மெலிபன் டெக்ஸ்டைலினால் 300 மில்லியன் ரூபா செலவில் சிறுநீரக சத்திர சிகிச்சை பிரிவு நிர்மாணம்
E.A.M. மெலிபன் டெக்ஸ்டைல் தனியார் நிறுவனத்தின் பூரண நிதியில் இலங்கை தேசிய வைத்தியசாலை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடிக்களைக் கொண்ட புதிய சிறுநீரக சத்திர சிகிச்சையியல் மற்றும் சிறுநீரகவியல் பிரிவு இன்று (29) வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் புதிய கட்டிடம் திறந்துவைக்கப்பட்டது.
இலவச சுகாதார சேவையின் சிறந்த பிரதிபலன்களை இலங்கை வாழ் மக்களுக்கு கிடைக்க செய்யும் உன்னதமான நோக்கத்தில் E.A.M. மெலிபன் டெக்ஸ்டைல் தனியார் நிறுவனத்தினால் இந்த மூன்று மாடிக் கட்டிடம் நிறுவப்பட்டுள்ளது.
சுமார் 300 மில்லியன் ரூபாய் செலவில் 13 கட்டில்களை கொண்ட தீவிர சிகிச்சை பிரிவை உள்ளடக்கியதாக இந்த கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. புதிய சிறுநீரக சத்திர சிகிச்சையியல் மற்றும் சிறுநீரகவியல் பிரிவு கட்டிடத்தின் நினைவு பலகை பிரதமரினால் இதன்போது திறந்துவைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி, சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் எஸ்.எச். முணசிங்க, சுற்றாடல் துறை அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜயசிங்க, தேசிய வைத்தியசாலையின் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் டப்ளியூ.கே. விக்ரமசிங்க, E.A.M. மெலிபன் டெக்ஸ்டைல் தனியார் நிறுவனத்தின் தலைவர் இல்யாஸ் அப்துல் கரீம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
Comments (0)
Facebook Comments (0)