இந்தியாவின் நன்கொடையில் மொனராகலையில் நிர்மாணிக்கப்பட்ட மாதிரி கிராமம் பயனாளிகளிடம் கையளிப்பு
மொனராகலையில் நிர்மாணிக்கப்பட்ட தித்தவெல்கிவ்ல மாதிரிக் கிராமத்தினை உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும், கிராம & நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு & நிர்மாணத்துறை அமைச்சின் செயலாளர் அத்தப்பத்து ஆகியோர் அண்மையில் கூட்டாக திறந்துவைத்து 24 பயனாளி குடும்பங்களிடம் கையளித்தனர்.
மொனராகலை மாவட்ட செயலாளர், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர், மற்றும் கிராம & நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு & நிர்மாணத்துறை அமைச்சு, ஊவா மாகாண சபை மற்றும் மொனராகலை மாவட்ட நிர்வாக அலகுகளின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தனர்.
இந்திய அரசாங்கத்தின் நன்கொடை உதவித் திட்டத்தின் கீழ் இலங்கையின் கிராம & நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு & நிர்மாணத்துறை அமைச்சுடன் இணைந்து நாடளாவிய ரீதியில் உள்ள 25 மாவட்டங்களிலும் குறித்த மாதிரி கிராம வீடமைப்புத் திட்டமானது அமுல்படுத்தப்பட்டிருந்தது.
இத்திட்டத்துக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையானது இலங்கை அரசாங்கத்துக்கும் இந்திய அரசாங்கத்துக்கும் இடையில் 2017ஆம் ஆண்டு ஒக்டோபரில் கைச்சாத்திடப்பட்டிருந்தது.
இத்திட்டத்தின் கீழ் இலங்கையைச் சேர்ந்த குறைந்த வருமானம் பெறும் 600 குடும்பங்களுக்கான வீட்டு வசதிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 24 வீடுகளைக் கொண்ட மாதிரிக்கிராமத்தில் வழங்கப்படுவதுடன் இப்பயனாளிக் குடும்பங்கள் மாவட்ட வீடமைப்பு சபைகளால் தெரிவுசெய்யப்பட்டிருந்தன.
இத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு, வவுனியா, யாழ்ப்பாணம், கண்டி, கம்பஹா, அநுராதபுரம், பதுளை, மாத்தளை, புத்தளம், கொழும்பு, மற்றும் திருகோணமலை ஆகிய 11 மாவட்டங்களிலும் ஏற்கனவே திறந்துவைக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் 96 வீதமான பகுதி நிறைவடைந்திருக்கும் நிலையில் மீதமுள்ள மாதிரிக்கிராமங்களும் வெகுவிரைவில் திறக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்படவுள்ளன.
Comments (0)
Facebook Comments (0)