முடிசூடிய மன்னர் 3ஆம் சார்ள்ஸ்
லண்டனிலிருந்து றிப்தி அலி
"நான் ஒரு தேசப்பற்றாளர். அது மாத்திரமல்லாமல், மன்னரின் பெரிய ரசிகனும் கூட. அதனால் மன்னர் முடி சூட்டு விழாவினை பார்வையிட இரண்டரை மணி நேர ரயில் பயணத்தினை மேற்கொண்டு லண்டன் வந்துள்ளேன்" என 63 வயதான மார்ட்டின் ஹேல்வர் தெரிவித்தார்.
மன்னரின் முடி சூட்டு விழாவினை எவரும் விமர்சிக்கலாம் ஆனால், இப்பாரம்பரியம் எமது நாட்டுக்கு மிகவும் அவசியமானதொன்றாகும். இதன் காரணமாகவே மன்னரின் முடி சூட்டும் ஊர்வலத்தினை பார்வையிடுவதற்காகவே பல மணித்தியாலங்கள் வீதியில் காத்துக் கொண்டிருக்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மார்ட்டின் ஹேல்வர் போன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் கடந்த 6ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற மன்னர் மூன்றாம் சார்ள்ஸின் முடி சூட்டு விழாவினை பார்வையிடுவதற்காக லண்டன் மாநகரில் ஒன்று கூடியிருந்தனர்.
சுமார் 70 வருடங்களுக்கு பின்னர் இடம்பெற்ற இந்தநிகழ்வு ஐக்கிய இராச்சிய மக்களின் திருவிழாவாக காணப்பட்டது. இதற்காக வேண்டி கடந்த 08ஆம் திகதி திங்கட்கிழமை விடுமுறை தினமாகவும் அந்நாட்டு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டது.
1953ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சியத்தின் மகாராணியாக முடி சூடப்பட்ட இரண்டாம் எலிசெபத் கடந்த வருடம் செப்டம்பர் 8ஆம் திகதி தனது 96ஆவது வயதில் உயிரிழந்தார். அதனையடுத்து ஐக்கிய இராச்சியத்தின் 13ஆவது மன்னராக அவரது மூத்த மகன் மூன்றாம் சார்ள்ஸ் அறிவிக்கப்பட்டார்.
இந்த அறிவிப்பினை அடுத்து மன்னர் சாள்ஸிற்கான முடிசூட்டும் நிகழ்வு கடந்த வார இறுதியில் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் இடம்பெற்றது. ஐக்கிய இராச்சியத்தின் வரலாற்றில் மன்னராவதற்கு அதிககூடிய வருடங்கள் காத்திருந்த மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் ஆவார்.
இந்த நிகழ்வினை முன்னிட்டு லண்டன் உட்பட ஐக்கிய இராச்சியத்தின் பல நகரங்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அது மாத்திரமல்லாம் வரலாற்று முக்கியத்துவமிக்க இந்த நிகழ்வினை பார்வையிடுவதற்காக ஆயிரக்கணக்கானோர் லண்டன் நகருக்கு வருகை தந்திருந்தனர்.
அது மாத்திரமல்லாமல், மன்னரின் ஊர்வலத்தினை கண்களினால் பார்வையிடுவதற்காக சிறுவர்கள், முதியவர்கள் என்ற வேறுபாடின்றி சுமார் 12 மணித்தியாலங்களுக்கு மேல் வீதிகளில் காத்திருந்ததை அவதானிக்க முடிந்தது.
எனினும், மன்னர் முடி சூட்டு நிகழ்விற்கு எதிர்ப்புத் தெரிவித்து லண்டனின் சில இடங்களில் ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றன. குறித்த ஆர்ப்பாட்டங்களில் அசம்பாவிதங்கள் ஏற்படுத்த முயற்சித்தோர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டங்கள் காரணமாக பொலிஸார் லண்டன் நகரில் பலத்த பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தாத வண்ணமே இந்த முடி சூட்டும் நிகழ்வு இடம்பெற்றது.
மன்னரின் உத்தியோகபூர்வ வாசஸ்தளமான வக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து முடி சூட்டு நிகழ்வு இடம்பெற்ற வெஸ்மினிஸ்டர் பேரவை மன்னரும், அவரது மனைவியான ராணி கமிலாவும் குதிரை வண்டியில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதனால் குறித்த பிரதேசத்திற்கு உட்பட்ட சில வீதிகள் மாத்திரமே மூடப்பட்டிருந்தன. இதேவேளை, "அரசர் சட்டத்தையும், இங்கிலாந்து திருச்சபையையும் நிலைநிறுத்துவேன்" என்று சார்ள்ஸ் உறுதிமொழி ஏற்றார். இதனைத் தொடர்ந்து தங்க அங்கி அணிவித்து, அரியணையில் அமரவைக்கப்பட்ட மன்னர் சார்ள்ஸுக்கு மகுடம் சூட்டப்பட்டதுடன், கையில் செங்கோலும் அளிக்கப்பட்டது.
பிரித்தானியாவின் அரச அரியணையில், வயதான நிலையில் இருக்கும் ஒருவருக்கு மன்னர் மகுடம் சூட்டுவது, இதுவே முதல் முறையாகும் என்று கூறப்படுகிறது. இந்நிகழ்வில் ஐக்கிய இராச்சியத்தின் ராணியாக காமிலா முடி சூட்டப்பட்டார்.
இந்த முடி சூட்டு நிகழ்வில் பௌத்த, ஹிந்து, கத்தோலிக்க, இஸ்லாமிய, யூத, ஷீயா, சுன்னி எனப் பல சர்வமதத் தலைவர்கள் விசேட விருத்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.
இதற்கமைய பௌத்த சமயத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி லண்டனிலுள்ள பௌத்த விகாரையின் விகாராதிபதியான இங்கிலாந்தின் பிரதான சங்க நாயக்கர் பேராசிரியர் போகொட சீல விமல நாயக்க தேரரும் பங்கேற்றிருந்தார்.
இந்த விழாவில் 10க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடப்பட்டன. அதில் முதன் முதலாக வேல்ஸ் மொழி பாடலும் பாடப்பட்டது. ரஷ்யாவிற்கும் உக்ரைனிற்கும் இடையில் நடைபெற்று வருகின்ற போரில் ஐக்கிய இராச்சியம் தொடர்ச்சியாக உக்ரைனுக்கு ஆதரவளித்து வருகின்றது.
அது போன்று இந்த முடி சூட்டும் நிகழ்விலும் உக்ரைன் மக்களுக்கான ஒருமைப்பாட்டினை வெளிப்படுத்தும் நோக்கில் அந்நாட்டு தேசிய கொடியை ஒத்த நீல மற்றும் மஞ்சள் நிற கம்பளம் விரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரித்தானிய மக்களுக்கு இந்த நிகழ்வு எப்படி முக்கியமோ அந்த அடிப்படையில் பொதுநலவாய நாடுகளுக்கும் இந்த நிகழ்வு முக்கியமாக அமைந்திருந்தது.
பொதுநலவாய அமைப்பின் முக்கிய உறுப்பு நாடான கனடாவினைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நிகழ்வில் நேரடியாக பங்கேற்பதற்காக லண்டனுக்கு வந்திருந்தனர்.
அதுபோன்று இலங்கைக்கும் இந்த நிகழ்வு மிக முக்கியமானதொன்றாகும். 100 வருடங்களுக்கு மேல் இலங்கையினை ஆண்ட பிரித்தானியாவின் புதிய மன்னரின் அழைப்பினையேற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
இதற்கு மேலதிகமாக பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் உட்பட உலகம் முழுவதிலும் இருந்து 2,000 க்கும் அதிகமான பிரபலங்களும் விருந்தினர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இவ்வாறு வரலாற்று முக்கியத்துவமிக்க நிகழ்வினை சார்ள்ஸின் இரண்டாவது மகனான ஹரியின் மனைவி மேகன் மார்கல் மற்றும் அவரது பிள்ளைகள் புறக்கணித்திருந்தனர்.
அரச குடும்பத்துடன் மோதல் ஏற்பட்டு, இளவரசர் ஹரி மற்றும் மேகன் அரச கடமைகளை விட்டுவிட்டு, தங்கள் குழந்தைகளுடன் 2020 ஆம் ஆண்டில் அரண்மனையை விட்டுவெளியேறி, அமெரிக்காவின் கலிபோர்னியாவில் குடியேறியுள்ளனர்.
இதற்கு முக்கிய காரணம் இளவரசர் ஹரியின் மூத்த சகோதரரான இளவரசர் வில்லியம் மோதலில் ஈடுபட்டதாகவும், ஒரு முறை சண்டையின் போது, வில்லியம் தன்னை கொலரைப் பிடித்து அடித்து, தரையில் தள்ளினார் எனவும் ஹரி வெளிப்படையாக புகார் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தனது கணவருக்கு அரச குடும்பத்தில் ஏற்பட்ட அவமதிப்பை மனதில் வைத்துதான் மேகன் மற்றும் குழந்தைகள் முடி சூட்டு நிகழ்வில் பங்கேற்கவில்லை எனக் கூறப்படுகின்றது.
இதேவேளை, ஐக்கிய இராச்சியத்தின் மன்னரான சார்ள்ஸ் அறிவிக்கப்பட்டமையினால், பதவி வழியாக பொதுநலவாய நாடுகளின் தலைவரானார்.
இதற்கினங்க, மன்னர் முடி சூட்டு நிகழ்வில் பங்குபற்றுவதற்காக லண்டன் வருகின்ற பொதுநலவாய நாட்டுத் தலைவர்களுடன் சந்திப்பொன்றினை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொதுநலவாய அமைப்பின் செயலாளரின் ஊடாக மன்னரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
ஜனாதிபதி ரணிலின் வேண்டுகோளினை ஏற்று லண்டன் சென்றிருந்த பொதுநலவாய நாட்டுத் தலைவர்களை மன்னர் சார்ள்ஸ், கடந்த 5ஆம் திகதி வெள்ளிக்கிழமை சந்தித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதன்போது, மன்னர் சார்ள்ஸினை இலங்கை விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி பகிரங்கமாக அழைப்பு விடுத்தார். இளவரசாராக இருந்த போது பல தடவைகள் இலங்கைக்கு விஜயம் செய்ததைப் போன்று மன்னரானதன் பிற்பாடு ஒரு தடவையாவது சார்ள்ஸ் இலங்கை வருவார் என்ற ஆவலில் இலங்கை மக்கள் உள்ளனர்.
Comments (0)
Facebook Comments (0)