கல்முனையை முகவரியாகக் கொண்ட கட்சி லைகாவின் முக்கியஸ்தர்களுக்கு கைமாற்றம்

கல்முனையை முகவரியாகக் கொண்ட கட்சி லைகாவின் முக்கியஸ்தர்களுக்கு கைமாற்றம்

றிப்தி அலி

கல்முனையை முகவரியாகக் கொண்டு பதிவுசெய்யப்பட்ட ஐக்கிய காங்கிரஸ் எனும் கட்சி, இன்று பிரபல கோடிஸ்வரரான அல்லிராஜ் சுபாஸ்கரனுடைய லைகா நிறுவனத்தின் முக்கியஸ்தர்களின் கைகளுக்கு மாறியுள்ளது.

இதனால் ஓட்டகமாக இருந்த இக்கட்சியின் சின்னம் இன்று மைக்காக மாறியுள்ளதுடன் இக்கட்சியின் பெயர் ஐக்கிய ஜனநாய குரல் என்றும் மாற்றப்பட்டுள்ளது.

இக்கட்சியின் புதிய தலைவர் ரஞ்சன் ராமநாயக்க என்று ஊடகங்கள் மூலம் அறிவிக்கப்பட்டாலும், தேர்தல் ஆணைக்குழுவினால் இன்று வரை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

இவற்றையெல்லாம் உறுதிப்படுத்தும் வகையில் இக்கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளராக போட்டியிடுகின்ற பிரசன்ன அதிகாரி கடந்த வாரம் கொழும்பில் நடத்திய ஊடக மாநாட்டில் பல்வேறு தகவல்களை வெளியிட்டிருந்தார். இதனையடுத்து ஐக்கிய ஜனநாய குரல் கட்சி தொடர்பில் எமது தேடலை மேற்கொண்டோம்.

உலமாக் கட்சி

கிழக்கு மாகாணத்தின் கல்முனையைச் சேர்ந்த மௌலவி முபாறக் அப்துல் மஜீத் என்பவரே இக்கட்சியின் ஸ்தாபகத் தலைவராவார். 2005, 2010ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இவர் ஆதரவளித்திருந்தார்.

இக்காலப் பகுதியிலேயே உலமாக் கட்சியையும் இவர் நிறுவினார். உலமாக்கள் (மௌலவிகள்) நேரடி அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற அடிப்படையிலேயே இக்கட்சியை உருவாக்குவதாக மௌலவி முபாறக் அப்துல் மஜீத் அச்சமயத்தில் கூறியிருந்தார்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக இக்கட்சியினை பதிவுசெய்வதற்கு நடவடிக்கை எடுத்த போது தேர்தல் ஆணைக்குழுவினால் இந்தப் பெயர் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால், 2019 அல்லது 2020ஆம் ஆண்டு காலப் பகுதியில் உலமாக் கட்சியின் பெயர் ஐக்கிய காங்கிரஸ் எனப் பெயர் மாற்றப்பட்டு பதிவுக்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. 

ஐக்கிய காங்கிரஸ்

இதன்போதும் இரண்டு தடவைகள் இக்கட்சியின் பதிவு விண்ணப்பம் தேர்தல் ஆணைக்குழுவினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், மௌலவி முபாறக் அப்துல் மஜீதின் நீண்டகால தொடர்ச்சியான போராட்டத்தின் பின்னரும், தேர்தல் ஆணைக்குழுவின் அப்போதைய உறுப்பினரொருவரின் ஆதரவுடனும் 2022ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக ஐக்கிய காங்கிரஸ் கட்சி பதிவுசெய்யப்படுகின்றது.

இக்கட்சியின் தலைவராக மௌலவி முபாறக் அப்துல் மஜீதும் செயலாளர் நாயகமாக  அவரது மகன் முஜாஹித் முபாறக்கும் செயற்பட்டுள்ளன. இது போன்று இக்கட்சியின் செயற்குழு உறுப்பினர்களாக அவரது உறவினர்களே காணப்பட்டுள்ளனர். இதனால் இக்கட்சி, முபாறக் அப்துல் மஜீதின் குடும்பக் கட்சி என்று பரவலாக அழைக்கப்பட்டு வந்தது.

இவ்வாறான நிலையில் இக்கட்சியின் செயலாளர் பதவியிலிருந்து கடந்த ஜனவரி மாதம் முஜாஹித் முபாறக் இராஜினாமச் செய்துள்ளார். இதனையடுத்து கல்முனையில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கோவிந்தசாமி ஜயசீலன் என்பர் இக்கட்சியின் செயலாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

அதேவேளை, இக்கட்சியின் தலைவராக செயற்பட்ட மௌலவி முபாறக்; அப்துல் மஜீத், இக்கட்சியின் தவிசாளராக இந்த பொதுக் கூட்டத்தில் நியமிக்கப்பட இக்கட்சியின் தலைவராக பார்த்தீபன் சர்வானந்தசிவம் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கமைய, கட்சியின் முதலாம் நிலையிலிருந்து மௌலவி, நான்காம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

கோவிந்தசாமி ஜயசீலன்

இந்த புதிய நியமினங்களைத் தொடர்ந்து கடந்த பல வருடங்களாக கல்முனையின் முகவரியில் செயற்பட்ட இக்கட்சியின் முகவரி இல. 20, கலாநிதி என்.எம். பெரேரா மாவத்தை, கொழும்பு – 08 என தற்போது மாற்றப்பட்டுள்ளது. இந்த முகரியில் தான் முன்னர் EAP Restaurant & Bar செயற்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

ஐக்கிய காங்கிரஸ் கட்சியில் மேற்கொள்ளப்பட்ட இந்த அனைத்து மாற்றங்களையும், யாப்புத் திருத்தத்தினையும் தேர்தல் ஆணைக்குழு ஏற்றுக்கொண்டதுள்ளதுடன் இது தொடர்பில் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, இக்கட்சியின் 25 செயற்குழு உறுப்பினர்களில் ஏழு பேர் மாத்திரமே முஸ்லிம்களாவார். இவர்களில் சிலர் மௌலவி முபாறக் அப்துல் மஜீதின் குடும்ப உறுப்பினர்களாவர்.

இதேவேளை, பிரித்தானியாவினைத் தளமாகக் கொண்டு செயற்படுகின்ற லைகா மொபைல் நிறுவனத்தின் பிரதம இயக்குனர் அதிகாரியாக செயற்பட்ட கோவிந்தசாமி ஜயசீலன் என்பவரே ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் செயலாளராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். 35 வருடங்கள் ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்தில் கடமையாற்றிய பின்னரே இவரே லைக்கா மொபைல் நிறுவனத்தில் இணைந்துகொண்டுள்ளார்.

படம் - நன்றி - பேஸ்புக்

லைகா நிறுவனத்தின் ஸ்தாபகரான பிரபல கோடிஸ்வரரான அல்லிராஜ் சுபாஸ்கரனினால் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முதலீடுகளில் பெரும்பாலனவற்றின் பணிப்பாளராக கோவிந்தசாமி ஜயசீலனே செயற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுந்தரம் அருமைநாயகம்

இதேவேளை, இக்கட்சியின் பிரதித் தலைவர் - 01ஆக சுந்தரம் அருமைநாயகம் செயற்படுகின்றார். ஓய்வுபெற்ற சிவில் அதிகாரியான இவர், யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களின் மாவட்ட செயலாளராகவும் செயற்பட்டுள்ளார். இவர் தற்போது லைகா நிறுவனத்தின் ஞானம் பவுண்டேசனின் முக்கிய செயற்பட்டாளராகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய, மௌலவி முபாறக்கால் ஸ்தாபிக்கப்பட்ட ஐக்கிய காங்கிரஸ் கட்சி தற்போது லைகா நிறுவத்தின் முக்கியஸ்தர்களின் கைகளுக்கு சென்றுள்ளமை நிரூபிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில், பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் கட்சிகளின் பெயர்களும் சின்னங்களும் மாற்றுவதற்கான சந்தர்ப்பம் தேர்தல் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுவது வழமையாகும்.

இதற்கமைய, பாராளுமன்ற வேட்புமனு கோரலிற்கு முன்னர் ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் பெயர் ஐக்கிய ஜனநாய குரலாக மாற்றப்பட்டுள்ளதுடன் ஓட்டகமா இருந்த அக்கட்சியின் சின்னம் தற்போது மைக்காக மாறியுள்ளது.

இதனையடுத்தே இக்கட்சியின் தலைவர் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அறிவித்தார். எனினும், இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு இதுவரை எந்தவித உத்தியோகபூர்வ அறிவிப்பினையும் மேற்கொள்ளவில்லை.

ரூமி ஜௌபர்

இக்கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களாக முன்மொழியப்பட்டுள்ள ஐந்து பேரில் முதலாவது நபராக ரூமி ஜௌபர் காணப்படுகின்றார். முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் மிகவும் நெருக்கமான இவர், இலங்கை சுற்றுல்லா அதிகார சபையின் பணிப்பாளராகவும் செயற்பட்டுள்ளார். கடந்த பல வருடங்களாக இவர், லைகா நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருகின்றார்.

சாய்ந்தமருதினை பிறப்பிடமாகக் கொண்ட ரூமியின் ஊடாகவே கல்முனையின் முகவரியில் பதிவுசெய்யப்பட்ட கட்சி லைகாவின் முக்கியஸ்தர்களுக்கு கைமாற்றப்பட்டுள்ளது எனப் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

இதனை ஐக்கிய காங்கிரஸின் ஸ்தாபகரான மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தொடர்ச்சியாக நிராகரித்து வருவகின்றார். இக்கட்சியின் தவிசாளராக நான் இப்போதும் செயற்படுவதனால், இக்கட்சி தனது கட்டுப்பாட்டிலேயே உள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

எவ்வாறாயினும், இக்கட்சியின் புதிய யாப்பின் பிரகாரம் செயலாளர் நாயகத்திற்கே அதிகாரங்கள் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மௌலவி முபாரக் அப்துல் மஜீத்

"ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் ஊடாக ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தெரிவுசெய்யப்பட வேண்டும் என்பதே எனது இலக்காகும். அத்துடன் நான் மரணித்த பின்னரும் இக்கட்சி செயற்பட வேண்டும் என்பது எனது ஆசையாகும்" என அவர் குறிப்பிட்டார்.

இதற்கினங்க, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் முஷாரப் முதுநபீன் போன்றோரிடம் எனது கட்சியினை முன்னெடுத்துச் செல்லுமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டது என மௌலவி முபாரக் கூறினார்.

"தற்போது ரஞ்சன் ராமநாயக்க மற்றும் ஜெயசீலன் போன்றோர் எனது கட்சியினை முன்னெடுத்துச் செல்ல முன்வந்துள்ளனர். அதனால் அவர்களை இணைந்துக்கொண்டு செல்கின்றேன்" எனவும் அவர் குறிப்பிட்டார்.

எமது கட்சிக்கு தேசியப்பட்டியல் ஆசனம் கிடைத்தால் அதற்கு கல்முனையைச் சேர்ந்த ஒருவரே நியமிக்கப்படுவார் என மௌலவி முபாரக் அப்துல் மஜீத் அடித்துக் கூறுகின்றார்.

இதற்கமைய, தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்ற ரூமி ஜௌபரினை சந்தித்து இக்கட்சி கைமாறல் தொடர்பில் தகவல்களை பெறுவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் வெற்றியளிக்கவில்லை.

அத்துடன் ஐக்கிய ஜனநாய குரல் கட்சி கைமாற்றப்பட்டமை தொடர்பில் முன்வைக்கப்பட்டு வருகின்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் கருத்துக்களை பெறுவதற்காக அக்கட்சியின் செயலாளர் நாயகம் ஜயசீலனை தொலைபேசி ஊடாகத் தொடர்புகொள்ள மேற்கொண்ட முயற்சிகளும் பயனளிக்கவில்லை.

ஜனநாயக தேசிய கூட்டணி

இதேவேளை, எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனநாய குரல் நாட்டின் பல மாவட்டங்களில் போட்டியிடுகின்றது. எனினும், இக்கட்சியின் தாயகமான திகாமடுல்ல மாவட்டத்தில் இக்கட்சி போட்டியிடவில்லை.

இவ்வாறான நிலையில் இக்கட்சியின் 3ஆவது உதவித் தலைவரான முஹம்மத் றபீக் அஹமட் ரசாத், ஜனநாயக தேசிய கூட்டணியின் தபால் பொட்டி சின்னத்தில் திகாமடுல்ல மாவடத்தில் களமிறங்கியுள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசனின் தலைமையிலேயே இந்த கூட்டணி செயற்படுகின்றது. இக்கூட்டணிக்கும் மௌலவி முபாறக் அப்துல் மஜீதின் இன்னுமொரு புதல்வாரன முஸ்ன‌த் முபாரகிற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கடந்த ஒக்டோபர் 9ஆம் திகதி கொழும்பில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இதில் ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிரஸின் தலைவராகவே முஸ்ன‌த் முபாரக் கையெழுத்திட்டதாக முபாறக் அப்துல் மஜீத் அனுப்பிய மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய ஜனநாய குரலின் உதவித் தலைவர் ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிரஸின் உறுப்பினராக ஜனநாயக தேசிய கூட்டணியில் போட்டியிடுகின்றமையும் பாரிய சந்தேகத்தினை தோற்றவித்துள்ளது.

ஏனெனில் ஐக்கிய ஜனநாய குரல் இந்தத் தேர்தலில் எக்கட்சியுடனும் கூட்டணி அமைக்காமையேயாகும். எவ்வாறாயினும், ஜனநாயக தேசிய கூட்டணிக்கும் லைக்கா நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரனிற்கும் நேரடித் தொடர்புள்ளதாக சில குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. குறித்த குற்றச்சாட்டுகளை ஊடகவியலாளர் மாநாடொன்றின் மூலம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் அண்மையில் நிராகரித்திருந்தார்.

இலங்கை தொழிலாளர் கட்சி

இதேவளை, பிரபல தொழிலதிபரான ஏ.எஸ்.பி. லியனகேயின் இலங்கை தொழிலாளர் கட்சி இம்முறை வன்னி மாவட்டத்தில் போட்டியிடுகின்றது. இதன் முதன்மை வேட்பாளராக முன்னாள் அமைச்சர் காதர் மஸ்தான் களமறிங்கியுள்ளார்.

இக்கட்சியினால் தேர்தல் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்ட தேசியப்பட்டியலில் ஐக்கிய ஜனநாய குரலின் ஸ்தாபகர் மௌலவி முபாறக் அப்துல் மஜீதின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இது தொடர்பாக தேர்தல் ஆணைக்ழுவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானயில் இக்கட்சியின் தேசியப்பட்டியல் வேட்பாளர்களின் பெயர்கள் உள்ளடக்கடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய ஜனநாய குரலின் (ஐக்கிய காங்கிரஸின்) தவிசாளரின் பெயர், இலங்கை தொழிலாளர் கட்சியின் தேசியப்பட்டியலில் உள்ளடக்கப்படுள்ளமையும் பாரிய சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இலங்கை தொழிலாளர் கட்சியும் லைகா நிறுவனத்தின் கட்டுப்பாட்டிற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வன்னி மாவட்டத்தில் லைகா ஆதரவுடனான இலங்கை தொழிலாளர் கட்சியும் ஜனநாயக தேசிய கூட்டணியும் போட்டியிடுகின்றன. குறித்த இரண்டு கட்சிகளிலும் தமிழ் மற்றும் முஸ்லிம் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

ஹுனைஸ் பாரூக்

இவ்வாறான நிலையில், "எங்களை தோற்கடிப்பதற்காக லைகாவின் சுபாஷ்கரன் பணம் கொடுக்கின்றார்" என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட வேட்பாளருமான ஹுனைஸ் பாரூக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வன்னி மாவட்டத்திற்கு பல தசாப்தங்களாக கிடைத்து வருகின்ற முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் பிரதிநித்ததுவத்தை இல்லாமல் செய்வதற்காகவே சுபாஷ்கரன் இரண்டு கட்சிகளை களமிறக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் இம்மாவட்ட மக்களுக்கு பல சேவைகளை புரிந்த முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனை தோற்கடிப்பதற்காக சுபாஸ்கரனினால் கோடி ரூபா பணம் வழங்கப்படுவதாக முசலியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் மேலும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பல்வேறு தரப்பினரினால் தன் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இதுவரை எந்தவொரு பதிலையும் வழங்காது மௌனம் காத்து வருகின்றார் லைகா நிறுவனத்தின் ஸ்தாபகர் அல்லிராஜ் சுபாஸ்கரன். இக்கட்டுரைக்காக நாம் அவரை தொடர்புகொள்ள மேற்கொண்ட முயற்சிகளும் பயனளிக்கவில்லை.