சஜித் ஜனாதிபதியானால் தானே பிரதமர்: ரணில்

சஜித் ஜனாதிபதியானால் தானே பிரதமர்: ரணில்

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான புதிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வெற்றி பெற்று ஜனாதிபதியான பின்னர் பிரதமராக தானே தொடர்ந்து செயற்படுவேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பு – 03 இலுள்ள அலரி மாளிகையில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் எமது கட்சியின் வேட்பாளரான சஜித் பிரேமதாஸ வெற்றி பெறுவது நிச்சயம். அவர் வெற்றி பெற்று ஜனாதிபதியான பின்னர் தானே பிரதமராக தொடர்ந்து செயற்படுவேன்.

அதேபோன்று அமைச்சரவையினால் நேற்று அங்கீகாரம் வழங்கப்பட்ட அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிறுவனத்தின், 480 மில்லியன் டொலர் கொடை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளோம். இந்த ஒப்பந்தம் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் இடம்பெறும்.

2015ஆம் ஆண்டு நாட்டை பொறுப்பேற்ற போது பாரிய கடன் சுமையிலிருந்தது. எனினும் கடந்த ஐந்து ஆண்டு காலப் பகுதிக்குள் பல்வேறு அபிவிருத்திகளை தனது தலைமையிலான அரசாங்கம் மேற்கொண்டதுடன் கடனை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருந்தது.

இக்காலப் பகுதியில் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்களை முன்னெடுத்திருந்தோம். எனினும் ஈஸ்டர் தற்கொலை தாக்குதல் மற்றும் கடந்த வருடம் ஓக்டோபரில் இடம்பெற்ற ஆட்சி கவிழ்பு நடவடிக்கை போன்றவற்றினால் புதிய பல செயற்திட்டங்களை எம்மால் முன்னெடுக்க முடியாமல் போனது.

அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து ஆட்சியினை முன்னெடுத்த போது நாங்கள் பல்வேறு சவால்களை எதிர்நோக்கினோம். எனினும் கடந்த டிசம்பரிலிருந்து ஐக்கிய தேசிய கட்சி தலைமையினால் அரசாங்கம் பொறுப்பேற்ற போது மிக இலகுவாக அரசாங்கத்தினை கொண்டு செல்ல முடிந்தது.

அடுத்த தேர்தலின் ஊடாக நிலையான அரசாங்கமொன்றை உருவாக்கும் போது பாரிய அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதுடன் அடுத்த ஐந்து வருடங்களில் பாரிய பொருளாதார வளர்ச்சியினை நாட்டில் மேற்கொள்ள முடியும்" என்றார்

-றிப்தி அலி-