மேல் மாகாணத்தை மையமாகக் கொண்டு நகர அழகுபடுத்தல் வேலைத்திட்டம்

மேல் மாகாணத்தை மையமாகக் கொண்டு நகர அழகுபடுத்தல் வேலைத்திட்டம்

மேல் மாகாணத்தை மையமாகக் கொண்டு, நகர அழகுபடுத்தல் வேலைத்திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கு ஜனாதிபதி அலுவலகத்தின் விசேட பணிகள், சுற்றாடல் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

முதல் கட்டமாக, கொழும்பு மாவட்டத்தை மையமாகக் கொண்டு, நகர அழகுபடுத்தல், வீதித் துப்பரவு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்ததாக, களனி பொலிஸ் பிரிவில் சுத்திகரிப்புப் பணிகளை ஆரம்பிப்பது குறித்த முதற்கட்ட கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தின் விசேட பணிகள், சுற்றாடல் பிரிவின் பணிப்பாளர் ரொஷான் ராஜபக்ஷ மற்றும் களனித் தொகுதிக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ரொஷான் டயஸ் ஆகியோரின் தலைமையில் நேற்று (28) பேலியகொடை பீபல்ஸ் தேவாலய மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

உள்ளூராட்சி நிறுவனங்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபை, நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபை ஆகிய நிறுவனங்களின் அதிகாரிகளும் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

களனி கங்மிடியாவத்தைக்குச் சொந்தமான தாழ் நிலங்களில் வெள்ள நிலைமைகளை கட்டுப்படுத்தல், பேலியகொடை, கிரிபத்கொடை, கடவத்தை பொலிஸ் பிரிவுகளுக்குச் சொந்தமான கொழும்பு – கண்டி பிரதான வீதியில் சுத்திகரிப்பு, சுற்றாடல் அழகுக்குத் தடையாகவுள்ள விளம்பரப் பலகைகள் குறித்து கவனம் செலுத்துதல், நகர சபை மற்றும் பிரதேச சபைகளின் பங்களிப்புடன் பொலிஸாரின் கண்காணிப்புடன் மக்களின் ஒத்துழைப்பைப் பெற்று நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது.