அம்பாறை மாவட்ட கிராமங்களை அச்சுறுத்தும் காட்டு யானைகள்

அம்பாறை மாவட்ட கிராமங்களை அச்சுறுத்தும் காட்டு யானைகள்

றிப்தி அலி

"எனது வீட்டின் இரண்டு சுவர்த் துண்டுகளை யானையொன்று கடந்த சனிக்கிழமை (12) நள்ளிரவு 2.00 மணியளவில் உடைத்துவிட்டு சென்றுள்ளது. இதனால், எங்களது குடும்பம் மிகவும் அச்சத்துடனேயோ இரவில் நித்திரை செய்கின்றோம்" என சம்மாந்துறை, மலையடி கிராமத்தினைச் சேர்ந்த எம்.ஏ. உம்மு சல்மா கூறினார்.

எட்டு பிள்ளைகளின் தாயான இவர், கடந்த 50 வருடங்களாக இக்கிராமத்திலேயே வாழ்ந்து வருகின்றார். எனினும், இந்தக் கிராமத்திற்குள் முதற் தடவையாக யானையொன்று புகுந்துள்ளமை ஆச்சரியமாக இருக்கின்றது என அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார சுமைக்கு மத்தியில் எதிர்பாராத விதமாக இடம்பெற்ற யானைத் தாக்குதலினால் சேதமாக்கப்பட்டுள்ள சுவர்களை நிர்மாணிக்க பல்லாயிரம் ரூபாய்களை செலவிக்க வேண்டியுள்ளது என உம்மு சல்மா கவலையுடன் தெரிவித்தார்.

இவரின் வீட்டுக்கு அருகில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியசாலை காணப்படுகின்றது. அதில் சுமார் 15 இலட்சம் கிலோ நெல் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது. இங்குள்ள நெல்லினைத் தேடியே இந்த யானை வந்திருக்க வேண்டும் அவர் சந்தேகின்றார்.  

உம்மு சல்மாவின் வீட்டினைப் போன்று சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நான்கு கிராம சேவையாளர் பிரிவுகளிலுள்ள   12 இடங்கள் யானையொன்றினால் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய, "கல்லரிச்சல் - 2 கிராம சேவையாளர் பிரிவில் இரண்டு  இடங்களிலும், புளேக் ஜே கிழக்கு கிராம சேவையாளர் பிரிவில் நான்கு இடங்களிலும், மலையடி கிராமம் - 2 கிராம சேவையாளர் பிரிவில் ஐந்து இடங்களிலும், விளினையடி - 1  கிராம சேவையாளர் பிரிவில் ஒரு இடத்திலும் யானை சேதப்படுத்தியுள்ளது" என சம்மாந்துறை பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் எம்.எஸ்.எம். அஸாறுடீன் தெரிவித்தார்.

சுமார் 50 வருடங்கள் பழைமை வாய்ந்த நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியசாலை உட்பட நெல் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த இடங்களே அதிகமாக யானையினால் சேதத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளன. எனினும் எந்தவித உயிர் ஆபத்துக்களும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை.

"எமது ஊரின் எல்லைப் பிரதேசங்களில் பல தடவைகள் யானைகள் வந்து போயுள்ளன. எனினும் நடு ஊரிற்குள் யானை நுழைந்தமை இதுவே முதல் தடவையாகும்" என சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை உறுப்பினரான எம்.சீ.எம். ஹாரீஸ் தெரிவித்தார்.

மக்கள் சத்தமிட்டே குறித்த யானையினை துரத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார். ஹாரீஸினால் நடத்தப்படும் முன்பள்ளி பாடசாலையின் மதில்களும் யானையினால் உடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

"தாவர உண்ணியான யானை - புற்கள், தென்னை, வாழை, சோளம், கரும்பு மற்றும் மூங்கில் ஆகியவற்றினை விரும்பி உண்கின்றன. 24 மணித்தியாலங்களில் சுமார் 18 மணித்தியாலங்கள் 140 – 270 கிலோ வரையான உணவினை ஒரு யானை உட்கொள்கின்றது" என தென் கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரான ஏ.எம்.றியாஸ் அஹமட் எழுதிய 'யானைகள்' எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் புத்தங்கல பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதியினை அண்டிய பிரதேசங்களில் இடம்பெறும் சட்டவிரோத குடியேற்றங்கள் காரணமாக அங்குள்ள யானைகளுக்கு இடையூறு ஏற்படுவதுடன், உணவுத் தட்டுப்பாடும் ஏற்படுகின்றது என வனஜீவராசிகள் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட அலுவலகத்தின் சிரேஷ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இதனால், உணவு தேடி யானைகள் இம்மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களை நோக்கி நகர்கின்றன. இவ்வாறு உணவு தேடி நகர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட யானைகளைக் கொண்ட கூட்டமொன்றினை கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில் மாவடிப்பள்ளி, காரைதீவு மற்றும் நிந்தவூர் பிரதேசங்களில் காண முடிந்தது.

இந்த யானைகள், புத்தங்கல சரணலாயத்திலிருந்து வளத்தாப்பிட்டி மற்றும் சொறிக் கல்முனை ஊடாகவே இங்கு வந்துள்ளன. இவ்வாறு வருகை தந்த யானைகளில் ஒன்று கட்டுப்பாட்டினை இழந்து சம்மாந்துறை பிரதேசத்திற்குள் நுழைந்தமையினாலேயே மேற்குறிப்பிட்ட 12 இடங்களில் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

இந்த யானையின் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சம்மாந்துறை பிரதேச செயலாளரின் ஆலோசனைக்கமைய நஷ்டஈடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் அனர்த்த நிவாரண உத்தியோகத்தரினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள 25 மாவட்டங்களில் 18 மாவட்டங்கள் யானைப் பிரச்சினையினை எதிர்நோக்கியுள்ளன. இதில் 8 மாவட்டங்களில் அடிக்கடி யானை – மனித மோதல் பதிவாகியுள்ளது. இதில் அம்பாறை மாவட்டமுமொன்றாகும் என  வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இம்மாவட்டத்தில் நெற் செய்கை இடம்பெறுகின்ற சமயத்தில் புத்தங்கல காட்டினை அண்மித்த பகுதியிலுள்ள விவசாயிகள் காவல் பணியில் ஈடுபடுகின்றமையினால் அக்காலப் பகுதியில் யானைகளின் வருகை கட்டுப்படுத்தப்படுகின்றது.

எனினும், நெல் அறுவடை செய்யப்பட்டதினை அடுத்தே இம்மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களில் யானைகளின் வருகை அதிகரிக்கின்றது. இதனால், காட்டு யானைகளிடமிருந்து வேளாண்மைகளை பாதுகாத்துக் கொள்ளமுடியாத நிலைக்கு ஒரு தொகுதி விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

நிந்தவூர் - நெல்லித்தீவினை அண்டிய வயற் பிரதேசத்தில் சுமார் 150 ஏக்கர் வேளாண்மை கடந்த சனிக்கிழமை (13) வரை அறுவடை செய்யப்படவில்லை. "பகலிலும், இரவிலும் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துள்ளமையினால் 105 நாட்களில் அறுவடை செய்ய வேண்டிய வேளாண்மையினை 90 நாட்களில் அறுவடை செய்கின்றோம்" என விவசாயிகள் தெரிவித்தனர்.

"முழுமையாக முற்றாத நிலையில் யானைகளிடமிருந்து விவசாயத்தினை பாதுகாக்கும் நோக்கில் பச்சை கதிர்களுடன் அறுவடை செய்கின்றமையினால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்காது" எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இரசாயன பசளைக்கு நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பல்லாயிரக்கணக்கான ரூபாய்கள் செலவளித்து கடந்த 4 – 5 மாதங்கள் மேற்கொண்ட விவசாயத்திற்கு தற்போது எந்தப் பயனுமில்லாமல் போய்விட்டது எனவும் அப்பிரதேச விவசாயிகள் கவலை வெளியிட்டனர்.

இதேவேளை, பொதுமக்கள் வாழும் பிரதேசங்களில் யானை நுழைவதை தடுக்கும் நோக்கில் பல கோடிக்கணக்கான ரூபாய்களை செலவளித்து மின்சார வேலி அமைத்தல், அகழி தோண்டல் போன்ற வேலைத்திட்டங்கள் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படுகின்றன.

இதற்கமைய நாடளாவிய ரீதியில் 5,000 கிலோ மீற்றர் மின்சார வேலிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இதில் 150 கிலோ மீற்றர் மின்சார வேலிகள் அம்பாறை மாவட்டத்தில் காணப்படுகின்றன.

எனினும் யானை - மனித மோதல் குறைவடைந்தபாடில்லை. இவ்வாறான நிலையில், ஒலுவில், பள்ளக்காடு பிரதேசத்திலுள்ள குப்பை மேட்டில் உணவு உண்பதற்காக யானைகள் அடிக்கடி வருகின்றன.

இந்தக் குப்பையிலுள்ள பிளாஸ்ரிக் பொருட்களை உண்பதனால் கடந்த எட்டு வருடங்களில் சுமார் 20 யானைகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது. இதனையடுத்து குப்பை மேட்டினைச் சுற்று அகழி தோண்டப்பட்டு யானைகள் உள்நுழைவதை தடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதனால் ஆத்திரமடைந்த யானைகள், மக்கள் வாழும் அஷ்ரப் நகரிற்குள்  நுழைந்து மக்களின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதாக அப்பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

யானை - மனித மோதலை கட்டுப்படுத்துவதனை நோக்காகக் கொண்டு செயற்படுகின்ற வனஜீவராசிகள் திணைக்களத்தின் அம்பாறை மாவட்டத்திற்கான மூன்று அலுவலகங்கள் - அம்பாறை நகர், வளத்தாப்பிட்டி மற்றும் திருக்கோவில் ஆகிய பிரதேசங்களில் காணப்படுகின்றன. எனினும், இந்த அலுவலகங்களிற்கு தேவையான போதிய வளங்கள்  இன்னும் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன.

இதேவேளை, "நாட்டில் மேற்கொள்ளப்படும் திட்டமிடப்படாத அபிவிருத்தித் திட்டங்களினால் யானைகளின் வாழ்விடங்கள் அழிக்கப்படுகின்றன. இதனாலேயே மக்கள் செறிந்து வாழும் பகுதிகளை நோக்கி யானைகள் நகர்கின்றன" என தென் கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரான சூழலியளார் ஏ.எம்.றியாஸ் தெரிவித்தார்.

யானை பற்றி போதிய விழிப்புணர்வு இதுவரை மக்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால் அம்பாறை மாவட்டத்தின் யானைப் பாதையான சொறிக் கல்முனை பிரதேசத்தில் காணப்பட்ட நாணல் காட்டுக்கு கடந்த வருடம் ஒரு குழுவினரின் தனிப்பட்ட தேவைகளுக்காக தீ வைக்கப்பட்டது என அவர் குற்றஞ்சாட்டினார்.

இதன் விளைவாகவே இன்று எமது மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களில் யானைகள் படையெடுத்துள்ளதாக விரிவுரையாளர் குறிப்பிட்டார். "ஒரு யானை 20 இலட்சம் மரங்களை உருவாக்குகின்றன. இதனால் ஒரு யானையினை அழிப்பது, காட்டொன்றை அழிப்பதற்கு சமனாகும். இதனால் யானைகள் பாதுகாக்கப்பட வேண்டும்" எனவும் அவர் வலியுறுத்துகின்றார்.

இதற்காக அரசியல்வாதிகள், கொள்கை வகுப்பாளர்கள், பொதுமக்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள் என அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இதன் ஊடாக யானை – மனித மோதலை கட்டுப்படுத்த முடியும் என றியாஸ் மேலும் தெரிவித்தார்.

சட்டவிரோத மின் வேலியில் சிக்கி இரு சிறுவர்கள் பலி: நெய்னாகாடு கிராமத்தில் சம்பவம்

உயிரிழந்த சிறுவர்களினால் சேகரிக்கப்பட்ட விறகுகள்

சட்டவிரோத மின்சார வேலி காரணமாக இரண்டு சிறுவர்களின் உயிரைப் பறித்த சம்பவமொன்று சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு கிராமத்தில் கடந்த சனிக்கிழமை (12) இடம்பெற்றுள்ளது.

விறகு தேடிச் சென்ற சமயத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றதாக அக்கிராமத்தவர்கள் தெரிவித்தனர். இதனால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 வயதான உடன் பிறவா சகோதரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

யானை நுழைவதை தடுக்கும் நோக்கில் இக்கிராமத்திலுள்ள தென்னந் தோட்டமொன்றினைச் சுற்றி எந்தவித அனுமதியுமின்றி சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டிருந்த மின்சார வேலியின் ஒரு பகுதி உடைந்து வீழ்ந்துள்ளது.

இந்நிலையில் அவ்வழியினால் சென்ற குறித்த சிறுவர்கள் நீரோடையினை கடக்க முயற்சித்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர். நீதவானின் விசாரணைகளை அடுத்து உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட ஜனாஸாக்கள், கடந்த ஞாயிற்றுக்கிழமை (13) நெய்னாகாடு முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டன.

உயிரிழந்த சிறுவர்களின் செருப்பு

பொதுமக்கள் குடியிறுப்பற்ற பிரதேசத்திலுள்ள இந்த தென்னந்தோட்டத்திற்கு காலஞ்சென்ற அரசியல்வாதியொருவரின் சிபாரிசின் காரணமாக பல இலட்சம் ரூபா செலவளித்து சுமார் 15 அடி அகலமான ஆற்றின் ஊடாக இலங்கை மின்சார சபையினால் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக அக்கிராம மக்கள் குற்றஞ்சாட்டினர்.

இதேவேளை, சம்மாந்துறையினைச் சேர்ந்த குறித்த தென்னந் தோட்டத்தின் உரிமையாளர் மற்றும் அவரது புதல்வர்கள் இருவரையும் எதிர்வரும் மார்ச் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சட்டவிரோத மின்சார வேலி

யானைகளை தடுப்பதற்கான மின்சார வேலிகள் வனஜீவராசிகள் திணைக்களத்தின் சிபாரிசுடன் இலங்கை மின்சார சபையினால் நாடளாவிய ரீதியில் நிர்மாணிக்கப்படுகின்றன.

இந்த யானை மின்சார வேலிகளுக்கான 6 – 8 வோல்ட் மின்சாரம் சூரிய சக்தியிலிருந்து பெறப்பட்டு வழங்கப்படுகின்றது. எனினும் "குறித்த தென்னந் தோட்டத்தில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டிருந்த மின்சார வேலிக்கு 240 வோல்ட் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது" என இலங்கை மின்சார சபையின் சம்மாந்துறை காரியாலயத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.