கொரோனாவினால் முஸ்லிம்கள் உயிரிழந்தால் இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்ய நடவடிக்கை: இராணுவத் தளபதி
முஸ்லிம்கள் கொரோனா தொற்று ஏற்பட்டு மரணித்தால், அவர்களுடைய உடலை இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்ய, தன்னால் முடிந்த உதவிகளை வழங்குவதாக, இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இராணுவ தலைமையகத்தில் இன்று செவ்வாய்கிழமை (31ஆம் திகதி) நடந்த முஸ்லிம் தரப்புடனான சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கொரோனா ஒழிப்புக்கு முஸ்லிம்கள் ஒத்துழைப்புச் செய்தல், இணைந்து செயற்படல், இது பற்றி அறிவுறுத்தல்களை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பற்றி இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன் கொரோனாவினால் முஸ்லிம்கள் எவரேனும் மரணித்தால், அவர்களின் உடல்களை இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்வதற்கு, தம்மால் முடிந்த உதவிகளை செய்வதாகவும், இது தமது பணி அல்ல என்ற போதிலும், உரிய தரப்பினருடன் தாம் இது பற்றி கலந்துரையாடுவதாகவும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.றிஸ்வி முப்தி உள்ளிட்ட பலர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இன்றைய சந்திப்பு வெற்றியளிக்க இறைவனிடம் பிரார்த்திக்குமாறு இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவரிடமும் வேண்டுகோள் விடுப்பதாக றிஸ்வி முப்தி தெரிவித்தார்.
குறிப்பாக தஹஜ்ஜத் மற்றும் ஐந்து நேர தொழுகைகள் ஆகியவற்றில் இறைவனிடம் துஆ கேட்டுகுமாறு அவர் கூறினார்.
Comments (0)
Facebook Comments (0)