தங்க விலை அசுர வேகத்தில் அதிகரிப்பு
றிப்தி அலி
கடந்த 12 நாட்களுக்குள் தங்கத்தின் விலை அசுர வேகத்தில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கமைய இன்று (18) வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் கொழும்பு, செட்டியா தெருவில் ஒரு பவுண் 24 கரட் தங்கத்தின் விலை 162,000 ரூபாவாக காணப்படுகின்றது.
இலங்கை மத்திய வங்கியினால் அமெரிக்க டொலருக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு கடந்த மார்ச் 7ஆம் திகதி நீக்கப்பட்டதினை அடுத்தே தங்கத்தின் விலையில் பாரிய மாற்றம் ஏற்பட்டது.
ஏற்கனவே ரஷ்யா மற்றும் உக்ரேன் ஆகிய நாடுகளுக்கு இடையிலான யுத்தம் காரணமாக உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து காணப்பட்டது.
இதனால், கடந்த மார்ச் 7ஆம் திகதி ஒரு பவுண் 24 கரட் தங்கத்தின் விலை 132,000 ரூபாவாக காணப்பட்டது. இந்த நிலையில் அமெரிக்க டொலரின் விலை அதிகரித்து ரூபாவின் பெறுமதி குறைந்தமையினால் கடந்த மார்ச் 12ஆம் திகதி சனிக்கிழமை ஒரு பவுண் 24 கரட் தங்கத்தின் விலை 145,000 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இந்த வாரமும் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டது. இதற்கமைய கடந்த புதன்கிழமை (16) மாலை கொழும்பு - 11, செட்டியார் தெருவில் ஒரு பவுண் 24 கரட் தங்கத்தின் விலை 156,000 ரூபாவாக காணப்பட்டது.
இந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை 160,000 ரூபாவாக காணப்பட்ட ஒரு பவுண் 24 கரட் தங்கத்தின் விலை, பிற்பகல் வேலையில் 162,000 ரூபாவாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினை காரணமாக எதிர்காலத்திலும் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Comments (0)
Facebook Comments (0)