மனித வளங்கள் அபிவிருத்தி புலமைப்பரிசில் திட்டத்துக்காக ஜப்பான் 488 மில்லியன் ரூபா உதவி
இலங்கையின் அரச துறையில் பணியாற்றும் அதிகாரிகளின் திறன் மேம்பாட்டுக்காக முன்னெடுக்கப்படும் மனித வளங்கள் அபிவிருத்தி புலமைப்பரிசில் (JDS) திட்டத்துக்காக ஜப்பானிய அரசாங்கம் 488 மில்லியன் ரூபாயை நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளது.
இலங்கையின் அரச துறையைச் சேர்ந்த இளம் நிறைவேற்று அதிகாரிகளை, ஜப்பானின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பயிற்றுவிப்பதற்கும், தமது துறைகளில் எதிர்காலத்தில் தேசிய தலைவர்களாக தகைமை பெறுவதற்கும் அவசியமான திறன்களை பெற்றுக் கொள்ளவும் உதவியாக 271 ஜப்பானிய யென்கள் (அண்ணளவாக ரூ. 488 மில்லியன்) தொகையை ஒதுக்கியுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், 17 அரச அதிகாரிகளுக்கு 2 வருட கால மாஸ்டர் அல்லது PhD கற்கையை 2022 முதல் 2024 ஆம் ஆண்டு வரை தொடர்வதற்கு வாய்ப்பளிக்கப்படும்.
பொதுக் கொள்கை, பொது நிதி, பொருளாதாரம், வியாபார முகாமைத்துவம், சூழல் முகாமைத்துவம், இடர் முகாமைத்துவம் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான பிரிவுகளில் இந்தப் பட்டப்படிப்புகள் அமைந்திருக்கும்.
இந்த செயற்திட்டம் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கையில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் சுகியாமா அகிரா மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆடிகல ஆகியோர் இன்று (29) வியாழக்கிழமை கைச்சாத்திட்டனர்.
இந்நிகழ்வு நிதி அமைச்சில் இடம்பெற்றது. ஜப்பானின் நீண்ட கால நண்பர் எனும் வகையில், திறன் கட்டியெழுப்பல், மனித வளங்கள் விருத்தி தொடர்பான நிகழ்ச்சிகளை முன்னெடுத்து, அதனூடாக நாட்டில் நிலைபேறான பொருளாதார வளர்ச்சிக்கு நீண்ட கால அடிப்படையில் பங்களிப்பு வழங்குவது தொடர்பில் ஜப்பான் அதிகளவு கவனம் செலுத்தி வருகின்றது.
2010 ஆம் ஆண்டில் JDS செயற்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது முதல் சுமார் இலங்கையின் சுமார் 171 அரச துறை அதிகாரிகளுக்கு புலமைப்பரிசில் வழங்கப்பட்டுள்ளது. தனிநபர் திறனைக் கட்டியெழுப்புவதில் மாத்திரம் இந்தச் செயற்திட்டம் பங்களிப்பு வழங்குவது மாத்திரமன்றி, இலங்கையின் அரச துறையின் நிறுவனசார் துறையைக் கட்டியெழுப்புவதற்கும் பங்களிப்பு வழங்கும்.
இது இலங்கையின் வளர்ச்சிக்கும் சுபீட்சத்துக்கும் சிறந்த அடித்தளமாக அமைந்திருக்கும். ஜப்பானில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் தாம் மேற்கொள்ளும் கல்விசார் வலையமைப்புகள் மற்றும் சமூக செயற்பாடுகள் போன்றவற்றினூடாக, இரு நாடுகளுக்குமிடையிலான பரஸ்பர உறவுகளை மேம்படுத்த JDS அங்கத்தவர்கள் பங்களிப்பு வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Comments (0)
Facebook Comments (0)