்சித்த குற்றச்சாட்டின் பேரில் ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதரவுக்கு எதிராகவும் நீதிமன்றில் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளன.
பல தடவைகள் காலிமுகத்திடல் போராட்ட பூமியை அகற்றுமாறும் மற்றும் போராட்டங்களைத் தடுக்குமாறும் நீதிமன்றத்திடம் கோரி அது மறுக்கப்பட்ட போதிலும், காலிமுகத்திடல் போராட்டக்காரர்களுக்குக் குறித்த இடத்திலிருந்து வெளியேறுமாறு கோட்டை காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அத்துடன், ஜூலை 22ஆம் திகதி அதிகாலை காலிமுகத்திடல் போராட்டக்களப் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் செய்திகளை வெளியிட்டு வந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் குழுமீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல் தொடர்பில் இதுவரை முறையான விசாரணை நடத்தப்படவில்லை என்பதுடன் குறித்த தாக்குதலுக்கு இடைக்காலப் படையினர் உபயோகிப்பட்டுள்ளதாகப் பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளன.
கடந்த ஜூலை மாதம் 9 ஆம் திகதி பிரதமரின் இல்லத்திற்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை அறிக்கையிட்டுக்கொண்டிருந்த சிரச ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டதுடன், குறித்த தாக்குதல் மனித உரிமை மீறல் எனவும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொமேஷ் லியனகே அதற்கு முழுப் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.
மேலும் முகமூடியுடன் கூடிய சீருடை காரணமாகக் குற்றவாளிகளை அடையாளம் காண முடியாமல் போனதை அவதானித்த ஆணைக்குழு, முகமூடி அணிந்த சீருடையை சிவில் பணிகளுக்குப் பயன்படுத்தக் கூடாது என ஆணைக்குழு, பொலிஸ்மா அதிபரிற்கு பரிந்துரை செய்துள்ளது.
சமூக ஊடகங்களில் மக்கள் போராட்டம்குறித்து செய்தி வெளியிட்ட பிரித்தானிய கடவுச்சீட்டு கொண்ட சமூக ஊடக ஆர்வலர் ஒருவரின் கடவுச்சீட்டை, வீசா நிபந்தனைகளை மீறியதாகக் குற்றம் சாட்டி ஆகஸ்ட் 2 ஆம் திகதி கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
பதவியேற்ற உடனேயே, தற்போதைய ஜனாதிபதி அவசரகாலச் சட்டத்தை அறிவித்தார், அதன் காரணமாக கருத்துகளை வெளிப்படுத்தும் உரிமையின் ஒரு பகுதியாகக் காணப்பட்ட போராட்டம் மேற்கொள்ளும் உரிமை உட்பட அடிப்படை உரிமைகளை மீறும் விதமாக உத்தரவுகள் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை பிரஜைகள் தமது அடிப்படை உரிமைகள் மற்றும் இறையாண்மைக்காக மிகுந்த ஆர்வத்துடன் செயற்பட்டு அந்த உரிமைகளை முன்னெப்போதையும் விட ஜனநாயக ரீதியில் வெற்றிபெறுவதற்காக முயற்சித்து வரும் இவ்வேளையில், அரசாங்கத்தின் இந்த அடக்குமுறை நடவடிக்கையானது ஜனநாயக விரோத சர்வாதிகார இலக்கை நோக்கி நகர்வதாகவே சுதந்திர ஊடக இயக்கம் கருதுகின்றது.
சர்வதேச அளவில் நாட்டை அபகீர்த்திற்கு உட்படுத்தி, தற்போது நிலவும் நெருக்கடியை மேலும் அதிகரிக்கச்செய்யும் கண்மூடித்தனமான செயற்பாடாகவே இந்நடவடிக்கை காணப்படுகின்றது.
மேலும் மேற்கண்ட நடவடிக்கைகள் ஜனாதிபதி தனது சிம்மாசன உரையில் குறிப்பிட்டுள்ள கருத்துக்களுக்கு முற்றிலும் முரணானதாகும். ஆகவே, கைது செய்யப்பட்ட ஜோசப் ஸ்டாலினை உடனடியாக விடுதலை செய்யுமாறும், கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிக்குமாறும், தன்னிச்சையான கைது உள்ளிட்ட அடக்குமுறை நடவடிக்கைகளைக் கைவிடுமாறும் நாம் ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தை வலியுறுத்திக்கொள்கின்றோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments (0)
Facebook Comments (0)