போதைப்பொருளுக்கு எதிரான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார் முஜிபுர் ரஹ்மான்
2020 பொதுத் தேர்தல் - புகைப்பொருள், மதுசாரம் மற்றும் ஏனைய போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நாட்டின் துரித அபிவிருத்தியை நோக்கிய வேலைத்திட்டத் தொடர்பான ஒப்பந்தத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கொழும்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பு மாவட்ட வேட்பாளருமான முஜிபுர் ரஹ்மான் ஒப்பமிட்டுள்ளார்.
குறித்த ஒப்பந்தம் தொடர்பில் எடிக் எனப்படும் மதுசாரம் புகைப்பொருள் தகவல் மையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மதுசாரம் மற்றும் புகைப்பொருள் பாவனையால் வருடாந்தம் 35000 பேர் மரணத்தைத் தழுவுகின்றனர். மேலும் ஹெரோயின் போன்ற ஏனைய போதைப்பொருள் வகைகளினால் பெருமளவிலானோர் உள நோய்களிற்கு ஆளாகுகின்றனர். இலங்கையில் நாளொன்றிற்கு ரூபா 38 கோடி சிகரட்டிற்காக செலவிடப்படுகின்றது. சாராயம், பியர் பாவனைகளிற்காக தினமும் ரூபா 59 கோடி எமது மக்களால் செலவிடப்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிலைமையில், புகைப்பொருள், மதுசாரம் மற்றும் ஏனைய போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நாட்டின் துரித அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கு மக்களின் பிரதிநிதியாக இம்முறை பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களால் எவ்வாறான தீர்மானங்களை மேற்கொள்ள முடியும் என்பதை காண்பிப்பதே எமது இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.
கீழ் குறிப்பிடப்பட்டிருக்கும் பரிந்துரைகளிற்கு பொதுத்தேர்தல் 2020 வேட்பாளர்களின் ஆதரவைப் பெற்று எதிர்காலத்தில் எமது நாட்டில் போதைப்பொருள், மதுசாரம், புகைப்பொருள் தொடர்பான நிலையான கொள்கைத்திட்டங்களை வகுத்துக்கொள்வதே இச்செயற்பாட்டின் பிரதான நோக்கமாகும்.
1. தனி சிகரட் மற்றும் புகைப்பொருட்களின் விற்பனையைத் தடை செய்தல்.
2. வெற்றுப்பொதியிடல் முறைமையை அங்கீகரிக்கப்படல்.
3. கல்வி நிறுவனங்களிலிருந்து 100 மீற்றர்களுக்கு இடைப்பட்ட தூரத்தில் புகைப்பொருட்களின் விற்பனையைத் தடை செய்தல்.
4. புகையிலை நிறுவனத்திடமிருந்து முறையான வரி அறவீட்டு முறைமையை வகுத்துக்கொள்ளல்.
5. மதுசாரம் மற்றும் புகையிலை மீதான அதிகார சபை சட்டத்திற்கு துறை சார்ந்த நிபுணர்களால் முன்வைக்கப்பட்ட திருத்தங்களை நடைமுறைப்படுத்தல்.
6. 2016ம் ஆண்டு பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட மதுசாரம் தொடர்பான கட்டுப்பாட்டுக்கொள்கையை நடைமுறைப்படுத்தல்.
7. இலங்கையில் கஞ்சா சட்டரீதியாக்க இடமளிக்காமல் இருத்தல்.
8. ஹெரோயின் உட்பட ஏனைய அனைத்து போதைப்பொருட்கள் தொடர்பிலும் தற்போது காணப்படும் சட்டங்களை சரியான முறையில் நடைமுறைப்படுத்துதல்.
இதுவரையில் இதற்கு ஒத்துழைப்பு வழங்கி ஏற்றுக்கொள்வது தொடர்பிலான பத்திரத்தில், நுவரெலியா - 8, அம்பாறை - 10, யாழ்ப்பாணம் - 12, கம்பஹா - 08, பொலன்னறுவை - 06, காலி - 8, ஹம்பாந்தோட்டை - 3, கண்டி - 5, மாத்தறை - 7,. கொழும்பு - 7, குருநாகலை - 1, களுத்துறை - 3 என்ற அடிப்படையில் வேட்பாளர்கள் கையொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)