முஸ்லிம் தனியார் சட்டத்தை மாத்திரமன்றி அனைத்து தனியார் சட்டங்களையும் நீக்க வேண்டும்: அலி சப்ரி

ஒரு நாடு, ஒரு சட்டம் என்ற அடிப்படையில் செயற்படுவதாக இருந்தால்,  முஸ்லிம் தனியார் சட்டத்தை மாத்திரம் நீக்கிவிட்டு செயற்படுத்த முடியாது.  அனைத்து தனியார் சட்டங்களையும் இல்லாமலாக்க வேண்டும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

அவ்வாறு இல்லாமல் முஸ்லிம் தனியார் சட்டத்தை மாத்திரம்  பேசுபொருளாக்கிக்கொண்டு, இனங்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவது முறையல்ல எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துரலியே ரத்தன தேரரால் 27, 2இன் கீழ் பாராளுமன்றத்தில் முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பாக கேட்கப்பட்டிருந்த கேள்விக்கு இன்று (12) வெள்ளிக்கிழமை பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

"ஒரு நாடு ஒரு சட்டம் என்பதன் மூலம் அர்த்தப்படுவது நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக, அனைத்து இடங்களிலும்  சட்டம் செயற்படுத்தப்பட வேண்டும் என்பதாகும். மேலும் இலங்கையில் தனியார் சட்டங்கள் செயற்படுவது தொடர்பாக அவர் கேட்டிருந்தார்.

எமது நாட்டில் மலை நாட்டு விவாக விவாகரத்து, மரபுரிமை சட்டம், யாழ்ப்பாண விவாக, மரபுரிமை சட்டம்,தேசவளாமை சட்டம், முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம், முஸ்லிம் மரபுரிமை  சட்டம், பெளத்த தேவாலயம் மற்றும் விகாரை சட்டம், இந்து கலாசார சட்டம், முஸ்லிம் வக்பு சட்டம் மற்றும் சிலோன் சேர்ச் சட்டம் என பல தனியார் சட்டங்கள் செயற்படுகின்றன.

அத்துடன் தனியார் சட்டம் இலங்கையில் மாத்திரமல்ல, இந்தியா, பிலிப்பீன், இஸ்ரேல், சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் முஸ்லிம் சமூகத்துக்கு முஸ்லிம் சட்டம் செயற்படுகின்றன.

அதனால்  எதிர்காலத்தில் இதனை மாற்றி பொதுவாக ஒருநாடு சட்டம் என்ற அடிப்படையில் செயற்படுவதாக இருந்தால், அதனை முஸ்லிம் தனியார் சட்டத்தை மாத்திரம் நீக்கிவிட்டு செயற்படுத்த முடியாது.

அப்படியாயின் அனைத்து தனியார் சட்டங்களையும் இல்லாமலாக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் முஸ்லிம் தனியார் சட்டத்தை மாத்திரம்  பேசுபொருளாக்கிக் கொண்டு, இனங்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவது முறையல்ல.

அத்துடன் முஸ்லிம் தனியார் சட்டம் புனித குர்ஆனை அடிப்படையாக் கொண்டு ஏற்படுத்தப்பட்டதொன்று அல்ல. 1806 மொஹமடாங்கோட் என்ற ஆங்கிலயர் என்பவரால் முஸ்லிம்களுக்கு முஸ்லிம் விவாவ, விவாகரத்து, மரபுரிமை சட்டம், தமிழர்களுக்கு யாழ்ப்பாண தேசவளாமை சட்டம் கண்டி மக்களுக்கு கண்டிய சட்டம் செயற்படுத்தப்பட்டது.

அவை காலப்போக்கில் பரினாம வளர்ச்சியடைந்து மாற்றங்கள் மேற்கொளள்ளட்டு செயற்படுத்தப்படுகின்றன. அத்துடன் முஸ்லிம் பெண்கள் பலவந்தமாக அவர்களின் விருப்பம் இல்லாமல் திருமணம் முடித்துவைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுவதில் உண்மை இல்லை.

ஆனால் இடம்பெறுவது, அந்த பெண்ணின் விருப்பத்தை பெற்றுக்கொண்டு தந்தை கைச்சாத்திடுவதாகும். அதில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டுமாக இருந்தால் அது தொடர்பாக கலந்துரையாடி மாற்றங்களை மேற்கொள்ளலாம்.

பெண்களின் திருமண வயது பல்வேறு நாடுகளில் பலவிதமாக இருக்கின்றது. அமெரிக்காவில் சில பிராந்தியங்களில் இன்னும் 13 ஆகவே இருக்கின்றது. ஜப்பானில் 15 வயது, இலங்கையில் மலைநாட்டு சட்டத்தின் பிரகாரம் 1997 வரைக்கும் பெண்களின் திருமண வயது 16 ஆகும்.

முஸ்லிம் சட்டத்தின் பிரகாரம் 12 வயதை தாண்டி, அவள் பருவமடைந்த பின்னர் விருப்பத்தை பெற்றுக்கொண்டு திருமணம் முடிக்கலாம். இது முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாத்திரமல்ல மலைநாட்டு விவாக சட்டம் மற்றும் சாதாரண விவாக சட்டத்தின் பிரகாரம் 18 வயதுக்கு குறைந்த பெண்களை பெற்றோர்களின் விருப்பத்துடன் திருமணம் செய்து வைக்க முடியும் என இருக்கின்றது.

என்றாலும் 18ஆம் திருத்தச் சட்டத்திலே அது மாற்றப்பட்டது. அதனை மாற்றுவதற்கான காலம் வந்திருக்கின்றது. அதில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பதில் நாங்கள் இணங்குகின்றோம்.  

சவூதி அரேபியாவிலும் திருமணத்துக்கான குறைந்த வயதாக 18 வயதை நிர்ணயித்திருக்கின்றது. அதன் பிரகாரம் முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருமண வயதை 18ஆக நிர்ணயிப்பது தொடர்பாக பிரேரிக்கப்பட்டிருக்கின்றது.

இது தொடர்பாக அமைச்சரவை பத்திரம் ஒன்றையும் நான் சமர்ப்பித்திருக்கின்றேன். பெண்கள் விவாக பத்திரத்தில் கைச்சாத்திட வேண்டும் எனவும் அதில் பிரேரித்திருக்கின்றோம்.

அது தொடர்பாக ஆராய்வதற்கு குழு அமைக்கப்பட்டிருக்கின்றது. அதனால் முஸ்லிம் விவாகம் தொடர்பான சட்டம் பொதுவான சட்டத்துக்கு நிகரான வகையில் மாற்றங்களை மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

அத்துடன் சிறுவயதில் திருமணம் ஆகுவதால் பிரச்சினைகள் ஏற்படுவதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். இலங்கையில் சிறு வயது திருமணம் இடம்பெறுவது எவ்வாறு இடம்பெற்றாலும், விவாகம் செய்யாமல் சிறிய வயதில் குழந்தைகளை பெற்றுக்கொண்ட தாய்மார்கள் இருக்கின்றனர்.

இதில் 80 வீதமானவர்கள் முஸ்லிம் சமூகத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்பதை நாங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். இது தொடர்பாகவும் நாங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

எனவே முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள நாங்கள் நடவடிக்கை எடுப்போம். அதேபோன்று ஒருநாடு சட்டம் என்ற அடிப்படையில் செயற்பட வேண்டும் என அரசாங்கம் நினைத்தால் அதனை புதிய அரசியலமைப்புடன் மேற்கொள்ள அனைத்து தரப்பினருடன் கலந்துரையாடி மேற்கொள்ள வேண்டும்" என்றார்.