புற்றுநோய் விழிப்புணர்விற்கான பேஸ்புக் பக்கம் அங்குரார்ப்பணம்
இலங்கையில் புற்றுநோய் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கில் Aayu+ எனும் பெயரிலான பேஸ்புக் பக்கமொன்று அண்மையில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
இனவிருத்தி மற்றும் பிற வகையான புற்றுநோய்களைப் பற்றிய கட்டுக்கதைகளை உடைப்பதுடன், பொதுமக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே ஆரோக்கியத்தை தேடும் நடத்தையை ஊக்குவிக்கும் நோக்கில் பிரத்தியோகமான சமூக ஊடக தளமாக இது உருவாக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் பிரபலங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்களின் ஒத்துழைப்பினை இந்த சமூக ஊடக தளம் பயன்படுத்தவுள்ளது. அத்துடன் கவிதை, vlogs, சிறுகதைகள், தகவல் வரைபடங்கள் மற்றும் மீம்ஸ் போன்ற பல்வேறு வகையான ஈடுபாடுகளை இந்த தளம் பயன்படுத்துவதனால் நாட்டின் சனத்தொகையின் வெவ்வேறு வகையினரை இது மேலும் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம் (UNFPA)மற்றும் தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு செயற்திட்டம் ஆகியன இணைந்தே இந்த சமூக ஊடக செயற்த்திட்டத்தினை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான அங்குரார்ப்பண நிகழ்வு அண்மையில் கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது, தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு செயற்திட்டத்தின் பணிப்பாளர் டாக்டர் ஜானகி விதானபதிரண உரையாற்றுகையில்,
"உள்நாட்டில், ஒவ்வொரு வருடமும் சுமார் 23,000 பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். நோயால் பாதிக்கப்படுவதை தடுத்து அதனை முன்கூட்டியே கண்டறிவதை ஊக்குவித்து உயிர்களைக் காப்பாற்ற உதவும் சேவைகளை அணுக மக்களைத் தூண்டுமாறு அபரிமிதமான சக்தியைக் கொண்டிருக்கும், பிரதான ஊடகங்களை நான் தற்போது கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
சமூக ஊடகங்களின் சக்தி குறித்து இந்த நிகழ்வில் உரையை நிகழ்த்திய UNFPAயின் இலங்கைக்கான பிரதிநிதி திருமதி ரிட்சு நக்கென்,
“சமூக மாற்றத்தை அணிதிரட்டுவதில் சமூக ஊடகங்கள் முக்கிய பங்கு வகித்ததற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன. நடமாட்ட முடக்கத்தின் போது சமூக ஊடக தளங்களினூடாக பாலின அடிப்படையிலான வன்முறை, முதியோர் துஷ்பிரயோகம் மற்றும் தீர்மானமெடுப்பதில் இளைஞர்களின் பங்கேற்பு போன்ற விடயங்களில் அசாதாரணமான அதிகரித்த ஈடுபாட்டை UNFPA கண்டிருந்தது.
புற்றுநோயைச் சுற்றியுள்ள சமூக தப்பபிராயங்களை நிவர்த்தி செய்வதற்கு சமூக ஊடகங்கள் ஒரு சிறந்த கருவியாக இருக்கும்” என்றார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் டாக்டர் லக்ஷ்மி சோமதுங்க குறிப்பிடுகையில்,
“புற்றுநோய்க்கான காரணங்கள் மற்றும் கண்டறிதல்களைச் சுற்றியுள்ள ஆரம்ப தகவல் தொடர்பாடல்களை நாங்கள் ஊக்குவிக்க வேண்டும். புற்றுநோய்க்கான காரணங்களான புகையிலை மற்றும் அற்ககோல் போன்ற அழிவை விளைவிக்கக்கூடிய பழக்கங்களைத் தடுப்பதற்கு இளம் பார்வையாளர்களை சென்றடைவதற்கு இந்த முயற்சி சிறந்தது என்று நான் நம்புகிறேன்” என்றார்.
உலகளாவியளவில் UNFPA, 2030 நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளுக்கு பங்களிக்கின்ற மூன்று மாற்றத்திற்கான முடிவுகளை அடைவதற்கான முயற்சிகளை துரிதப்படுத்துகிறது.
தாய்மை இறப்புக்களை பூச்சியமாக்கல், பூர்த்தி செய்யப்படாத குடும்பத் திட்டமிடலுக்கான தேவைகளை பூச்சியமாக்கல் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் அனைத்து தீங்கு விளைவிக்கும் நடைமுறைகளையும் பூச்சியமாக்கல் என்பன அவையாகும்.
உலகளாவிய ரீதியில் கர்ப்பப்பை கழுத்து புற்றுநோயை ஒழிப்பதில் UNFPA ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்து வருகிறதுடன் இலங்கையில் புற்றுநோயின் பாதிப்பு மற்றும் இறப்பைக் கட்டுப்படுத்த, சுகாதார அமைச்சு, தேசிய புற்று நோய் கட்டுப்பாட்டு நிகழ்ச்சித்திட்டம் மற்றும் பெண்கள் நல்வாழ்வு கிளினிக்குகளுக்கு நீண்டகாலமாக ஆதரவளித்து வருகிறதுடன் எதிர்காலத்திலும் இந்த முயற்சிகளைத் தொடரும்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள் மூலம் மூன்றில் ஒரு பங்கு புற்றுநோய்களைத் தடுக்க முடியும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) மதிப்பிடுகிறது. கர்ப்பப்பை கழுத்து மற்றும் மார்பக புற்றுநோய் என்பது உலகளாவிய பொது சுகாதார பிரச்சினை என்பதுடன், இது தற்போது மில்லியன் கணக்கான அப்பாவி உயிர்களைக் கொன்று வருகிறது.
இவற்றில் மூன்றில் இரண்டு பங்கு சம்பவங்கள், சுகாதாரத் துறை அச்சுறுத்தலை திறம்பட எதிர்கொள்ளும் திறன் மற்றும் உட்கட்டமைப்பு வசதி இல்லாத அபிவிருத்தி அடைந்து வரும் வளரும் நாடுகளில் நிகழ்கின்றன.
மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பைக் கழுத்து புற்றுநோய் ஆகியவை இலங்கையில் பெண்களிடையே உள்ள மிகவும் பொதுவான புற்றுநோய் வகையாகும். ஐ.நா.வின் பாலியல் மற்றும் இனவிருத்தி சுகாதாரத்துக்கான முன்னணி நிறுவனமான, ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம் (UNFPA) - இலங்கை தொற்றா நோய்களைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் இடையிலான வலுவான தொடர்புகளை அங்கீகரிக்கிறதுடன் பெண்கள் மற்றும் சிறுமிகள் மத்தியில் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளின் முன்னேற்றத்தை பாதுகாத்து ஊக்குவிக்கிறது.
இலங்கையில் புற்றுநோயின் நிலை மற்றும் காரணங்கள் குறித்த தரவுகளின் இடைவெளி 2014ஆம் ஆண்டிலிருந்து இருந்தபோதிலும், களுத்துறையில் HPV - DNA பரிசோதனையை மேற்கொள்வதற்கான பைலட் திட்டம் போன்ற புத்தாக்கமான முயற்சிகளை சுகாதார அமைச்சு மேற்கொண்டு வருகிறது.
UNFPA உடன் இணைந்து ‘பெண்கள் நல்வாழ்வு கிளினிக்’ செயற்பாட்டின் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. கர்ப்பப்பைக் கழுத்து புற்றுநோயை HPV தடுப்பூசிகள் மூலம் ஆரம்ப நிலை தடுப்பு சாத்தியம் என்பதையும், HPV பரிசோதனை மூலம் இரண்டாம் நிலை தடுப்பு சாத்தியம் என்பதையும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் வெளிப்படுத்துவதால் இது போன்ற முயற்சிகள் தொடர்கின்றன.
Comments (0)
Facebook Comments (0)