இலங்கைக்கு முன்னுதாரணமான லண்டன் மே தின நிகழ்வு
லண்டனிலிருந்து றிப்தி அலி
சர்வதேச தொழிலாளர் தினம் மே 1ஆம் திகதி உலகளாவிய ரீதியில் அனுஷ்ட்;டிக்கப்படுவது வழமையாகும். இந்த அடிப்படையில் கடந்த திங்கட்கிழமையும் உலகளாவிய ரீதியில் பல்வேறு வகையான மே தின நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்த நிகழ்வுகள் அனைத்தும் தொழிலாளர்களை இலக்கு வைத்தே இடம்பெற்றன. இதன் ஒரு அங்கமாக இங்கிலாந்தின் தலைநகரான லண்டன் நகரிலும் ஆயிரக்கணக்கானோரின் பங்குபற்றலுடனான மே தின நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த மே தின நிகழ்வு இலங்கையில் வழமையாக இடம்பெற்று வருகின்ற மே தின நிகழ்வுகளிற்கு சிறந்த முன்னுதாரணமாகக் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற் சங்கங்களின் சக்தியினை நிரூபிக்கும் வகையிலேயே இலங்கையில் மே நிகழ்வுகள் இடம்பெறுவது வழமையாகும். எனினும் லண்டன் நகரில் இடம்பெற்ற மே தின நிகழ்வு தொழிலாளர்களை இலக்கு வைத்து இடம்பெற்றதை நேரடியாக அவதானிக்க முடிந்தது.
எமது நாட்டிலுள்ள அரசியல் கட்சிகளும், தொழிற் சங்கங்களும் தனித் தனியாக மே தின ஊர்வலங்களையும், கூட்டங்களையும் நடத்துவது வழமையாகும்.
அந்த அடிப்படையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எனப் பல கட்சிகள் வௌ;வேறாக மே தின ஊர்வலங்களையும், கூட்டங்களையும் முன்னெடுத்திருந்தன.
எனினும், இங்கிலாந்திலுள்ள எந்தவொரு அரசியல் கட்சியும் மே தின ஊர்வலத்தினையோ, கூட்டத்தினையோ ஏற்பாடு செய்திருக்கவில்லை. மாறாக தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடுகின்ற அமைப்புகள் இணைந்தே மே தின ஊர்வலத்தினையும், கூட்டத்தினையும் ஏற்பாடு செய்திருந்தன.
அது மாத்திரமல்லாமல், அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றாக இணைந்து ஒரேயோரு மே தின ஊர்வலத்தினையும் கூட்டத்தினையும் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த மே தின நிகழ்வுகளில் இலங்கையர்கள், ஈரானியர்கள், இந்தியர்கள் பாகிஸ்தானியர்கள், காஷ்மீரினைச் சேர்ந்தவர்கள், துருக்கியர்கள், ஈராக்கியர்கள், போர்த்துக்கேயர்கள், பொலிவியன்கள், பலஸ்தீனர்கள் மற்றும் நைஜீரியன்கள் எனப் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டிருந்தனர். இதன் ஊடாக பல நாடுகளின் தொழிற் சங்கங்கள் மற்றும் அதன் உறுப்பினர்களுடனான உறவு ஏற்படுகின்றது.
இதில், மக்கள் விடுதலை முன்னணியின் பிரித்தானிய குழுவும் கலந்துகொண்டிருந்தது. இங்கிலாந்தின் பல பிரதேசங்களில் வாழ்கின்ற அக்கட்சியின் 200க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் இந்த மே தின நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிரான சுலோகங்கள் ஏந்தப்பட்டிருந்தன. குறிப்பாக 'தேர்தலை நடத்து', 'தொழிற்சங்கங்கள் மீதான அடக்குமுறையை நீக்கு', 'மனித உரிமையினை வலியுறுத்து', 'ஜனநாயகத்தினை மீளவும் நிலைநிறுத்து' போன்ற சுலோக அட்டைகள் ஏந்தப்பட்டிருந்தன.
இதேவேளை, இன, மத, நாடு, சாதி வேறுபாடின்றி அனைத்து தரப்பினரும் ஒற்றுமையாக இந்த மே தின ஊர்வலத்திலும் கூட்டத்திலும் பங்கேற்றனர். எமது நாட்டின் மே தினக் கூட்டங்களில் உரையாற்றும் அரசியல்வாதிகள் தொழிலாளர்களின் நலன்கள் தொடர்பில் உரையாற்றாமல், மாற்றுக் கட்சி அரசியல்வாதிகளை விமர்சிப்பதே வழமையாகும். இந்த வருடம் இடம்பெற்ற பல அரசியல் கட்சிகளின் மே தினக் கூட்டங்களிலும் இதனை அவதானிக்க முடிந்தது.
ஆனால், இலங்கைக்கு முன்னுதாரணமாக லண்டனில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட சில தொழிற்;ச்சங்க தலைவர்கள் மாத்திரமே உரையாற்றுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இலங்கை நடைபெறும் மே தினக் கூட்டங்களில் அரசியல்வாதிகளும், தொழிற்சங்க தலைவர்களும் பல மணி நேரங்கள் உரையாற்றுவதைப் போலல்லாமல் லண்டனில் நடைபெற்ற மே தின கூட்டத்தில் ஒவ்வொரு பேச்சாளருக்கும் ஒதுக்கப்பட்ட சில நிமிடங்களுக்குள் மாத்திமே பேசி முடிந்தனர்.
மே தின ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் காரணமாக லண்டன் நகரில் எந்தவொரு வீதியும் மூடப்பட்டவில்லை. அதுமாத்திரமல்லாது பொதுப் போக்குவரத்திற்கு எந்தவித தடையும் ஏற்படவில்லை என்பது முக்கிய விடயமாகும்.
அது மாத்திரமல்லாது, லண்டன் மற்றும் ஒக்ஸ்போர்ட் உள்ளிட்ட இங்கிலாந்தின் பல நகரங்களில் மே தினத்தினை பண்டிகை போன்று மக்கள் கொண்டாடியதையும் அவதானிக்க முடிந்தது.
மே தினத்தன்று கடுமையான குளிருக்கு மத்தியிலும் அதிகாலை ஐந்து மணிக்கு வீடுகளை விட்டு வெளியே வந்த மக்கள் முற்பகல் பத்து மணி வரை பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.
ஒவ்வொரு குழுவினரும் ஒவ்வொரு நிகழ்வுகளில் பங்கேற்று மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டாடினர் பாரம்பரிய உடைகளை அணிந்து குழுக்களாக பாட்டுப் பாடி நடனமாடினர். மற்றொரு குழு இங்கிலாந்தின் தனித்துவமான உணவுகளையும் விநியோகித்து ஏனையோருடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்த நிகழ்வு நிறைவடைந்த பின்னர் அனைத்து மக்களும் வழக்கம் போன்று தத்தம் பணிகளுக்கு புறப்பட்டு சென்றனர்.
இவ்வாறு வரலாற்று முக்கியத்துவமிக்க வகையில் பிரித்தானியாவில் இடம்பெற்ற மே தின நிகழ்வுகளைப் போன்ற நிகழ்வுகள் எமது நாட்டிலும் எதிர்காலத்தில் இடம்பெற்றால் அதன் ஊடாக தொழிலாளர்களுக்கு நிச்சயமாக நன்மை கிட்டும் என்பதில் மாற்றுக் கருத்திற்கே இடமில்லை.
Comments (0)
Facebook Comments (0)