டவர் மண்டப அரங்க அறக்கட்டளையின் அரங்கங்களை நாடக கலைஞர்களுக்கு சலுகை விலைக்கு வழங்க நடவடிக்கை
கொவிட் தொற்று நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட நாடகக் கலைத்துறையை ஊக்குவிப்பதற்காக டவர் மண்டப அரங்க அறக்கட்டளைக்குரிய அரங்கங்களை ஆகஸ்ட் 31ஆம் திகதி முதல் மிகவும் குறைந்த விலைக்கு மேடை நாடகங்களை நிகழ்த்துவதற்காக வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (15) வியாழக்கிழமை ஆலோசனை வழங்கினார்.
அலரி மாளிகையில் நடைபெற்ற டவர் மண்டப அரங்க அறக்கட்டளையின் 297ஆவது நிர்வாகக் குழு கூட்டத்தில் கலந்துக்கொண்டு டவர் மண்டப அரங்க அறக்கட்டளையின் தலைவர் என்ற ரீதியில் பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
அதற்கமைய எதிர்வரும் ஆகஸ்ட் 31ஆம் திகதி முதல் டவர் அரங்கம், எல்ஃபின்ஸ்டன் அரங்கம் மற்றும் ருக்மணிதேவி அரங்கம் என்பன சலுகை விலைக்கு நாடக கலைஞர்களுக்கு வழங்கப்படும்.
மருதானை எல்ஃபின்ஸ்டன் அரங்கத்தை அண்மித்துள்ள சரசவிபாய கட்டிடத்தை கலாசார நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்கும் வகையில் எட்டு மாடிகளை கொண்ட பல்நோக்கு கட்டிடமாக அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் இதன்போது தெரிவித்தார்.
இதுவரை டவர் மண்டப அரங்க அறக்கட்டளையினால் செயற்படுத்தப்படும் பிரேக்ஷா காப்புறுதியை, 2022ஆம் ஆண்டு முதல் நாடகத்துறையில் ஈடுபடும் அதிக எண்ணிக்கையிலான நாடக கலைஞர்களை உள்ளடக்கும் வகையில் முன்னெடுக்குமாறும் கௌரவ பிரதமர் குறிப்பிட்டார்.
150 மில்லியன் ரூபாய் செலவில் 2016ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டு 2019 பெப்ரவரி 25ஆம் திகதி திறக்கப்பட்ட புலத்சிங்கள பிரதேச செயலாளர் பிரிவின் ஏகல்ஓயவில் அமைந்துள்ள பல்நோக்கு கட்டிடம் தற்போது பாவனையற்று கைவிடப்பட்டுள்ளதாக இச்சந்திப்பில் வெளிப்படுத்தப்பட்டது.
அதற்கமைய குறித்த கட்டிடத்தை டவர் மண்டப அரங்க அறக்கட்டளை சட்டத்தின் கீழுள்ள நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் கையகப்படுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் கௌரவ பிரதமர் இதன்போது பணித்தார்.
அகில இலங்கை ரீதியிலான பாடசாலை மட்ட நாடக போட்டிகளை சிங்கள மற்றும் தமிழ் மொழி மூலங்களில் தொடர்ச்சியாக நடத்துவதற்கு நிர்வாகக் குழு இதன்போது தீர்மானித்தது.
குறித்த கூட்டத்தில் தேசிய மரபுரிமைகள், அரங்குக் கலைகள் மற்றும் கிராமியக் கலைகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் கௌரவ விதுர விக்ரமநாயக்க, பிரதமரின் செயலாளர் திரு.காமினி செனரத், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, கொழும்பு மாநகர மேயர் திருமதி.ரோஸி சேனாநாயக்க, தேசிய மரபுரிமைகள், அரங்குக் கலைகள் மற்றும் கிராமியக் கலைகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயலாளர் கே.ஏ.டீ.ஆர்.நிசாந்தி ஜயசிங்க, டவர் மண்டப அறக்கட்டளையின் பதில் பணிப்பாளர் நாயகம் கே.ஏ.எச்.எச்.கிரிஎல்ல, நிர்வாக மற்றும் அபிவிருத்தி பணிப்பாளர் நிபுன திசாநாயக்க, நாடக மேம்பாட்டு, கல்வி மற்றும் நிகழ்ச்சி பணிப்பாளர் சம்பத் பெரேரா, டவர் மண்டப அறக்கட்டளையின் பணிப்பாளர் குழு உறுப்பினர்களான சரித்தா பிரியதர்ஷனி பீரிஸ், ஹஷீம் ஓமார், பீ.ஆர்.பெரேரா (கலைஞர்களை பிரதிநிதித்துவப்படுத்தி), குலோஜா பீரிஸ், நகராட்சி செயலாளர் ரோஷினி திசாநாயக்க உள்ளிட்ட டவர் மண்டப அறக்கட்டளையின் அதிகாரிகள் பலரும் கலந்துக் கொண்டனர்.
Comments (0)
Facebook Comments (0)