நீதி அமைச்சர் பதவியிலிருந்து அலி சப்ரி இராஜினாமா செய்தாரா?
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, நீதி அமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார் என சமூக ஊடங்களில் இன்று (29) திங்கட்கிழமை செய்திகள் பரப்பப்பட்டன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ஒரேயொரு முஸ்லிம் அமைச்சர் இவராவார். கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக இவர் தொடர்ச்சியாக கருத்து வெளியிட்டு வருகின்றார்.
இவ்வாறான நிலையில் நீதி அமைச்சர் பதிவியிலிருந்து அலி சப்ரி விலக வேண்டும் என பௌத்த தேரர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். இந்த நிலையிலேயே இன்று (29) தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் நீதி அமைச்சர் ஆகிய பதவிகளிலிருந்து அலி சப்ரி இராஜினாமா செய்துள்ளார் எனவும், அதனை ஜனாதிபதி ஏற்க மறுப்பு எனவும் சமூக ஊடங்களில் செய்திகள் பரப்பப்பட்டன.
எனினும் குறித்த செய்தியினை அமைச்சர் அலி சப்ரி நிராகரித்ததுடன், இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.
"எனக்குத் தெரியாமல், எனது இராஜினாமா; இது தான் நம் நாட்டின் ஊடக ஒழுக்கம்" எனவும் அவர் தனது முகநூலில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என எமது வாசகர்களை வினயமாக வேண்டிக்கொள்கின்றேம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத் தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94779595972) தொடர்புகொள்ளுங்கள்.
Comments (0)
Facebook Comments (0)