ஊடகவியலாளர் ராகுல் சமந்தவிற்கு துமிந்த சில்வா அழுத்தம்
ஊடகவியலாளர் ராகுல் சமந்த மீது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா அழுத்தம் பிரயோகித்துள்ளார்.
இதனால், ஊடக சுதந்திரத்தை அடக்கியாள ஊடக உரிமையாளர்களுக்கோ அல்லது அரசியல் அதிகாரிகளுக்கோ இடமளிக்க முடியாது என சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்ததது.
இந்த சம்பவம் தொடர்பில் சுதந்திர ஊடக இயக்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
16.03.2022ஆம் திகதி காலைத் தனக்கு அழைப்பு விடுத்த தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஆர்.துமிந்த சில்வா ஊடகப் பணியிலிருந்து தன்னை விலகுமாறு அழுத்தம் கொடுத்ததாக ஊடகவியலாளர் ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
0772624202 என்ற தொலைபேசி இலக்கத்தில் தன்னை தொடர்புகொண்டதாக கூறும் அவர், தான் ஹிரு அலைவரிசையின் தலைவர் ரெனோ சில்வாவின் இளைய சகோதரர் என அறிமுகப்படுத்திக் கொண்டதாகவும், அம்பலாந்தோட்டை மணல் கடத்தல் காணொளிக் காட்சிகளைப் அறிக்கையிட வேண்டாமென தன்னிடம் தெரிவித்ததாகவும் ஊடகவியலாளர் குறிப்பிட்டார்.
குறித்த தொலைபேசி அழைப்பின் ஒலிப்பதிவு சுதந்திர ஊடக இயக்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த தொலைப்பேசி இலக்கம் துமிந்த சில்வாவின் இலக்கம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ராகுல் சமந்த தெரிவித்துள்ளார்.
அரச நிறுவனமொன்றின் தலைவர் மற்றும் சக்திவாய்ந்த அரசியல் தொடர்புகளைக் கொண்ட துமிந்த சில்வா, பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரனின் கொலைக் குற்றத்திற்கு சிறைத்தண்டனை அனுபவித்துக்கொண்டிருந்த வேளையில் ஜனாதிபதி மன்னிப்பில் விடுதலை அடைந்த பின்னணியில் இவ்வாறானதொரு சம்பவத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது எனச் சுதந்திர ஊடக இயக்கம் கருதுகிறது.
மேலும் அவர், ஊடக நிறுவனமொன்றின் உரிமை தொடர்பில் சம்பந்தப்பட்ட நபர் என்ற ரீதியில் ஊடகவியலாளர் ஒருவர் மீது இவ்வாறு அழுத்தங்களைப் பிரயோகிப்பதானது இலங்கையில் ஊடக சுதந்திரம் தொடர்பில் தேவையற்ற தலையீடுகளை மேற்கொள்ளும் அநாகரீகமான ஒரு சம்பவமாகவும், வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகவும் காணப்படுவதாக சுதந்திர ஊடக இயக்கம் கருதுகின்றது.
ராகுல் சமந்தவின் அறிக்கையிடலில் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் அவரைப் பற்றிய தகவல்களை மோசடியாளர்கள் மற்றும் வேறு தரப்பினருக்கு வழங்குவதன் ஊடாக இவ்வாறானதொரு நிலைமை ஏற்படுமாயின், அது மிகவும் பாரதூரமான நிலைமையாகும். ஆகவே இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டுமெனச் சுதந்திர ஊடக இயக்கம் வலியுறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)