மலையக மக்கள் முன்னணியில் இருந்து அனுஷா நீக்கம்
மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகரும் முன்னாள் தலைவருமான அமரர் பெ. சந்திரசேகரனின் மகளான சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் அக்கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
அனுஷா சந்திரசேகரனுக்கு வழங்கப்பட்டிருந்த பிரதி செயலாளர் நாயகம் பதவி, அம்முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினரும் பேராசிரியருமான விஜயச்சந்திரனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மலையக மக்கள் முன்னணியின் எதிர்கால நடவடிக்கைகள், தேர்தல் செயற்பாடுகள் தொடர்பிலான கலந்துரையாடல், முன்னணியின் தலைவர் வே.இரதாகிருஷ்ணன் தலைமையில், முன்னணியின் பிரதான அலுவலகத்தில், நேற்று (7) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதன்போதே, கட்சியின் பிரதிச் செயலாளர் நாயகம் பதவியிலிருந்து அனுஷா நீக்கப்பட்டதுடன், அவ்விடத்துக்குப் பேராசிரியர் விஜயச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது போன்றே 2015ஆம் ஆண்டளவில் அமரர் பெ. சந்திரசேகரனின் மனைவியும் குறித்த கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அனுஷா சந்திரசேகரன் பொதுத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் காரணத்தினாலேயே அவர் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்துரைத்த மலையக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் லோரன்ஸ்,
"மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான அமரர் சந்திரசேகரனின் மறைவுக்குப் பின்னர், அவரைக் கௌரவப்படுத்தும் வகையில், அனுஷா சந்திரசேகரனுக்கு பிரதி செயலாளர் நாயகம் பதவியை வழங்கியதாகவும் ஆனால், அவருடைய சுயநலத்துக்காக அவர் கட்சியின் விதிமுறைகளை மீறிச் செயற்பட்டதன் காரணமாக, அவரைத் தற்காலிகமாகக் கட்சியிலிருந்து நீக்கியுள்ளோம்.
அவர் கட்சியின் அடிப்படை உரிமையிலிருந்தும் கட்சியின் மத்திய குழுவில் இருந்தும் கட்சியின் அரசியல் உயர் பீடத்திலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். எதிர்காலத்தில் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர் கட்சியிலிருந்து முழுமையாக வெளியேற்றப்படுவார்" என்றார்.
இதேவேளை, "மலையக மக்கள் முன்னணியின் யாப்பின் ஏற்பாடுகளின், சரத்துக்களுக்கமைய நான் நீக்கப்படவில்லை" என அனுஷா சந்திரசேகரன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
"மலையக மக்கள் முன்னணியிலிருந்து நான் நீக்கப்பட்டதாக ஊடகத்தின் வாயிலாக அறிந்தேன். இதற்கு நான் ஒரு சட்டத்தரணியாக பதிலளிப்பதே பொருத்தமானதாக இருக்கும்.
மலையக மக்கள் முன்னணியின் யாப்பின் ஏற்பாடுகளின், சரத்துக்களுக்கமைய நான் நீக்கப்படவில்லை. நானே பிரதி செயலாளர் நாயகமாக இன்றளவிலும் இருக்கிறேன். நான் பதவியிலிருக்கும் போதே இன்னொருவரை நியமித்ததற்கு எதிராக என்னால் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். புரட்சி தலைவன் அமரர் சந்திரசேகரனின் மகளாக சட்டம் படித்த ஒரு சட்டத்தரணியாக இவ்வாறான ஊடக அறிக்கைகளால் ஒருபோதும் என்னை பின்னடைய செய்யவோ அல்லது என்னுடைய அரசியல் பயணத்தை தடுக்கவோ இயலாது.
எனது தந்தை அமரர் சந்திரசேகரன் எவ்வாறு 1994ஆம் ஆண்டு தனித்து களமிறங்கினாரோ அதேபோன்று எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலிலும் நான் தனித்து களமிறங்குவதும் வெல்வதும் உறுதி.
இம்முறை தேர்தலில் வெற்றி பெற்று அமரர் சந்திரசேகரன் வழிவந்த மலையக மக்கள் முன்னணி ஆதரவாளர்களுக்கும் மலையக மக்களுக்காகவும் எனது குரல் என்றென்றும் ஒலிக்கும்" என்றார்.
Comments (0)
Facebook Comments (0)