'அரச நிறுவனங்கள் தொண்டர் அடிப்படையில் தகவல்களை வெளியிட முன்வர வேண்டும்'
றிப்தி அலி
அரச நிறுவனங்கள் தொண்டர் அடிப்படையில் தகவல்களை வெளியிட முன்வர வேண்டும் என இலங்கை தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் உறுப்பினரான சட்டத்தரணி கிஷாலி பின்டோ – ஜயவர்தன தெரிவித்தார்.
தெற்காசிய பிராந்தியத்தில் இந்த விடயம் பாரிய பின்னடைவில் காணப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
உலக பத்திரிகை சுதந்திர தினத்தினையொட்டி "தகவல் அறியும் உரிமை: தற்போதை நிலவரங்களும், எதிர்கால முன்னிரிமைகளும்" எனும் தலைப்பிலான இணைய வழி கலந்துரையாடலொன்று கடந்த மே 3ஆம் திகதி இடம்பெற்றது.
இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் மற்றும் பாத்பைண்டர் அறக்கட்டளை ஆகியவற்றின் இணை ஏற்பாட்டிலான இந்த இணைய வழி கலந்துரையாடலில் சிறப்புரை நிகழ்த்தும் போதே சட்டத்தரணி கிஷாலி மேற்கண்டவாறு கூறினார்.
இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் தலைவர் குமார் நடேசனின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் இந்தியா புதுடில்லியின் மத்திய தகவல் ஆணைக்குழுவின் தலைமை தகவல் ஆணையாளர் யஷ்வர்தன் குமார் சிங்கா, இலங்கையின் தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் ஆணையாளர் கிஷாலி பிண்டோ ஜெயவர்த்தன, சுயாதீன ஆராய்ச்சியாளர் மற்றும் சட்டத்தரணி அஸ்வினி நடேசன், த இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் புலனாய்வு பிரிவின் சிரேஷ்ட ஆசிரியரும், விருது வென்ற ஊடகவியலாளருமான ஷியாம்லால் யாதவ், இலங்கை கணனி அவசர தயார் நிலை ஒருங்கிணைப்பு மையத்தின் (CERT) பணிப்பாளர் ஜெயந்த பெர்னாண்டோ, இந்திய மத்திய தகவல் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் எம்.ஸ்ரீதர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இந்த கலந்துரையாடலின் போது தகவல் அறியும் உரிமை தொடர்பில் பல்வேறு விடயங்களை பேச்சாளர்கள் பகிர்ந்துகொண்டனர். அதன் தொகுப்பு:
வை.கே. சிங்கா, பிரதம தகவல் ஆணையாளர், மத்திய தகவல் ஆணைக்குழு, புதுடெல்லி, இந்தியா.
தகவல் அறியும் சட்டம் இந்தியாவில் 2005ஆம் ஆண்டு முதல் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த சட்ட மூலம் தொடர்பில் இந்திய மக்கள் மத்தியில் சிறந்தொரு எண்ணப்பாடு காணப்படுகின்றது.
எமது ஆணைக்குழுவிற்கும், மாநிலங்களிலுள்ள ஆணைக்குழுவிற்கும் கடந்த 2019ஆம் ஆண்டு 30.7 மில்லியன் மேன்முறையீடுகள் கிடைக்கப் பெற்றன. அதில் 10.8 மில்லியன் மேன்முறையீடுகளுக்கு தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த வருடத்தின் முதல் காலாண்டில் 19,183 மேன்முறையீடுகள் மாத்திரமே கிடைக்கப்பெற்றன. அதில் 17,016 மேன்முறையீடுகளுக்கு தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முன்னைய ஆண்டுகளை விட மேன்முறையீடுகளின் எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டிருப்பினும், வழங்கப்பட்ட தீர்வுகளின் அடிப்படையில் இது பாரிய வெற்றியாகும்.
இந்தியாவினைப் பொறுத்த வரையில் தகவல் அறியும் உரிமைச் சட்ட மூலத்தில் இன்னும் நிறைய அடைய வேண்டியுள்ளது. எவ்வாறாயினும் பொதுமக்கள் அரசாங்கத்திடமிருந்து தங்களின் நலன்களை பெற்றுக்கொள்வதற்காக இந்த சட்டத்தினை பயன்படுத்துகின்றனர்.
குறிப்பாக மின்மானி பிரச்சினை, சாரதி அனுமதிப்பத்திர பிரச்சினை, மின்சார கட்டணத்தின் சிக்கல் போன்ற பிரச்சினைகளையும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக மக்கள் தீர்த்துக்கொள்கின்றனர்.
அது மாத்திரமல்லாமல் ஊழலுக்கு எதிராகவும் இந்த சட்டம் பயன்படுத்தப்படுகின்றமையினை அவதானிக்க முடிகின்றது. தொற்று நோய் பரவலின் போது தகவல் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதனையும் அறிய முடிந்தது.
தகவல்களை பெறுவதற்கான பொறிமுறையினையும் மக்கள் அறிந்துள்ளனர். இதனால் வினைத்திறனாக தகவல் அறியும் உரிமை பயன்படுத்துகின்றது. எமது ஆணைக்குழுவில் எட்டு ஆணையாளர்கள் காணப்படுகின்றனர்.
எம்மிடம் முன்வைக்கப்படும் சிறிய பிரச்சினைகள் தொடர்பான மேன்முறையீட்டுக்கும் தீர்வு பெற்றுக்கொடுத்துள்ளோம். இந்த சட்டத்தில் பல நன்மைகள் காணப்படுகின்றன. இந்த சட்டத்தின் ஊடாக பாரிய ஊழலினை ஒழிக்க முடியும்.
எவ்வாறாயினும் கொவிட் – 19 பரவல் காரணமாக தகவல் அறியும் செயற்பாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எமது ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு ஆதரவாக மெட்ராஸ் மேல் நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது, கொரோனா வைரஸ் பரவலிற்கு மத்தியில் மத்திய மற்றும் மாநில தகவல் ஆணைக்குழுக்களின் செயற்பாடுகளை வேகமாக முன்னெடுக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
தற்போது எமது ஆணைக்குழுவினால் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வீடியோ மற்றும் ஆடியோ மாநாடுகளின் ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதனால், வீடுகளிலும், அலுவலங்களிலும் இருந்து பலர் எமது விசாரணைகளில் பங்கேற்பதனை அவதானிக்க முடிகின்றது. இதற்கு சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது.
தொழில்நுட்பம் என்பது பாரிய சவாலான விடயமாகும். எனினும் இதற்கு நாம் தயாராக வேண்டும். சிலர் தொடர்ச்சியாக தகவல் அறியும் மேன்முறையீடுகளை சமர்ப்பிக்கின்றனர். இது அவர்களின் ஆர்வத்தினையே வெளிக்காட்டுகின்றது.
எவ்வாறாயினும், அரச அதிகாரிகள் தொண்டராக முன்வந்து தகவல்களை பொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டும். இதனால் தகவல் அறியும் விண்ணப்பங்களை நிச்சயமாக குறைக்க முடியும்.
சட்டத்தரணி கிஷாலி பின்டோ – ஜெயவர்த்தன, ஆணையாளர், தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு, இலங்கை.
பிரஜைகளை வினைத்திறனாக்குவதே தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பிரதான நோக்கமாகும். கடந்த 2003ஆம் ஆண்டு முதல் இந்த சட்டத்தினை நாட்டில் அமுல்படுத்துவதற்கு பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
அரசியல்வாதிகள், சட்டத்தரணிகள், சிவில் சமூகம் மற்றும் ஊடகவியலாளர்கள் என பல்வேறு தரப்பினர் 13 வருடங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்ற இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
இதன் விளைவாக கடந்த 2016 ஆம் ஆண்டிலேயே இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டது. கடந்த நான்கு வருடங்களில் ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்பினர் பயன்படுத்தியதை விட அதிகமாக சாதாரண மக்கள் இந்த சட்டத்தினை பயன்படுத்தியதை அவதானிக்க முடிந்தது.
இது பாரிய வெற்றியாகும். அரச நிறுவனங்களின் தவறுகளை திருத்திக் கொள்வதற்காக மக்கள் இதனை பயன்படுத்தினர். அரசாங்கத்திடம் மக்கள் கேள்வி கேட்பதற்கான வாய்ப்பினை இந்த சட்டம் வழங்கியுள்ளது. எவ்வாறாயினும், அரச நிறுவனங்கள் தொண்டர் அடிப்படையில் தகவல்களை வெளியிட முன்வர வேண்டும்.
பல பெண்கள் தாங்களாகவே முன்வந்து தகவல் அறியும் விண்ணப்பத்தினை சமர்ப்பித்துள்ளனர். இந்த சட்ட மூலத்திற்கு கிடைக்கப்பெற்ற பல வெற்றிக் கதைகள் எமது நாட்டில் பதிவாகியுள்ளன. ஆனால் அவை அனைத்தும் ஊடகங்களில் வெளிவருவதில்லை.
கொவிட் – 19 தொற்று நோய் பரவல் காரணமாக எமது ஆணைக்குழு பாரிய சவால்களை எதிர்நோக்கியுள்ளது. குறிப்பாக கூட்டங்கள், கலந்துரையாடல்கள் மற்றும் விசாரணைகளை முன்னெடுப்பதில் பாரிய சிக்கல்கள் காணப்படுகின்றன.
இதனை எவ்வாறு முறியடிப்பது தொடர்பில் தற்போது ஆணைக்குழு கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளது. தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிற்கான வள ஒதுக்கீட்டில் பாரிய பிரச்சினை காணப்படுகின்றது. ஆனால், இந்தியாவில் இதுவொரு பிரச்சினை இல்லாமல் இருக்கலாம்.
பாராளுமன்றத்தின் ஊடாகவே எமது ஆணைக்குழுவிற்கு நிதி கிடைக்கும் என சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், ஊடக அமைச்சின் கீழ் எமது ஆணைக்குழு உள்ளடக்கப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள அனைத்து அமைச்சுக்களும் அரச நிறுவனம் என்ற அடிப்படையில் தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிற்கு பதிலளிக்க வேண்டியுள்ளது.
இவ்வாறு ஆணைக்குழுவிற்கு பதிலளிக்க வேண்டிய அரச நிறுவனமொன்றின் கீழ் இந்த ஆணைக்குழு உள்ளடக்கப்பட்டுள்ளது தொடர்பில் பாரிய பிரச்சினைகள் காணப்படுகின்றன. இது ஆணைக்குழுவின் சுயாதீன தன்மையினை பாதிக்கின்றது.
தற்போதைய அரசாங்கம் எமது ஆணைக்குழு விடயத்தில் நல்லதொரு நிலைப்பாட்டினை கொண்டுள்ளதை எம்மால் அவதானிக்க முடிகின்றது. இந்த ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்களின் நியமனம் ஒருபோதும் அரசியல் நியமனமாக மேற்கொள்ளப்படக்கூடாது.
தற்போதைய சட்டத்தின் பிரகாரம், சிவில் சமூகம், ஊடக சமூகம் மற்றும் சட்டத்தரணிகள் சங்கம் ஆகியவற்றின் சிபாரிசுகளுடனேயே தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்களை ஜனாதிபதி நியமிப்பார்.
எனினும் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைய அனைத்து அதிகாரங்களும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கே வழங்கப்பட்டுள்ளன. எதிர்வரும் செப்டெம்பரில் எமது ஆணைக்குழுவின் பதவிக் காலம் முடிவடைகின்றது. இதன் பின்னர் தான் இந்த ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்கள் எவ்வாறு நியமிக்கப்படுவார்கள் என்பது தொடர்பில் அறிய முடியும்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிற்கு பலமான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கமைய, ஆணைக்குழுவின் தீர்மானங்களுக்கு கட்டுப்படாத அரச அதிகாரிகளுக்கு நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்பது முக்கிய விடயமாகும்.
தகவல் அறியும் விடயத்தில் இலங்கை மக்கள் எதிர்பார்த்ததை விட அதிகமானவையே இந்த சட்டத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். சில அரச நிறுவனங்களில் தகவல்களை வழங்குவதற்கு தகவல் அதிகாரிகள் இல்லை என்று கூறுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக அரச நிறுவனமொன்றின் தலைமை அதிகாரி தகவல் அதிகாரியாவர்.
ஷியாம்லால் யாதவ் - புலனாய்வு பிரிவின் சிரேஷ்ட ஆசிரியர், இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை
தகவல் அறியும் உரிமை, தகவலுக்கான சுதந்திரம் மற்றும் தகவலுக்கான அணுகல் எனும் பல்வேறு பெயர்களில் சுமார் 120 நாடுகளில் இந்த சட்டம் அமுலில் உள்ளது.
இந்த சட்டத்தினை யாரும் பகிரங்கமாக விமர்சிப்பதில்லை. எனினும் பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டொனி பிளயேர் மாத்திரம் பிரதமர் பதிவியினை இழந்த பின்னர் இந்த சட்டத்தினை விமர்சித்ததுடன் அதனை அமுல்படுத்தியது பாரிய தவறு என்றார்.
இந்தியாவில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போதே இந்த சட்டம் அமுல்படுத்தப்பட்டது. எனினும் இந்த சட்டத்தினை அவர் ஒருபோதும் விமர்சித்ததில்லை. இந்த சட்டத்தினை இந்தியாவில் அமுல்படுத்துவதற்கு தேவையான அழுத்தங்களை 1975 ஆம் ஆண்டிலிருந்து ஊடகங்கள் வழங்கி வந்தன.
இதுவரை 10,000 இற்கும் மேற்பட்ட தகவல் அறியும் விண்ணப்பங்களை நான் சமர்பித்துள்ளேன். அதற்காக 10,000 செய்திகளை நான் எழுதவில்லை. என்னைப் போன்று அனைத்து ஊடகவியலாளர்களும் இந்த சட்டத்தினை பயன்படுத்த வேண்டும். விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்ற போது ஒருபோதும் அதிருப்தியடைய வேண்டாம். தொடர்ச்சியாக விண்ணப்பிக்க வேண்டும்.
எத்தனை தகவல் அறியும் விண்ணப்பங்கள் தாக்கல் செய்தீர்கள் என்பது முக்கியமில்லை. அதன் ஊடாக எழுதிய செய்திகள் தான் முக்கியமானதாகும். கொவிட் – 19 இனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இந்திய பிரதமரினால் நிதியமொன்று உருவாக்கப்பட்டது.
இதற்கு கிடைக்கப் பெற்ற நிதி எவ்வளவு எனக் கோரி தாக்கல் செய்த தகவல் அறியும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதற்கு பதிலடி வழங்கும் வகையில் குறித்த நிதியத்திற்கு எவ்வளவு நிதித் தொகை வழங்கினீர்கள் எனக் கோரி நாட்டிலுள்ள 400 அரச நிறுவனங்களிடம் விண்ணப்பித்து முழு நிதித் தொகையினை அறிந்துகொண்டேன்.
ஊடகவியலாளர்களின் தகவல் அறியும் உரிமை விண்ணப்பம் நிராகரிக்கப்படும் போது இவ்வாறு தான் மேற்கொள்ள வேண்டும். இது போன்று இந்தியாவின் 607 மாவட்டங்களிலும் உள்ள அரச நிறுவனங்களுக்கு தகவல் அறியும் விண்ணப்பத்தினை சமர்ப்பித்துள்ளேன்.
இதற்கு கிடைக்கப் பெற்ற பதில்களின் ஊடாக பல செய்திகளை எழுதியுள்ளேன். அரச நிறுவனங்களினால் மக்களுக்கு வெளிப்படுத்தப்படாத தகவல்களை இந்த சட்டத்தின் ஊடாக வெளிக்கொண்டு வருவதே ஊடகவியலாளர்களின் பணியாகும்.
மாறாக, ஏற்கனவே அரச நிறுவனங்களினால் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்காக விண்ணப்பிப்பது ஊடகவியலாளர்களின் பணியல்ல. அரச நிறுவனங்கள் தாங்களாகவே முன்வந்து மக்களுக்கான தகவல்களை வழங்குவது முக்கியமான பணியாகும்.
இந்தத் துறையில் அனைத்து ஊடகவியலாளர்களும் பலமாக பணியாற்றுகின்றனர். இந்த சட்டம் மக்களுக்கானதாகும். இதனால் மக்கள் இந்த சட்டத்தினை வினைத்திறனாகப் பயன்படுத்த வேண்டும். அது போன்று தகவல் அறியும் ஆணைக்குழுவின் உறுப்பினர்களும் சுயாதீனமானவர்களாக இருக்க வேண்டும்.
குமார் நடசேன் - தலைவர், இலங்கை பத்திரிகை ஸ்தாபனம்
ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் அவசியாகும். இதற்கு அரசாங்கத்தினால் நாட்டில் அமுல்படுத்தப்படும் தகவல் அறியும் உரிமை சட்டம் ஒரு கருவியாகும்.
மக்களுக்கு சொந்தமான தகவல்கள் ஏன் மறைக்கப்படுகின்றன என்பது இதுவரை புரிந்துகொள்ள முடியாதுள்ளது. இதனால் தகவல்களை அரச அதிகாரிகள் தானாகவே முன்வந்து வழங்குவதன் ஊடாக நாட்டில் வெளிப்படைத் தன்மையை பேணி ஊழலை ஒழிக்க முடியும்.
Comments (0)
Facebook Comments (0)