இலங்கையுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்: சவூதி தூதுவர்

இலங்கையுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்: சவூதி தூதுவர்

இலங்கையுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம் என  இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானி தெரிவித்தார்.

சவூதி அரேபியாவின் ஸ்தாபக தினம் இன்று (22) சனிக்கிழமை கொண்டாடப்படுகின்றது. இதனையொட்டி இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"சவூதி அரேபியாவின் ஸ்தாபக தினத்தை நாம் கொண்டாடும் வேளையில், நமது கடந்த காலத்தை கொண்டாடுவது மட்டுமல்லாமல், சவூதி அரேபியாவின் சாணக்கியமிக்க தலைமையின் கீழ் அனைத்தையும் உள்ளடக்கிய, நிலையான, புதுமையான மற்றும் வளமான ஒரு பிரகாசமான எதிர்காலத்தையும் மனதிற் கொண்டிருக்கிறோம்.

இன்று, சவூதி அரேபியா ஒரு சிறந்த மற்றும் இதயபூர்வமான நிகழ்வைக் கொண்டாடுகிறது, இது ஆண்டு தோறும் பெப்ரவரி  22ஆம் திகதி இடம்பெறும் ஸ்தாபக தினமாகும்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாள், கி.பி 1727ஆம் ஆண்டு இமாம் முஹம்மது பின் சவூத் மூலம் முதன் முதலாக சவூதி அரேபிய தேசம் ஸ்தாபிக்கப்பட்டதை எம் மனக்கண் முன் கொண்டு வருகிறது. மேலும், 1824ஆம் ஆண்டு, இமாம் துர்கி பின் அப்துல்லா பின் முஹம்மது பின் சவூத் இரண்டாவது சவூதி அரசை நிறுவி, ரியாத்தை அதன் தலைநகராகத் தேர்ந்தெடுத்தார்.

1902ஆம் ஆண்டில், மன்னர் அப்துல் அஸீஸ் பின் அப்துல் ரஹ்மான் ரியாத்தை தலைநகராகக் கொண்டு மூன்றாவது சவூதி அரசை நிறுவினார். 1932ஆம் ஆண்டில், சவூதி அரேபியா இராச்சியம் ஒன்றிணைக்கப்பட்டது, மேலும் நீதி, ஒற்றுமை மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றின் பெறுமானங்களை சுமந்து செல்லும் ஒரு சிறந்த தேசத்தின் பயணம் தொடங்கியது.

ஸ்தாபக தினம் என்பது நமது தேசிய நாட்காட்டியில் ஒரு நாள் மட்டுமல்ல, மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலான வளமான கலாசார மரபின் கதையும் வலுவான மற்றும் உறுதியான தேசத்தைக் கட்டியெழுப்ப பாடுபட்ட விசுவாசமான மனிதர்களால் வழிநடத்தப்பட்ட போராட்டத்தின் கதையுமாகும்.

இரண்டு புனித ஸ்தலங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத் மற்றும் அவரது நம்பிக்கைக்குப் பாத்திரமான பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத் ஆகியோரின் தலைமையில் நமது சாணக்கியமிக்க தலைமையின் கீழ், எதிர்காலத்தை நோக்கி சீராக நகரும் ஒரு நாட்டை நிறுவிய நமது ஆழமான வேர்களைப் பற்றி நாம் பெருமை கொள்ளும் நாள் இதுவாகும்.

இந்த மகத்தான சந்தர்ப்பத்தில், அனைத்து மட்டங்களிலும் சவூதி அரேபியா செய்த சாதனைகளின் பெருமையை புதுப்பிக்கிறோம். எமது நாடு முன்னேற்றத்திற்கும் மற்றும் செழிப்புக்குமான உலகளாவிய முன்மாதிரியாக மாறியுள்ளது மட்டுமன்றி விரிவான மற்றும் நிலையான அபிவிருத்தியை அடைய முயலும் சவூதி அரேபியாவின் தொலைநோக்குப் பார்வை 2030 மூலம் ஒரு இலட்சியப் பார்வையை பிரதிபலிக்கும் ஒரு உறுதியான அடித்தளமாகவும் மாறியுள்ளது.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, இரண்டு புனித ஸ்தலங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ், பட்டத்து இளவரசர் மற்றும் பிரதமர் மாட்சிமை தங்கிய இளவரசர் முகமது பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ், மற்றும் தாராள மனப்பான்மை கொண்ட சவூதி மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அதன் சாணக்கியமிக்க, சாதுரியமான தலைமையின் கீழ் சவூதி அரேபியா மென்மேலும் முன்னேற்றமடையவும், அபிவிருத்தி அடையவும் வேண்டுமென வாழ்த்துகிறேன். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, இலங்கை குடியரசுக்கும் அதன் சிநேகபூர்வமான மக்களுக்கும் எங்கள் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அவர்களுடன் எங்களுக்கு நெருங்கிய வரலாற்று உறவுகள் உள்ளன. மேலும், நமது இரு நாடுகள் மற்றும் இரு நாட்டு மக்களின் நலனுக்காக அனைத்துத் துறைகளிலும் இந்த உறவுகளை வலுப்படுத்த நாங்கள் இணைந்து பணியாற்றுவதில் பெருமைகொள்கிறோம்" என்றார்.