தென்னை மரங்களை வெட்டுவதை தடுக்க சட்ட நடவடிக்கை
எதிர்வரும் சில மாதங்களில் மரங்களை வெட்டுதல் சட்டத்தில் தென்னை மரங்களையும் உட்படுத்தி தென்னை மரங்களை வெட்டுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக பெருந்தோட்ட அமைச்சர் வைத்திய கலாநிதி ரமேஷ் பத்திரண பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பொருத்தோட்டம் தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் அவர் இதனை குறிப்பிட்டார்.
காணிகளை துண்டுகளாக பிரித்து விற்பனை செய்யும் போது பாரியளவில் தென்னை மரங்கள் வெட்டப்படுவதாகவும், தென்னை மரங்களை பாதுகாப்பதற்கு இந்தக் காலகட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான உபுல் மஹேந்திர ராஜபக்ஷ மற்றும் ஹெக்டர் அப்புஹாமி ஆகியோர் தெரிவித்ததுடன், அதற்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் இதனை தெரிவித்தார்.
விசேடமாக, காணிகளை துண்டுகளாக பிரித்து விற்பனை செய்யும் போது, காணிகளை பிரிக்கும் முன்னரே வர்த்தகர்கள் தென்னை மரங்களை அகற்றுவதாகவும், இதனால் விசாரணை அலுவலர்களால் இவை தென்னை மரங்கள் அற்ற கணிகளாக இனங்காணப்படுவதாகவும், இதனால் இங்கு மோசடி நடைபெறுவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் அமைச்சின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் எதிர்வரும் சில மாதங்களில் மரங்களை வெட்டுதல் சட்டத்தில் தென்னை மரங்களையும் இணைத்து சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அதேபோன்று, கல்ஓயா பெருந்தோட்ட நிறுவனத்தின் தனியார் துறை முதலீட்டின் இலாபவீதம் மற்றும் அரசுக்கு கிடைக்க வேண்டிய தொகை கிடைக்கப்பெறாமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே குழுவின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.
விசேடமாக இந்த நிறுவனத்துக்கு உயர்ந்த வட்டியில் நிதி பெற்றுக்கொள்ளும் போது மற்றும் பதவிகளுக்கு சம்பளம் வழங்கும் போது பாரிய முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும் இது தொடர்பில் விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் கணக்காய்வொன்றை நடத்தி அறிக்கையொன்றை வழங்குமாறு ஏற்கனவே பரிந்துரை செய்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர பதிலளித்தார். விசேடமாக அரச வளங்களை தவறாகப் பயன்படுத்தியுள்ளமை இங்கு புலப்படுவதாகவும் இது குறித்து விளக்கமளிக்க வேண்டியது அவசியம் என்றும் அமைச்சர் ரமேஷ் பத்திரண மேலும் தெரிவித்தார்.
உள்நாட்டு மருந்து வகைகளின் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரேரித்ததுடன் அது தொடர்பில் தற்பொழுது நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அதனை மேலும் விருத்தி செய்ய நடடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, பயிரிடப்படாதா காணிகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியதுடன், பயன்படுத்தப்படாத காணிகளை அரசுக்கு சொந்தமாக்குவது தொடர்பில் கவனம் செலுத்துவதாக அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
கந்தளாய் சீனி தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பிலும் தற்பொழுது இந்த காணிகளில் குடியேறியுள்ளவர்களுக்கு காணிகள் வழங்குவது பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது. மேலும் வட மாகாணத்தில் பனை மற்றும் பேரீச்சம்பழ உற்பத்தியை விருத்தி செய்தல், வடக்கில் கள் உற்பத்தியை விருத்தி செய்தல், முள்ளுத் தேங்காய் உற்பத்தியை குறைத்தல் மற்றும் சிறிய தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கான மானியங்களை அதிகரிப்பது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் கௌரவ இராஜாங்க அமைச்சர்களான அருந்திக்க பெர்னாண்டோ, ஜானக வக்கும்புர மற்றும் கனக ஹேரத், பாராளுமன்ற உறுப்பினர்களான உதயன கிரிந்திகொட, வீரசுமன வீரசிங்க, சாந்த பண்டார, மதுர விதானகே, சமன்பிரிய ஹேரத், ஹெக்டர் அப்புஹாமி, சம்பத் அத்துகோரல, சுதத் மஞ்சுள, ரோஹன திசாநாயக்க, கபில அத்துகோரல, உபுல் மஹேந்திர ராஜபக்ஷ, மஞ்சுளா திசாநாயக்க, முதிதா டி. சொய்சா, வேலு குமார், சார்ள்ஸ் நிர்மலநாதன், ராஜிகா விக்ரமசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
Comments (0)
Facebook Comments (0)