முஸ்லிம் விவாக விவாரத்துச் சட்டம்: அமைச்சரவையின் தீர்மானத்திற்கு ஜம்இய்யத்துல் உலமா அதிருப்தி
முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் தொடர்பில் எந்தவித ஆலோசனைகளை கருத்திற்கொள்ளாமல் அமைச்சரவையினால் சில தீர்மானங்களை மேற்கொண்டிருப்பது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அதிருப்தியையும்இ கவலையையும் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"இந்நாட்டு முஸ்லிம்கள் 1000 வருடங்களுக்கு மேலாக தமது மத மற்றும் கலாச்சார விவகாரங்களையும், மார்க்க சட்டதிட்டங்களையும் எவ்வித பிரச்சினையுமின்றி பின்பற்றி வந்துள்ளதுடன் இது சட்ட அமைப்பில் தொகுக்கப்பட்டு ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் காலத்திலும், சுதந்திரத்திற்கு பின்பும் இன்றுவரை முஸ்லிம் தனியார் சட்டம் என்ற அடிப்படையில் சட்ட ரீதியாக இந்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இச்சட்டங்கள் முஸ்லிம்களின் மார்க்க விடயங்களோடு தொடர்புபட்டிருப்பதால் ஆட்சியாளர்கள் முஸ்லிம் சமூகத்தின் கருத்துக்களை உரிய முறையில் உள்வாங்கியே இதில் தேவையான மாற்றங்களை செய்து வந்துள்ளனர்.
முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் காணப்படும் சில விடயங்களில் காலத்திற்குத் தேவையான மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்பதில் நாம் உடன்படுகின்றோம். குறிப்பாக பெண்களின் ஆதங்கங்கள் இம்மாற்றங்கள் மூலம் தீர்க்கப்பட வேண்டும்.
எனினும், இது முஸ்லிம்களது மார்க்கத்தோடு சம்பந்தப்பட்டிருப்பதனாலும், ஒரு முஸ்லிமுடைய வாழ்க்கை அவனது மார்க்கத்தோடு இணைக்கப்பட்டிருப்பதனாலும் இம்மாற்றங்கள் மார்க்க அடிப்படைகளுக்கு முரணில்லாத வகையிலும் உரிய தரப்பினரினருடன் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களை உள்வாங்கியுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.
காலத்திற்குத் தேவையான இம்மாற்றங்கள் குறித்த முன்மொழிவுகளை ஏற்கனவே பல தடவைகள் பல கட்டங்களில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளது.
இந்நிலையில் இஸ்லாமிய மார்க்க, சிவில் நிறுவனங்களுடைய ஆலோசனைகளை கருத்திற் கொள்ளாமல் அமைச்சரவையில் முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் சம்பந்தமாக சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருப்பது மிகக் கவலைக்குரிய விடயமாகும். இவ்விடயத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது அதிருப்தியையும், கவலையையும் தெரிவித்துக் கொள்கின்றது.
எனவே, அமைச்சரவையின் இத்தீர்மானங்கள் தொடர்பில் மீள்பரிசீலனை செய்யும்படியும், குறித்த விடயங்கள் தொடர்பான மார்க்க அடிப்படைகளை உரிய முறையில் கவனித்து, நாட்டின் அனைத்து பிரஜைகளின் உரிமைகளையும் மதித்து, எவருக்கும் அநீதி இழைக்கப்படாத வகையில், இந்நாட்டின் பல்லின கலாச்சாரத்தைப் பேணக்கூடிய விதத்தில், அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்த ஒரு பொறிமுறை மூலம் இவ்விடயங்கள் தொடர்பாக தீர்மானங்களை மேற்கொள்ளும் படியும் அரசாங்கத்தையும், நீதி அமைச்சரையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மிக அன்பாக வேண்டிக் கொள்கின்றது.
மேற்கூறிய அடிப்படையில் நாட்டினதும், முஸ்லிம் சமூகத்தினதும் நன்மைக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் எடுக்கப்படக் கூடிய சகல முன்னெடுப்புக்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்பதையும் நாம் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.
நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு தீர்மானமும் நமது நாட்டுக்கும், நமது எதிர்கால சந்ததியினருக்கும் நலவுகளையும், பிரயோசனங்களையும் உண்டாக்க வேண்டுமென பிரார்த்திக்கின்றோம்" என்றார்.
Comments (0)
Facebook Comments (0)