காத்தான்குடி வைத்தியசாலையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை; பிரதேச மக்களின் அச்சத்தை போக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

காத்தான்குடி வைத்தியசாலையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை;  பிரதேச மக்களின் அச்சத்தை போக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

றிப்தி அலி

உலகளாவிய ரீதியில் இன்று பாரிய பிரச்சினையாக மாறியிருக்கும் கொரோகா வைரஸ் பரவல் காரணமாக நேற்று (23) வியாழக்கிழமை நண்பகல் 12.00 மணி வரை 185,166 பேர் உலகளாவிய ரீதியில் உயிரிழந்துள்ளனர்.

உலகளாவிய ரீதியில் இந்த வைரஸ் 2,628,527 பேருக்கு தொற்றியுள்ள நிலையில் 729,873 பேர் இந்த வைரஸிலிருந்து குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஐக்கிய அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, ஜேர்மனி, பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற அபிவிருத்தியடைந்த நாடுகளே இந்த வைரஸ் தாக்கத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதலாவது நபரான சுற்றுல்லா வழிகாட்டி கடந்த மார்ச் 10ஆம் திகதி அடையாளம் காணப்பட்டார். அன்றிலிருந்து நேற்று (23) நண்பகல் 12.00 மணி வரை 330 பேர் இந்த வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்தது.

இதில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன் 105 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேவேளை, 148 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர் என சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இந்த வைரஸ் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் முயற்சியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் பல்வேறு செயற்த்திட்டங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது.

இந்த நடவடிக்கைகளுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் உட்பட உலக நாடுகள் வரவேற்றுள்ளன. ஜனாதிபதியின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இன, மத வேறுபாடின்றி அனைத்து மக்களும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.

எனினும் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதனால் இதற்கு சிகிச்சை அளிக்க கூடிய வைத்தியசாலைகளினை உருவாக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் காத்தான்குடி தள வைத்தியசாலை, பேருவளை தள வைத்தியசாலை, ஹோமாகம வைத்தியசாளை, சிலாபாம் வைத்தியசாலை உள்ளிட்ட பல வைத்தியசாலைகள் கொவிட் - 19 இற்கு சிகிச்சை அளிக்கும் நிலையங்களாக மாற்றப்பட்டன.

தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த் தடுப்பு தொடர்பான கட்டளைச் சட்டத்தின் கீழ் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் மேற்குறிப்பிட்ட வைத்தியசாலைகள், கொவிட் - 19 இற்கு சிகிச்சை அளிக்கும் நிலையங்களாக மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டத்தின் கீழ் கடந்த ஏப்ரல் 3ஆம் திகதி  கொவிட் - 19 இற்கு சிகிச்சை அளிக்கும் நிலையமாக காத்தான்குடி தள வைத்தியசாலையும் மாற்றப்பட்டது. இதனையடுத்து காத்தான்குடி மக்கள் மத்தியில் ஒரு வகையான அச்ச உணர்வு ஏற்பட்டது.

அதாவது, தெற்காசியாவில் குறைந்த நிலப்பரப்பில் அதிக மக்கள் வாழும்  பிரதேசமான காத்தான்குடியில் உள்ள மக்களை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு காத்தான்குடி நகர சபை, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், பிரதேச செயலகம், அனைத்து பள்ளிவாயல்கள் மற்றம் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா, பாதுகாப்பு தரப்பினர் மற்றும் சமூக நிறுவனங்கள் என பல்வேறு தரப்பினர் இணைந்து இரவு பகலாக சேவையாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் வேறு பிரதேசத்திலுள்ள மக்களினை இங்கு அழைத்து வந்து சிகிச்சை வழங்கும் சமயத்தில் எமது பிரதேச மக்களுக்கும் இந்த நோய் பரவி மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களுக்கும் மாகாணத்தின் ஏனைய பிரதேசங்களுக்கும் பரவக்கூடிய வாய்ப்புள்ளது என்ற அச்ச உணர்வே குறித்த காத்தான்குடி மக்கள் மத்தியில் காணப்பட்டது.

இவ்வாறான நிலையில் காத்தான்குடி அனைத்து பள்ளிவாயல்கள் மற்றம் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்த்திற்கு கடந்த ஏப்ரல் 15ஆம் திகதி கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.

இந்த வைத்தியசாலையையில் காணப்படும் முக்கிய மூன்று குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறும் குறித்த கோரிக்கை கடிதத்தில் முன்வைக்கப்பட்டது.

அவையாவன:

1. வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்படுகின்ற  நோயாளர்களின் மலசல கழிவுகள் இயந்திரங்களின் ஊடாக சுத்திகரிக்கப்பட்டு கடலுக்கு அனுப்பட்டிருந்தது. எனினும் தற்போது அது செயலிழந்து அருகில் உள்ள தனியாரின் வெற்றுக் காணிக்குள் செல்வதனால் இது தொடர்பில்  மக்களின் முறைப்பாடு உள்ளது.

தற்போது கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை அனுமதிக்கும் முன் இக் ழிவு நீரினை முறையாக சுத்திகரிக்கக் கூடிய பாதுகாப்பு திட்டத்தை அமைக்க வேண்டிய தேவை உள்ளது.

2. வைத்தியசாலையில்  பயன்படுத்தப்படும் மருத்துவ கழிவுகளை எரிக்கும் இயந்திரத்திரத்தின் மூலம் வெளியாகும் புகை 100 மீற்றருக்கு வாழும் மக்களுக்கு சுகாதார பிரச்சனைகளை ஏற்படுத்துவதாக பொதுமக்கள் ஏற்கனவே நகர சபையில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அந்த இயந்திரம் தற்போது பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் குறித்த இயந்திரத்தை சீர்செய்து பொதுமக்களுக்கு சுகாதார பிரச்சனைகள் ஏற்படாத வகையில் ஒழுங்கமைக்க வேண்டும்.

3. தொடர்ச்சியாக சுகாதார பிரச்சனைகளை முகம் கொடுத்துவரும் வைத்தியசாலையை அண்மித்து வாழும் மக்களுக்கு இந்த நோய்த்தொற்று ஏற்பாடு என துறைசார்ந்த நிபுணர்கள் மூலம் ஆய்வுகள் முன்னெடுத்து  உறுதிப்படுத்துவதுடன் இது தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஏ. லதாகரனிடம் மாகாண ஆளுநர் விளக்கம் கோரியிருந்தார். இதற்கு சுமார் 12 விடயங்களை உள்ளடக்கிய பதில் கடிதமொன்றை மாகாண சுகாதார பணிப்பாளர் ஆளுநருக்கு அனுப்பியிருந்தார்.

குறித்த கடிதத்தின் பிரதி காத்தான்குடி அனைத்து பள்ளிவாயல்கள் மற்றம் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்த்தினால் அனுப்பப்பட்டுள்ளது.

எனினும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் குறித்த கடித்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் எதுவும் இதுவரை நடைபெற்றதாக தெரியவில்லை என காத்தான்குடி அனைத்து பள்ளிவாயல்கள் மற்றம் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.சபீல் (நளீமி) தெரிவித்தார்.

"குறித்த விடயங்கள் நிறைவுசெய்யப்பட்ட பின்னர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாக்கப்பட்ட நோயாளர்களை காத்தான்குடி தள வைத்தியசாலைக்க அழைத்து வந்திருக்க முடியும்" என அவர் குறிப்பிட்டார்.

"அவ்வாறில்லாமலேயே தற்போது நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது மிகவும் கவலையளிக்கிறது" என சபீல் (நளீமி) மேலும் தெரிவித்தார்.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 20ஆம் திகதி திங்கட்கிழமை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இரண்டு பேரூந்துகளில் கொரோனா தொற்றுக்குள்ளான 18 பெண்கள், 8 ஆண்கள் உள்ளிட்ட 32 பேர்   அழைத்து வரப்பட்டு காத்தான்குடி தள வைத்தியசாலையையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனால் காத்தான்குடி வாழ் மக்கள் மத்தியில் காணப்பட்ட அச்ச உணர்வு மேலும் அதிகரித்தது. இதனையடுத்து காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் கடந்த செவ்வாய்க்கிழமை (21) விசேட ஊடகவியலாளர் மாநாடொன்றை காத்தான்குடியில் ஏற்பாடு செய்திருந்தார்.

இதன்போது அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

"மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தாமல் காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு கொரோனா தொற்றுள்ளவர்களை அனுமதித்திருப்பது கண்டிக்கதக்கதாகும். கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் என சந்தேகிக்கப்படுகின்றவர்களை பரிசோதனை செய்யும் நிலையமாகவே காத்தான்குடி தள வைத்தியசாலையினை அரசாங்கம் தேர்ந்து எடுத்திருப்பதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் வைத்தியசாலையை பரிசோதனை நிலையமாக மாற்றுவதற்கு நாங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. தற்போது, கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை சுமார் 350 கிலோ மீற்றர் தூரத்திலிருந்து அழைத்து வந்து இங்குள்ள வைத்திசாலையில் சிகிச்சை வழங்கப்படுகின்றது.

இந்த வைத்தியசாலையிலுள்ள வைத்திய கழிவுகளை எரிக்கின்ற இயந்திரம் முற்றுமுழுதாக பழுதடைந்திருப்பதோடு முறையான கழிவகற்றல் தொகுதியானது திறந்த முறையிலே அமைந்துள்ளது.

குறித்த நோயாளிகளின் ஊடாக எமது ஊரில் வாழும் மக்களுக்கு கொவிட் -19 நோய் பரவிவிடக்கூடும் என்ற அச்சம் எமக்கு ஏற்பட்டுள்ளது. இந்த விடயத்தினை உரிய அதிகாரிகளுக்கு முன்வைத்த போதிலும்  இது அரசாங்கத்தின் தீர்மானம் என்கின்றனர்.

இவ்வைத்தியசாலையில் உரிய சுகாதார பாதுகாப்பை நிவர்த்தி செய்யாமல்  கொரோனா சிகிச்சை அளிப்பதன் மூலம் கொரோனா தொற்று ஏற்படுமாக இருந்தால் அதனால் பாதிக்கப்படுவது காத்தான்குடி மக்கள் மாத்திரம் அல்ல, அருகிலுள்ள ஆரையம்பதி, பாலமுனை, மஞ்சந்தொடுவாய்  உள்ளிட்ட கிராமங்கள் என முழு மட்டக்களப்பு மாவட்டமும் கிழக்கு மாகாணமுமாகும்.

இனிமேல் எமது பிரதேசத்தில் ஒருவருக்கேனும் கொரோனா தொற்று ஏற்பாட்டால் அதற்கு கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளரும், மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளருமே பொறுப்பு கூற வேண்டும். இது தொடர்பில் அவர்கள் இருவருக்கும் தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளேன்" என்றார்.

இந்த நிலையில் கடந்த 22ஆம் திகதி புதன்கிழமை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 13 பேர் காத்தான்குடி தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காத்தான்குடி நகர சபை தவிசாளரினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எம்.அச்சுதனை கடந்த 22ஆம் திகதி புதன்கிழமை தொடர்புகொண்டு வினவிய போது,

"கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு வைத்தியசாலைகளை சிபாரிசு செய்யுமாறு தன்னிடம் கோரப்பட்ட போது, பொது வைத்திய நிபுணர்கள் கடமையாற்றும் வாழைச்சேனை மற்றும் களுவாஞ்சிக்குடி ஆகிய வைத்தியசாலைகளை தெரிவித்தேன்.

எனினும் காத்தான்குடி வைத்தியாசலை கொவிட்-19 சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டமை ஒரு தேசிய மட்ட தீர்மானமாகும். எங்களுக்கு எந்த அறிவிப்பும் மேற்கொள்ளாமல் இந்த தீர்மானம் தொடர்பிலான அறிவிப்பு நேரடியாக காத்தான்குடி தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருக்கே சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் அறிவிக்கப்பட்டது.  

வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்படுகின்ற நோயாளர்களின் மலசல கழிவு சுத்திகரிக்கும் இயந்திரம் இயங்காத விடயம் தொடர்பில் கொவிட்-19 சிகிச்சை நிலையமாக காத்தான்குடி வைத்தியசாலை மாற்றப்பட்ட பின்னரே அந்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எனக்கு அறிவித்தார்.

இதனையடுத்து இந்த பிரச்சினையினை தீர்ப்பதற்கு விசேட அனுமதியினைப் பெற்று நிர்மாணப் பணிக்காக்கான கொந்தராத்து பணிகளும் ஒப்படைக்கப்பட்டு விட்டது. எமது பிரதேசத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தமையினாலேயே இதன் பணிகள் காலதாமதமாகியது. இதன் பணிகள் வியாழக்கிழமை (23) நிறைவுசெய்தவுடன் குறித்த இயந்திரத்தினை இயக்க முடியும்.

குறித்த வைத்தியசாலையிலுள்ள எரிக்கும் இயந்திரத்தின் புகை வெளியாகும் குழாயில் பிரச்சினையொன்று உள்ளது. இதனால் குறித்த இயந்திரத்தினை பயன்படுத்தாமல் நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளேன்.

இதனை நிவர்த்தி செய்வதற்கு தேவையான 1.3 மில்லியன் ரூபாவிற்கான கொந்தராத்து பணிகள் கொழும்பிலுள்ள நிறுவனமொன்று வழங்கப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதார சூழ்நிலை காரணமாக அவர்கள் இன்னும் வரவில்லை. இந்த பணிகள் நிறைவடையும் வரை கழிவுகள் அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு கொண்டு சென்று எரிக்கப்படும்.

காற்றினால் கொரோனா வைரஸ் உலகில் எந்தவொரு பகுதியலும் பரவியதற்காக ஆதரமொன்றும் இதுவரை இல்லை. அப்படியான நிலையில், வைத்தியசாலைக்கு அருகிலுள்ள மக்களுக்கு கொரோனா வைரஸ் பரவும் எனும் விடயம் பிழையானதாகும். இந்த விடயத்தினை சிலர் பிழையாக சித்தரிக்கின்றனர்" என்றார்.

எனினும் வைத்தியசாலையின் மலசல கழிவு சுத்திகரிக்கும் இயந்திரத்தினை இயங்க வைப்பதற்காக எந்தவித நடவடிக்கையும்  நேற்று (23) வியாழக்கிழமை முன்னெடுக்கப்படவில்லை என காத்தான்குடி தள வைத்தியசாலையின் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த தீர்மானம் தொடர்பில் காவிட் -19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் உறுப்பினரும், மேல் மாகாண முன்னாள் ஆளுநருமான வைத்திய கலாநிதி சீதா அரம்பேபொலவினை தொடர்புகொண்டு வினய போது,

"காத்தான்குடி வைத்தியசாலையினை கொவிட் -19 நோய்க்கு சிகிச்சை அளிக்கும் நிலையமாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமே தெரிவுசெய்யதார். இது போன்று நாட்டின் பல வைத்தியசாலைகள் கொவிட் -19 நோய்க்கு சிகிச்சை அளிக்கும் நிலையங்களாக மாற்றப்பட்டுள்ளன.

குறித்த பிரதேச மக்களுக்கு கொவிட் -19 நோய் தொற்றல் ஏற்படும் போது சிறந்த சேவையினை வழங்குவதற்காகவே பிராந்திய ரீதியிலுள்ள வைத்தியசாலைகள் கொவிட் -19 நோய்க்கு சிகிச்சை அளிக்கும் நிலையங்களாக மாற்றப்பட்டுள்ளன. .

இந்த வைத்தியசாலையில் எதாவது பிரச்சினைகள் அல்லது குறைபாடுகள் இருப்பின் இது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு குறித்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும்.

குறித்த வைத்தியசாலையினை அபிவிருத்தி செய்வதற்கு இதுவொரு நல்ல சந்தர்ப்பமாகும். இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி குறித்த வைத்தியசாலைகளின் பிரச்சினைகளை அவருக்கு  தெரிவிக்கும் போது உடனடியாக நிதி ஒதுக்கப்படும்.

கொவிட் - 19 நோயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த இக்காலப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தியினை அப்பிரதேச மக்கள் பயன்படுத்த வேண்டும். காத்தான்குடி வைத்தியசாலையினை அபிவிருத்தி செய்வதற்கு இதுவொரு நல்ல சந்தர்ப்பமாகும். இந்த சந்தர்ப்பத்தினை அப்பிரதேச மக்கள் சிறப்பாக பயன்படுத்த வேண்டும்" என்றார்.

இதேவேளை, கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க காத்தான்குடி தள வைத்தியசாலையை பயன்படுத்துவதற்கு எதிரான போராட்டங்கள் ஆதாரமற்றவை என கிழக்கு மாகாண ஆளுநர் அனுரதா யஹம்பத் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுரதா யஹம்பத் கடந்த 22ஆம் திகதி புதன்கிழமை விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில், நாம் அனைவரும் ஒரு நாட்டின் குடிமக்களாக இருந்து அரசாங்கத்தால் செயற்படுத்தப்படும் இந்த திட்டத்தை ஆதரிக்க, எந்தவித நிகழ்ச்சி நிரலுமின்றி ஒரு தேசமாக நாம் அனைவரும் இணைய வேண்டும்.

கொவிட் -19 வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க காத்தான்குடி வைத்தியசாலையில் தேவையான அனைத்து வசதிகளும் சுகாதார அமைச்சு மற்றும் கொவிட் -19 பணிக்குழுவின் தொற்றுநோயியல் பிரிவின் மேற்பார்வையின் கீழ் வழங்கப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் எனக்கு தெரிவித்தார்.

அதே சமயம், இந்த வைரஸுக்கு சிகிச்சையளிக்க மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையினை அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்தது. அந்த நேரத்தில் விழிப்புணர்வு இல்லாததால், இந்த தீர்மானத்திற்கு கடுமையான எதிர்ப்பு காணப்ட்டது. எனினும் அதன் மதிப்பை அப்பகுதியில் மக்கள் பின்னர் உணர்ந்துகொண்டனர்.

காத்தான் குடி வைத்தியசாலை கொரோனாவிற்கு சிகிச்சை வழங்கும் நிலையமாக மாற்றப்பட்டதை அடுத்து, கழிவு மேலாண்மைக்கான ஒரு சிறப்பு திட்டம், எரிப்பு இயந்திரத்தை சரிசெய்ய பணம் ஒதுக்கல், கர்ப்பிணிப் பெண்களுக்கு கூடுதல் சிகிச்சை, கூடுதல் அம்பியுலன்ஸ், சிறுநீரக அலகு தனிமைப்படுத்துதல், மனநல பிரிவை தனிமைப்படுத்துதல், ஊழியர்கள் சிறப்பு பயிற்சி அளித்தல், நோயாளிகளுக்கு தனி உணவைக் கொண்டுவருதல் உள்ளிட்ட பல செயற்பாடுகள் தற்போது  முன்னெடுக்கப்பட்டுள்ளன" என்றார்.

இதற்கிடையில் இந்த விடயத்துடன் நேரடியாக தொடர்புபட்ட  கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஏ.லாதாகரனை தொடர்புகொண்ட அவரது கருத்தினை அறிய பலமுறை மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.

இந்த விவகாரத்தில் காத்தான்குடி மக்களோ, அப்பிரதேச அரசியல் மற்றும் சிவில் பிரமுகர்களோ தமது பிரதேசத்தில் கொரோனா சிகிச்சை நிலையம் அமைக்கப்படுவதை எதிர்க்கவில்லை.

காத்தான்குடி நகரம் நகரம் சனத்தொகை செறிவு கொண்டது என்பதனால் நோயாளர்களின் கழிவுகள் வெளியேறாதவாறு உரிய சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இந்நிலையத்தினை நடத்த வேண்டும் என்றே கோரிக்கை விடுக்கின்றனர்.

தற்போது, காத்தான்குடி தள வைத்தியசாலையினை அண்மித்த பகுதிகளில் அப்பகுதியில் வசிப்பவர்களை தவிர வேறு யாரும் உள்நுழைய முடியாதவாறு தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

எனினும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மிகுந்த அச்சத்துடனேயே உள்ளனர். சிலர் அங்கிருந்து இடம்பெயர்ந்து வேறு இடங்களிலுள்ள உறவினர்களின் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

அதேபோன்று காத்தான்குடி தள வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள், தாதிகள் மற்றும் உழியர்களும் கொரோனா சிகிச்சைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
எனினும் இவர்களுக்கு இது தொடர்பான முறையான பயிற்சிகள் வழங்கப்பட்டதாக தெரியவில்லை. இவ்வாறான பின்னணியிலேயே காத்தான்குடி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இது விடயத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளபடி, சகல உறுதிமொழிகளும் நிறைவேற்றப்பட வேண்டும். கழிவுகள் முறையாக அகற்றப்பட வேண்டும். அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். அதேபோன்று அப்பகுதியில் வாழும் மக்களின் அச்சத்தை போக்கி அவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.