இலங்கையிலுள்ள நோர்வே தூதரகத்தை மூடத் தீர்மானம்
கொழும்பிலுள்ள நோர்வே தூதரகத்தினை எதிர்வரும் 2023ஆம் ஆண்டு ஜுலை மாத நிறைவில் மூடிவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கொழும்பிலுள்ள நோர்வே தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"வெளிநாடுகளிலுள்ள தனது இராஜதந்திர அலுவலக வலையமைப்பில் கட்டமைப்பு மாற்றங்களை ஏற்படுத்த நோர்வே அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஐரோப்பாவிலும், அதற்கு அப்பால் காணப்படும் இராஜதந்திர அலுவலக வலையமைப்பில் கட்டமைப்பு மாற்றங்களை ஏற்படுத்த நோர்வே அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த மீளமைப்புகளின் அங்கமாக, வெளிநாடுகளில் காணப்படும் ஐந்து நோர்வே தூதரகங்களை நிரந்தரமாக மூடிவிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதில், கொழும்பிலுள்ள நோர்வே தூதரகமும் அடங்கியுள்ளது. கொழும்பில் அமைந்துள்ள நோர்வே தூதரகம், மாலைதீவுகளுக்கும் இராஜதந்திர சேவைகளை வழங்கி வரும் நிலையில், 2023 ஜுலை மாத நிறைவில் இதனை மூடிவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள தூதரகத்தை மூடிவிடுவதற்கு தீர்மானித்த போதிலும், அதனால் நோர்வே மற்றும் இலங்கை இடையே காணப்படும் பரஸ்பர உறவில் எவ்விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவான அபிவிருத்திப் பணிகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு நோர்வே அரசாங்கம் தொடர்ந்தும் தன்னை அர்ப்பணித்துள்ளது.
நீண்ட காலமாகத் தொடரும் பரஸ்பர இராஜதந்திர உறவுகள் தொடர்ந்தும் இடம்பெறுவதை உறுதி செய்வதற்கு, இலங்கையை உள்வாங்கும் வகையில், பிராந்தியத்தில் காணப்படும் மற்றுமொரு நோர்வே தூதரகத்தில் தலைமை அதிகாரியையும், இராஜதந்திர ஊழியர்களையும் நியமிப்பதற்கு நோர்வே எதிர்பார்த்துள்ளது.
இது தொடர்பில் இலங்கைக்கான நோர்வே தூதுவர் டீரன யுரன்லி எஸ்கடேல் கருத்துத் தெரிவிக்கையில்,
“கொழும்பிலுள்ள நோர்வே தூதரகத்தை மூடத் திட்டமிடப்பட்டுள்ள செய்தியை பகிர்ந்து கொள்வதில் கவலை கொள்கின்றேன்.
மாற்றமடைந்து வரும் புவியியல் அரசியல் மற்றும் நோர்வேயின் ஈடுபாடுகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளுக்கு முகங்கொடுக்க நோர்வே வெளிநாட்டு சேவைகள் எவ்வாறு நிறுவப்பட வேண்டும் என்பதன் பெறுபேறாக அமைந்திருப்பதுடன், இலங்கையுடன் தொடர்புடையதாக அமைந்திருக்கவில்லை.
இலங்கையுடன் எமது நட்பான பரஸ்பர உறவுகளை தொடர்ந்து பேணுவோம். அபிவிருத்திக்கான உதவிகளும் தொடரும்.” என்றார்.
1960 ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு நோர்வே உதவிகளை வழங்கி வருகின்ற நிலையில், இலங்கை மத்திய வருமானமீட்டும் நாடு எனும் நிலையை எய்தியிருந்ததைத் தொடர்ந்து, நோர்வேயினால் இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகள் படிப்படியாக குறைவடைந்திருந்தன.
எவ்வாறாயினும், நோர்வேயினால் நீண்ட கால அடிப்படையிலான, தற்போது முன்னெடுக்கப்படும் சில அபிவிருத்தித் திட்டங்களுக்கு உதவிகள் வழங்கப்படுகின்றன.
இவற்றில், வட மாகாணத்தில் தொழில் மற்றும் உணவு பாதுகாப்புக்கான ஆதரவும் அடங்குகின்றது. 2021ஆம் ஆண்டில், இலங்கைக்கு நோர்வே வழங்கியிருந்த மொத்த அபிவிருத்திக்கான உதவிகளின் பெறுமதி 59.7 நோர்வே குரோனர்களாகும். (சுமார் 2,150 மில்லியன் ரூபாய்கள்).
இதில், 21 மில்லியன் நோர்வே குரோனர்கள் (சுமார் 756 மில்லியன் ரூபாய்) தூதரகத்தினூடாக வழங்கப்பட்டிருந்தது. இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி நிலையைக் கவனத்தில் கொண்டு, கடந்த மாதம் நோர்வேயினால் 13 மில்லியன் நோர்வே குரோனர்கள் (சுமார் 490 மில்லியன் ரூபாய்) மனிதநேய உதவி ஐக்கிய நாடுகள் அமைப்புகளினூடாக வழங்கப்பட்டிருந்தது.
கொழும்பிலுள்ள நோர்வே தூதரகம் மூடப்பட்டதன் பின்னர், பிராந்தியத்திலுள்ள மற்றுமொரு நோர்வே தூதரகத்தினூடாக தூதரக சேவைகள் வழங்கப்படும். ஏற்கனவே நியூ டெல்லி நகரில் வீசா மையம் ஒன்று காணப்படுவதுடன், இலங்கை மற்றும் மாலைதீவுகளிலிருந்து கிடைக்கும் வீசா விண்ணப்பங்களை கையாள்கின்றது.
விண்ணப்பதாரிகள், கொழும்பிலுள்ள VFS அலுவலகத்துக்கு விஜயம் செய்து வீசா முற்பதிவுகளை மேற்கொள்ள முடியும். 1996ஆம் ஆண்டு கொழும்பில் தனது தூதரகத்தை நோர்வே திறந்திருந்தது.
1976ஆம் ஆண்டு முதல் இலங்கையில் தனது அலுவலகமொன்றைக் கொண்டிருந்தது. வரலாற்று ரீதியில், இலங்கையின் சமாதான மற்றும் ஒருமைப்பாட்டு செயன்முறைகளில் நோர்வே முக்கிய பங்காற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)