முகுது மஹா விகாரைக்காக கடற்படை சோதனைச் சாவடி அமைக்குமாறு பாதுகாப்பு செயலாளர் உத்தரவு
பொத்துவில் முகுது மஹா விகாரையின் வளாகத்தில் கடற்படை சோதனைச் சாவடியொன்றினை அமைக்குமாறு பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன இன்று (14) வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
பழமை வாய்ந்த இந்த விகாரை மற்றும் அதன் நிலம் ஆகியவற்றினை பாதுகாக்கும் நோக்கிலேயே பாதுகாப்பு செயலாளரினால் கடற் படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொத்துவில் முகுது மஹா விகாரையில் விசேட கூட்டமொன்று இன்று இடம்பெற்றது. கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, ; கடற் படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா, பதில் பொலிஸ் மா அதிபர் விக்ரமரத்ன மற்றும் அம்பாறை மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போதே, விகாரைக்கு சொந்தமான நிலங்கள் வலுக்கட்டாயமாக அபகரிப்பதனை தடுக்கும் பொருட்டு கடற்படை சோதனைச் சாவடியொன்று நாளை (15) வெள்ளிக்கிழமை முதல் விகாரையின் வளாகத்தில் செயற்படும் என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் கூறினார்.
"இந்த விகாரைக்கு 72 ஏக்கர் நிலம் சொந்தமானது என்பது தற்போது தெரியவந்துள்ளது. ஆனால் 14 ஏக்கர் மட்டுமே மீதமுள்ளது. விகாரைக்கு சொந்தமான அனைத்து நிலங்களும் மீட்கப்படும். விகாரையிலிருந்து குறைந்தது ஒரு துண்டு மணலையாவது வாங்க யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள்" என்றும் பாதுகாப்பு செயலாளர் இதன்போது குறிப்பிட்டார்.
இந்த விகாரையின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கடற்படை மற்றும் பொலிஸார் ஆகியோர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் பாதுகாப்பு செயலாளர் அறிவுறுத்தினார்.
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்துடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினை அடுத்த வாரம் சந்தித்து இந்த விகாரையின் எதிர்கால நடவடிக்கை குறித்து கலந்துரையாடவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.
இதேவேளை, தீகவாபி விகாரைக்கு சொந்தமான ஒரு பெரிய நிலப் பகுதி வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்றும் பாதுகாப்பு செயலாளர் இந்த கூட்டத்தில் மேலும் கூறினார்.
இதன்போது, விகாரையின் வளாகத்தில் சிறப்பு ஆய்வு சுற்றுப் பயணமொன்றை கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன, இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா, பொலிஸ் மா அதிபர் மற்றும் ஆய்வாளர் சந்தனா விக்ரமரத்ன உள்ளிட்ட தரப்பினர் மேற்கொண்டனர்.
ஆளுநர் ஊடகப் பிரிவு
Comments (0)
Facebook Comments (0)