பாராளுமன்ற சபைக்கு பிரதமரின் பிரதிநிதியாக அமைச்சர் டக்ளஸ் நியமனம்
பாராளுமன்ற சபைக்கு பிரதமரினால் நியமிக்கப்படும் பிரதிநிதியாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் முன்மொழிவிற்கு நேற்று (02) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் அனுமதி கிடைத்துள்ளது.
அதற்கமைய பாராளுமன்ற சபையின் பிரதமரினால் நியமிக்கப்படும் பிரதிநிதியாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சபாநாயகரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
20ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைய பாராளுமன்ற சபையின் கட்டமைப்பு மாற்றம் பெறும். அதற்கமைய பாராளுமன்ற சபை பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளடங்களாக பிரதமரினால் நியமிக்கப்படும் பிரதிநிதியொருவர் மற்றும் எதிர்க்கட்சி தலைவரினால் நியமிக்கப்படும் பிரதிநிதியொருவரை கொண்டிருக்கும்.
2020 பொதுத் தேர்தலில், யாழ். மாவட்டத்தில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவான டக்ளஸ் தேவானந்தா, அமைச்சரவை அமைச்சராகவும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவராகவும் விளங்குகின்றார்.
பாராளுமன்ற தெரிவுக்குழு, பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பான செயற்குழு, உயர் பதவிகள் தொடர்பான செயற்குழுவில் அங்கத்துவம் வகிக்கும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் தொடர்பான அமைச்சின் ஆலோசனைக் குழு தலைவராகவும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவராகவும் காணப்படுகின்றார்.
Comments (0)
Facebook Comments (0)