நுண்நிதி கடன் தொடர்பில் வழிகாட்ட பங்களாதேஷ் தயார்
தற்போது இலங்கை எதிர்நோக்கியுள்ள நுண்நிதி கடன் விவகாரத்தில் வழிகாட்டல்களை வழங்க தயாராக உள்ளதாக பங்களாதேஷ் அறிவித்துள்ளது.
சபாநயகர் மஹிந்த யாப்பா அபேர்தனவிற்கு இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் தாரிக் அரிஃபுல் இஸ்லாமிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (17) திங்கட்கிழமை இடம்பெற்றது.
இதன்போதே பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் குறித்த அறிவிப்பினை மேற்கொண்டார்.
இதேவேளை, இரு நாடுகளிலும் காணப்படும் கொவிட் தொற்று நோய் சூழல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.
எப்பொழுதும் இலங்கையின் நட்பு நாடாக விளங்கும் பங்களாதேஷ் தொடர்ச்சியாக வழங்கிவரும் ஒத்துழைப்புக்கு சபாநாயகர் தனது பாராட்டைத் தெரிவித்தார்.
இலங்கையின் கைத்தறி தொழில்துறையின் அபிவிருத்தி மற்றும் நுண்நிதி கடன் விவகாரங்கள் போன்ற விடயங்களில் வழிகாட்டல்களை வழங்க பங்களாதேஷ் தயாராக இருப்பதாக உயர் ஸ்தானிகர் இதன்போது குறிப்பிட்டார்.
பல துறைகளில் குறிப்பாக ஆடை உற்பத்தித் தொழிற்சாலைகளில் பல்வேறு இலங்கையர்கள் உயர் பதவிகளை வகிப்பதன் ஊடாக பங்களாதேஷின் பொருளாதாரத்துக்கு வழங்கிவரும் ஒத்துழைப்புக்கும் உயர்ஸ்தானிகர் பாராட்டைத் தெரிவித்தார்.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இலங்கை - பங்களாதேஷ் நட்புறவு சங்கத்தை அமைப்பது கொவிட் சூழல் காரணமாக காலதாமதமாவதாகவும், இதன் பின்னர் இரு நாட்டு உறவுகள் பலப்படும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.
Comments (0)
Facebook Comments (0)