கல்முனை பெரிய பள்ளிவாசலுக்கு புதிய நிர்வாக சபை நியமிக்க அமைச்சரினால் தடை
றிப்தி அலி
கல்முனை முஹைதீன் பெரிய ஜும்ஆ பள்ளிவாசலுக்கான புதிய நிர்வாக சபை உறுப்பினர்களை நியமிப்பதற்கு வக்பு சபை மேற்கொண்ட தீர்மானத்தினை உடனடியாக இடைநிறுத்துமாறு சமய விவகார மற்றும் புத்தசாசன அமைச்சர் விதுர விக்ரமநாயக்க உத்தரவிட்டுள்ளதாக அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த உத்தரவு, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஐ. அன்சாரிற்கு அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவினால் கடந்த செவ்வாய்க்கிழமை (06) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக அடிப்படையில் ஒரு வருடத்திற்காக நியமிக்கப்பட்ட கல்முனை முஹைதீன் பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாக சபையின் பதவிக் காலம் கடந்த 2008ஆம் ஆண்டுடன் நிறைவடைந்து விட்டது.
அரசியல் தலையீடுகள் காரணமாக இப்பள்ளிவாசலுக்கான புதிய நிர்வாகம் கடந்த 14 வருடங்களாக வக்பு சபையினால் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்படவில்லை.
இதனால் பல கோடி ரூபாய் சொத்துக்களைக் கொண்ட இப்பள்ளிவாசல், தனிநபரொருவரினால் கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேலாக நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. இந்த விடயம் தொடர்பில் பல்வேறு தரப்பினரால் வக்பு சபையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனையடுத்து, வக்பு சபையின் உத்தரவிற்கமைய முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் குழுவொன்று கல்முனைக்கு கள விஜயம் செய்து பல்வேறு தரப்பினரை நேடியாக சந்தித்தனர்.
இதன் பின்னர் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வக்பு சபைக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையினை அடிப்படையாகக் கொண்டு 31 பேர் கொண்ட புதிய நிர்வாக சபையினை நியமிக்க வக்பு அண்மையில் தீர்மானித்தது.
இதன் பிரகாரம், குறித்த பள்ளிவாசலுக்கான புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் நியமனம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்னும் ஒருரிரு தினங்களில் மேற்கொள்ளப்படவிருந்தது.
இந்த நிலையிலேயே குறித்த நியமனத்தினை உடனடியாக இடைநிறுத்துமாறு சமய விவகார மற்றும் புத்தசாசன அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவினால் உத்தரவிடப்பட்டுள்ளது.
இப்பிரதேச அரசியல்வாதியொருவரின் அழுத்தம் காரணமாகவே அமைச்சரினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
எவ்வாறாயினும், வக்பு சபையின் தீர்மானத்தில் தலையீடுகளை மேற்கொள்ளும் அதிகாரம் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கில்லை என 1956ஆம் ஆண்டின் 51ஆம் இலக்க வக்பு சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Comments (0)
Facebook Comments (0)