'தமிழ் நாட்டில் பிணை வழங்கப்பட்ட வெளிநாட்டு முஸ்லிம்களை தொடர்ந்தும் சிறைப்படுத்தியிருப்பது சட்டவிரோதம்'
தமிழ் நாட்டில் பிணை வழங்கப்பட்ட வெளிநாட்டு முஸ்லிம்களைப் புழல் சிறார் சிறையில் அடைத்து வைத்திருப்பது சட்டவிரோதம் என இந்தியாவின் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.
மதுரை அமர்வு விடுதலை செய்த 31 வெளிநாட்டு முஸ்லிம்களை விடுதலை செய்யாமல் புழல் விசாரணை சிறையில் தொடர்;ந்து அடைத்து வைத்திருப்பது நீதிமன்ற அவமதிப்பு எனவும் அவர் குறிப்பிட்டார்.
அனைவர் மீதான வழக்குகளை முடித்து அவர்களைத் தாய் நாட்டிற்குத் திருப்பி அனுப்ப தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பேராசிரியர் ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்தார்.
தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கூட்டமைப்பு சார்பாக நேற்று (26) வெள்ளிக்கிழமை இணைய வழியாக செய்தியாளர் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கூட்டமைப்பின் தலைவரும், ஜமாஅத்துல் உலமா சபையின் மாநில தலைவருமான மவ்லானா பி.ஏ. காஜா மொய்னுதீன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா, எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் நெல்லை முபாரக், ஒருங்கிணைப்பாளர்கள் எம் மன்சூர் காஷிபி, எம். பஷீர் அஹ்மது ஆகியோர் பங்கு கொண்டார்கள்.
இக்கூட்டத்தில் கூட்டமைப்பின் சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழகத்திற்கு ஒன்பது நாடுகளிலிருந்து வருகை புரிந்த 12 பெண்கள் உள்ளிட்ட 129 நபர்கள் 15 வெவ்வேறு காவல் நிலையங்களில் பதிவுச் செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் சென்னை புழல் சிறையில் உள்ள சிறார் சிறையில் அடைக்கப்பட்டார்கள். பிறகு அவர்கள் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கிளை சிறைக்கு மாற்றப்பட்டார்கள்.
சைதாப்பேட்டை கிளை சிறை வெளிநாட்டினர் அடைக்கப்படுவதற்கு அறிவிக்கப்பட்ட சிறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களைப் பிணையில் விடுவிக்கக் கோரும் 12 வழக்குகளில் கைது செய்யப்பட்ட 98 வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத்தார்களுக்கு பிணை வழங்கப்பட்டது.
சென்னை மாநகராட்சி ஆணையாளரிடம் தங்கள் இருப்பிடத்தைத் தெரிவித்து விட்டு சென்னை மாநகருக்குள் தங்கியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் சொந்த பிணையில் இவர்களை விடுவிக்க நீதிமன்றங்கள் உத்தரவிட்டன.
மத்திய அரசின் வழிகாட்டும் நெறிமுறைகளுக்கு விரோதமாக புழல் சிறார் சிறையில் அடைப்பு
இவ்வாறு நீதிமன்றங்களினால் பிணை வழங்கப்பட்டவர்கள் சைதாப்பேட்டையில் உள்ள கிளை சிறையிலிருந்து சென்னை புழல் சிறை வளாகத்தில் உள்ள சிறார் சிறையில் அடைக்கப்பட்டார்கள். விசா விதிமுறைகளை மீறும் வெளிநாட்டினர்களை தடுத்து வைக்கும் சிறப்பு முகாம் எனப் புழல் சிறை வளாகத்தில் உள்ள சிறார் சிறையைத் தமிழக அரசு அறிவித்தது.
தடுப்பு அல்லது சிறப்பு முகாம்களுக்கான வழிகாட்டும் நெறிமுறைகளை உள்ளடக்கிய (Manual for Model Detention/Special Camp) கடந்த ஜனவரி 9ஆம் அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அனுப்பிவைத்துள்ளது.
இந்த வழிகாட்டும் நெறிமுறைகளில் இச்சிறப்பு முகாம்கள் சிறை வளாகத்திற்குள் அமைந்திருக்க கூடாது என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு தனி சமையல் கூடங்களில் உணவு தயாரிக்கப்பட வேண்டும் என்று வழிகாட்டும் ஏடு குறிப்பிடுகின்றது.
ஆனால் பிணையில் விடுவிக்கப்பட்ட வெளிநாட்டு முஸ்லிம்களுக்குப் புழல் சிறையிலிருந்து கைதிகளுக்கு அளிக்கப்படும் உணவு வழங்கப்படுகின்றது. போதுமான இட வசதியும், காற்று மற்றும் வெளிச்சமும் அங்கு இருக்க வேண்டும் என்றும் வழிகாட்டு ஏடு குறிப்பிடுகின்றது.
ஆனால் 50 நபர்கள் தங்கக் கூடிய இடத்தில் எட்டு பெண்கள் உட்பட 98 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். சுருக்கமாக தடுப்பு அல்லது சிறப்பு முகாம்களுக்கு மத்திய அரசு வகுத்துள்ள அனைத்து வழிமுறைகளையெல்லாம் மீறும் வகையில் கடந்த 60 நாட்களுக்கும் மேலாக வெளிநாட்டு முஸ்லிம்கள் புழல் சிறை வளாகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.
மதுரை அமர்வின் தீர்ப்பை அமுல்படுத்துக
சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு கடந்த ஜூன் 12 அன்று எஞ்சிய 4 பெண்கள் உட்பட 31 வெளிநாட்டினர் தொடர்பான வழக்கில் வழங்கிய தீர்ப்பில் அவர்களுக்கும் பிணை வழங்கியதுடன் அவர்கள் புழல் சிறையில் உள்ள சிறப்பு முகாமில் வைப்பது சரியில்லை என்றும் எனவே அவர்களைச் சென்னை வண்ணார பேட்டையில் உள்ள அரபிக் கல்லூரியிலோ அல்லது வேறு நல்ல இடத்திலோ அவர்களைத் தங்க வைப்பதை அரசு பரிசீலிக்கலாம் என்றும் அவர்கள் கொரோனா பரப்பியதற்கான ஆதாரம் இல்லை என்றும் விசா விதிமுறை மீறலுக்காக போதுமான அளவு தண்டனையை அனுபவித்து விட்டார்கள் என்றும் இதனை ஒத்துக்கொண்டு அவர்கள் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்தால் அவர்கள் வழக்கை முடித்து அவர்களை தங்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைப்பதற்குத் தமிழக அரசு உதவிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு தீர்ப்பு வழங்கிய பிறகும் வழக்கை முடித்து விடுதலைச் செய்யப்பட்ட 31 வெளிநாட்டினரை புழல் விசாரணை சிறையில் அடைத்துள்ளது. இது நீதிமன்ற அவமதிப்பாகும்.
31 வெளிநாட்டு முஸ்லிம்கள் வழக்கில் மதுரை அமர்வு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் 98 வெளிநாட்டினர் மீதான வழக்குகளையும் முடித்து வைத்து அவர்கள் அனைவரும் தமது சொந்த நாட்டிற்குத் திரும்பும் நடவடிக்கைகளுக்குத் தமிழக அரசு உதவிட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்ந்து புழல் சிறை வளாகத்தில் 129 வெளிநாட்டு முஸ்லிம்களை வழிகாட்டும் நெறிமுறைகளுக்கு விரோதமாக அடைத்து வைத்திருப்பதைக் கைவிட்டு அவர்கள் தாய்நாடு திரும்பும் வரையில் வண்ணார பேட்டை ஜாமிஆ காசிமியா அரபிக் கல்லூரி வளாகத்தில் அவர்கள் தங்குவதற்கும் தமிழக அரசு ஆவணச் செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.
Comments (0)
Facebook Comments (0)