பிறை பார்த்தல் தொடர்பான அறிக்கை

பிறை பார்த்தல் தொடர்பான அறிக்கை

இன்று ஹிஜ்ரி 1442 ரஜப் மாதத் தலைப்  பிறை பார்க்க நாம் தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில் இவ்வறிக்கை வெளியிடப்படுகிறது.

பிறை என்பது உலகவாழ் முஸ்லிம் சமூகத்தினருக்கு மிக முக்கியமான விடயமாகும். முஸ்லிம்களின் வணக்க வழிபாடுகள் தொடங்கி விஷேட தினங்கள் அனைத்தும் இப்பிறையை மையமாக கொண்டே தீர்மானிக்கப்படுன்றது.

எனவே பிறை தீர்மாணித்தல் என்பது இஸ்லாத்தின் இஸ்லாமிய சமுதாயத்தில் மிக முக்கிய சம்பிரதாயமாக நிலவி வருகிறது. அந்த வகையில் இலங்கையில் மாதா மாதம் பிறை பார்த்து தீர்மானிக்கப்படுகிறது. 

முஸ்லிம்களின் முக்கிய வைபவங்களான றமழான், நோன்பு பெருநாள், ஹஜ்ஜூப் பெருநாள், முஹர்ரம் ஆகிய தினங்களில் இப்பிறை பார்த்தல் நடவடிக்கைகள் விஷேடமான முறையில் நடைபெற்று வருகின்றன.

இப்பிறை பார்த்தல் தொடர்பான விடயங்கள் கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு, அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவின் பிறைக்குழு மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகிய 03 அமைப்புக்களின் ஒருங்கிணைப்பின் கீழ் நடைபெற்று வருகின்றது.

அண்மைக் காலமாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கத்தின் கள உத்தியோகத்தர்கள் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்கள் மேற்படி பிறைக்குழுக்களோடு இணைந்து பிறை பார்த்தல் நிகழ்வுகளை மாவட்ட ரீதியாக ஒழுங்குபடுத்தி நடைமுறைப்படுத்தி வருவதுடன் இது தொடர்பான அறிக்கைகள் மற்றும் தகவல்கள் அவ் உத்தியோகத்தர்கள் ஊடாக திணைக்களத்திற்கு உரிய முறையில் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும் பிறை பார்த்தல் தொடர்பான விடயங்களை அறிந்து கொள்வதற்காக திணைக்கள உத்தியோகர்களுக்கு பயிற்சிகளும் வழங்கப்பட்டன. திணைக்களத்தினால் பிறை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்:

01. 25.06.2020, பிறை பார்த்தல் தொடர்பான விடயங்களை அறிந்து கொள்வதற்காக திணைக்கள உத்தியோகர்களுக்கு பயிற்சிகளும் வழங்கப்பட்டன.

02. 21.07.2020 - 20.08.2020 பிராந்திய பிறைக்குழுக்களுடன் ஸ்தலங்களில் பிறை பார்த்தல்  நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன (யாழ்ப்பாணம், கிளிநொச்சி, தலை மன்னார் ஆகிய ஸ்தலங்கள் நீண்ட காலத்தின் பின் உயிர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.)

03 21.07.2020 - 20.08.2020 பிறை மாநாடு முகநூலூடாக (FB) நேரலை செய்யப்பட்டது. இன்ஷா அல்லாஹ் இவ்வருடமும் ரமழான் , ஷவ்வால், துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய மாதங்களுக்கான தலைப்பிறை மாநாடு நேரலை செய்யப்படும்.

04 16.11.2020 - 16.12.2020 கோவிட் அசாதாரண சூழ்நிலை காரணமாக இணையவழியூடாக (ZOOM) பிறை மாநாடுகள் நடாத்தப்பட்டன.

05. திணைக்களமானது கொழும்பு பெரிய பள்ளிவாசல், ஜம்மிய்யதுல் உலமா ஆகியவற்றுடன் இணைந்து பிறை பார்த்தல் பணிகளில் முழுமையாக பங்களிப்பு வழங்கி வருகின்றது.

மேலும் கடந்த காலங்களில் பிறை பார்த்தல் தொடர்பான பொதுவான, ஏற்றுக்கொள்ளப்பட்ட செயன்முறையொன்று (Standard operational procedures) இல்லாமையினால் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் பல்வேறான பிணக்குகளும் சந்தேகங்களும் ஏற்பட்டன.

உதாரணமாக 2018ஆம் ஆண்டு ஷவ்வால் மாத பிறை தொடர்பாக ஏற்பட்ட முசலி, பலகத்துர, அக்கரைப்பற்றில் ஏற்பட்ட பிரச்சினைகள் மற்றும் 2014 ஆம் ஆண்டு ஷவ்வால் மாத பிறை தீர்மானிப்பது தொடர்பாக கிண்ணியாவில் ஏற்பபட்ட பிரச்சினை என்பவற்றை குறிப்பிடலாம்.

அந்த வகையில் இப் பிறை பார்த்தல் செயன்முறையினை சரியான நியமங்களுக்குட்படுத்தி ஒரு ஒழுங்கிற்கு உட்படுத்தப்பட  வேண்டும் என்பதனையும் நோக்காக கொண்டு 2020.07.16ஆம் திகதி திணைக்கள பணிப்பாளரின் தலைமையின் கீழ் பிறைக் குழுக்கள் மற்றும் வானிலை அவதான நிலைய அதிகாரிகள் ஆகியோரினை உள்ளடக்கியவாறான கூட்டம் நடைப்பெற்றது.

மேற்படி கூட்டங்களில்  இப்பிறை பார்த்தல் தொடர்பாக பொதுவான வினைத்திறனுடைய ஒரு செயன்முறை உருவாக்கப்பட வேண்டுமென்ற தீர்மானம் எட்டப்பட்டதுடன் அவை தொடர்பான முன்மொழிவுகளை கொழும்பு பெரிய பள்ளிவாசல் மற்றும் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையிடமும் கோரப்பட்டன.

எனினும் தற்போது 05 மாதங்கள் கடந்துள்ள நிலையில் தொடர்ந்தும் இவ்வரு தரப்பாரின் ஒத்துழைப்புடன் பொது செயன்முறை ஒன்று உருவாக்கும் முயற்சியில் திணைக்களம் தொடர்ந்தும் முயற்சித்துக் கொண்டிருக்கின்றது. 

இம்முயற்சி வெற்றியடையும் பட்சத்தில்  எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகத்தினரிடையில் நிழவிவரும் சந்தேகங்களை களைய முடிவதுடன் பிணக்குகளையும் ஒரு தீர்விற்கு கொண்டு வர முடியும்.

மேலும் முஸ்லிம்களின் ஒவ்வொரு விஷேட தினங்கள் மற்றும் பண்டிகைகளை சந்தேகங்கள் மற்றும் பிரச்சினைகளற்ற முறையில் ஒற்றுமையாகவும் சந்தோசமாகவும் ஒன்றிணைந்து கொண்டாட முடியும்.

ஏ.பி. எம்.அஷ்ரப்
பணிப்பாளர்
முஸ்லீம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்.
12.02.202