அஷ்ரபின் பெயரில் ஒரு 'தேர்தல் கனவு'
றிப்தி அலி
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப், இலங்கை வாழ் முஸ்லிம் மக்களுக்கு ஆற்றிய அளப்பரிய சேவைகளை கௌரவிக்கும் வகையில் 'அஷ்ரப் நினைவு அருங்காட்சியகம்' நிர்மாணிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அஷ்ரபின் பிறந்த ஊரான கல்முனையில் மேற்கொள்ளப்படவுள்ள இத்திட்டத்திற்காக 25 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும் என்றும் கடந்த மே 15ஆம் திகதி புதன்கிழமை ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் இது தொடர்பில் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் அஷ்ரபின் 24ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் முஸ்லிம் சமூகத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்கவே இந்த திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.
பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் உட்பட முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த ஏழு பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களுடைய கட்சிகளின் தீர்மானங்களை மீறி 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு 2020ஆம் ஆண்டு ஆதரவாக வாக்களித்து அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவளித்தனர்.
அச்சமயத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டன. இதன்போது குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மௌனம் காத்து வந்தமை யாவரும் அறிந்த உண்மையாகும்.
இதனால் முஸ்லிம் சமூகத்தில் அவர்களுக்கு காணப்பட்ட செல்வாக்கில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டது. இவ்வாறான நிலையில் பாராளுமன்றத் தேர்தல் மிக விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜனாஸா எரிப்பு காரணமாக செல்வாக்கினை இழந்த குறித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த தேர்தலுக்காக தங்களின் செல்வாக்கினை அதிகரிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வரிசையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தீர்மானத்தினை மீறி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளித்து வருகின்ற பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸும் அம்பாறை மாவட்டத்தில் தற்போது பல செயற்த்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றார்.
இதற்கமையவே ஹரீஸ் எம்.பி விடுத்த வேண்டுகோளின் பேரில் 'அஷ்ரப் நினைவு அருங்காட்சியகம்' நிர்மாணிக்க ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மர்ஹும் அஷ்ரப் அவருடைய நினைவு தினத்தன்று மாத்திரம் அவரது அரசியல் வாரிசுகளினால் நினைவுபடுத்தப்படுவது வழமையாகும்.
அத்துடன், தேர்தல் சுவரொட்டிகளிலும், மேடைகளிலும் அவருடைய பெயரையும் புகைப்படத்தையும் பயன்படுத்தி வாக்குக் கோருவது அஷ்ரபின் அரசியல் வாரிசுகளின் வழக்கமாகும்.
அந்த அடிப்படையிலேயே 'அஷ்ரப் நினைவு அருங்காட்சியகத்தினை' வைத்து அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும், பாராளுமன்றத் தேர்தலிலும் முஸ்லிம் சமூகத்திடம் வாக்குக் கேட்க முடியும். இதன் மூலம் ஒரு கல்லில் இரண்டு மாங்காய்களை பறிக்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் ஜனாதிபதியிடம் கூறியிருக்கலாம்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் ஊடக அறிக்கை வெளியிடப்பட்டு ஒரு வாரம் கழிந்துள்ள நிலையிலும் இந்த செயற்திட்டம் தொடர்பில் இதுவரை அம்பாறை மாவட்ட செயலகத்திற்கோ, கல்முனை பிரதேச செயலகத்திற்கோ ஜனாதிபதி செயலகத்தில் எந்தவொரு அறிவித்தலும் நேற்று புதன்கிழமை (22) வரை வரவில்லை.
எவ்வாறாயினும், இந்த அருங்காட்சியகம் நிர்மாணத்திற்கு முஸ்லிம் சமூகத்திலிருந்து பாரிய எதிர்ப்பலைகள் தற்போது தோன்றியுள்ளன. குறிப்பாக கடந்த 20 வருடங்களாக எந்தவொரு அபிவிருத்தியுமின்றி அருங்காட்சியகமாகக் காணப்படுகின்ற கல்முனையில் இன்னுமொரு அருங்காட்சியகம் தேவை தானா எனக் கேள்வி எழுப்ப்பட்டு வருகின்றது.
இதேவேளை, மர்ஹும் அஷ்ரபின் ஏக புத்திரரான அமான் அஷ்ரபும் இந்த செயற்த்திட்டத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு பதிவொன்றினை கடந்த 16ஆம் திகதி வியாழக்கிழமை சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தார்.
சமூக ஊடகங்களில் வைரலாகிய குறித்த பதிவில் "இந்த திட்டத்திற்கு எனது தாய்க்கோ எனக்கோ எவ்வித சம்பந்தமும் இல்லை. தந்தை உயிருடன் இருந்திருந்தால், கல்வித் தரத்தை மேம்படுத்தவும், விவசாயம்/மீன்பிடி பிரச்சினைகளைத் தீர்க்கவும், திகாமடுல்ல இளைஞர்களுக்கு புதிய சந்தைகளில் தொழில் வாய்ப்புகளை உருவாக்கவும், துறை சார் நிபுணத்துவம் பெற தேவையான சந்தர்ப்பங்களை உருவாக்குக என்றே கூறியிருப்பார்" எனத் தெரிவித்துள்ளார்.
இது போன்று சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பினை வெளியிட்டு பதிவொன்றினை டுவிட்டரில் பதிவிட்டுள்ளதுடன் ஜனாதிபதியிடம் பின்வரும் நான்கு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
"முஸ்லிம்களின் ஆதரவை வென்றெடுப்பதற்காக 25 மில்லியன் ரூபா அல்லது அதற்கு குறைவான தொகையை கொண்டு நீங்கள் என்ன செய்ய முடியும்?
1. கொவிட் எரிப்பு காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க நிதியம் ஆரம்பியுங்கள்
2. இஸ்ரேலுக்கு உதவுவதை நிறுத்துங்கள்
3. உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பின்னர் தவறாக கைது செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுங்கள்
4. உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி பெற்றுத் தாருங்கள்"
இவர்கள் போன்று, கல்முனையினைச் சேர்ந்த ஓய்வுபெற்ற இராஜந்திரியான ஏ.எல்.ஏ. அஸீஸும் இந்த செயற்திட்டத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். கடந்த 20 வருடங்களாக எந்வொரு அபிவிருத்தியும் இடம்பெறாத கல்முனையில் ஏன் அருங்காட்சியசாலையொன்று நிறுவப்பட வேண்டும் என்று கேள்வி அவர் எழுப்பியுள்ளார்.
கடந்த 20 வருடங்களாக கல்முனைத் தொகுதியின் அதிகாரத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு எதிர்ப்புகள் அதிகரிக்கப்பட்டதை அடுத்து கடந்த சனிக்கிழமை கல்முனை மாநகர சபையில் விசேட ஊடகவியலாளர் மாநாடொன்றினை ஹரீஸ் ஏற்பாடு செய்து இந்த அருங்காட்சியகம் தொடர்பான விளக்கமொன்றினை வழங்கினார்.
குறித்த அருங்காட்சியகத்தில் முஸ்லிம் இளைஞர்களை மேம்படுத்துவதற்கு தேவையான பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். கல்முனையில் ஹரீஸ் எம்.பியினால் அடிக்கல் நடப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட எந்தவொரு செயற்திட்டமும் இதுவரை நிறைவு செய்யப்படவில்லை.
இவ்வாறான நிலையிலேயே இந்த அருங்காட்சியகத்திற்கான அடிக்கல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் விரைவில் நடப்பட்டு வரி செலுத்தும் மக்களின் 25 மில்லியன் வீணடிக்கப்படவுள்ளது என்ற குற்றச்சாட்டும் தற்போது முன்வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில், கல்முனை வாடி வீட்டு வீதியிலுள்ள அரச காணியொன்று குறித்த அருங்கட்சியகத்திற்காக பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸினால் அடையாளம் காணப்பட்டுள்ளது. காத்தான்குடியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம் இன்று பேசுபொருளாக மாறியுள்ளமைக்கு பிரதான காரணம் அதன் அமைவிடமாகும்.
இவ்வாறான நிலையில் அஷ்ரப் அருங்கட்சியகத்திற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ள இடம் ஒரு ஒதுக்குப் புறமான பிரதேசமாகும். அத்துடன் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசமுமாகும். கல்முனையில் சுனாமி வீட்டுத் திட்டம் அமையப் பெற்ற பிரதேசத்தில் பல ஏக்கர் அரச காணிகள் உள்ள நிலையில், தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசத்தில் அஷ்ரப் அருங்கட்சியகம் நிர்மாணிக்க காணி அடையாளம் காணப்பட்டுள்ள விடயமும் பாரிய சந்தேகத்தினை தோற்றுவித்துள்ளது.
ஏனென்றால், கடந்த 2015ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின் போது கல்முனை நகரிலுள்ள சிறு வீதியொன்றுக்கு 'கேற் முதலியார் எம்.எஸ் காரியப்பர்' என பெயர் சூட்டப்பட்டமைக்கு தமிழ் மக்கள் பாரிய எதிர்ப்பு வெளியிட்டதுடன் அதன் பெயர்ப் பலகை முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ஹென்ரி மகேந்திரனினால் உடைக்கப்பட்டது. அதனை குறித்த தேர்தலில் ஹரீஸ் எம்.பி பிரச்சாரமாக பயன்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
இந்த அருங்காட்சியகம் நிர்மாணிக்கப்படுகின்ற போது தமிழ் மக்கள் எதிர்ப்பு வெளியிட முடியும். இதனை தனது அடுத்த தேர்தல் பிரச்சாரத்திற்கு முதலீடாக பயன்படுத்துவதே ஹரீஸ் எம்.பியின் இலக்காகும். இது போன்று தான் கடந்த பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஞானசார தேரரையும் கருணா அம்மானையும் விமர்சிப்பதை ஹரீஸ் எம்;.பி துரும்பாக பயன்படுத்தியதை அம்பாறை மாவட்ட மக்கள் மறக்கமாட்டார்கள்.
இவ்வாறான நிலையிலேயே அடுத்த தேர்தலை அடிப்படையாக வைத்து 'அஷ்ரப் நினைவு அருங்காட்சியகம்' எனும் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதன் மூலம் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை. மாறாக வரி செலுத்துவோரின் 25 மில்லியன் ரூபா வீணடிக்கப்படுவதுடன் ஒரிரு அரசியல்வாதிகளின் எதிர்கால 'தேர்தல் கனவு' நனவாகுவது நிச்சயம்!
Comments (0)
Facebook Comments (0)