வேலிகளின் பின்னால்: இலங்கையின் மனித - யானை முரண்பாடு

வேலிகளின் பின்னால்: இலங்கையின் மனித - யானை முரண்பாடு

அஹ்ஸன் அப்தர்

மின்சார வேலி: யானைகளை விரட்டும் அதிக வினைத்திறன் மிக்க வழிமுறையாக மின்சார வேலிகள் கருதப்படுகின்றன

சிரமம் மிகுந்த இன்னொரு நாளை கழித்து விட்டு தனது இருப்பிடம் திரும்புகிறார் இலங்கை விவசாயி ரவுப் முஹம்மட். அவரின் வியர்வைத் துளிகள் தற்போது வற்றி இருக்கின்றன, தான் வாடகைக்கு எடுத்த வசதி குறைந்த வதிவிடத்தின் ஒரு மூலையில் ஆறுதலாக அமர்ந்து கொள்கின்றார்.

ரவுப் தனது சொந்த விவசாய நிலத்தில் வேலைகளை முடித்து விட்டு இருப்பிடம் திரும்பவில்லை, அவரின் தலைவிதி எதிர்பாராத வகையில் தலைகீழானதை கத்தார் பாலைவனத்தின் தூசி மிகுந்த மணல் மேடுகள் எமக்குக் கோடிட்டுக் காட்டுகின்றன.

தான் கத்தாருக்கு தொழில் தேடிப் போவேன் என்று ரவுப் ஒரு போதும் எண்ணியிருக்கவில்லை. எனினும், எங்காவது வருமானத்தை தேடி ஓடும் நிலையை அவர் பெற்றிருந்த கடன்கள் உருவாக்கியிருந்தன.

"மொத்தமாக 26 தென்னை மரங்களை யானைகளால் இழந்து விட்டேன். உயிர் போகும் வலியை விட பிள்ளைகளை போல வளர்த்த எங்கள் மரங்களை இழப்பதை எண்ணித்தான் இப்போதும் வருந்துகின்றேன்" என தனது தற்போதைய நிலையை சொல்லி வருந்துகின்றார் ரவுப்.

இலங்கையின் வட மேல் மாகாணத்தின் கல்பாண பிரதேசத்தில் வசிக்கும் ரவுப் எதிர்கொள்ளும் இச்சூழ்நிலை இந்நாட்டின் விவசாயத் தொழிற்துறை எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினையாக மாறி வருகின்றது.

அவரது தென்னந்தோட்டம் யானைகளால் அழிக்கப்பட்டது இலங்கைக்கு மிகவும் பரிச்சியமான விவசாயிகள் மற்றும் யானைகளுக்கு இடையே இடம்பெறும் மோதல் பற்றிய பல் நூற்றுக் கணக்கான கதைகளில் ஒன்றாகக் காணப்படுகின்றது.

கடந்த வருடத்தில் மாத்திரம் யானை - மனித மோதல் தொடர்பான 1,000 இற்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவற்றின் காரணமாக 145 மனித உயிரிழப்புகளும் 433 யானைகளின் அழிவும் ஏற்பட்டதுடன் முன்னொரு போதும் பதிவாகியிராத உயர் மட்டத்தினை இந்த யானை - மனித மோதல்கள் எட்டியுள்ளன.

மூன்று பிள்ளைகளின் தந்தையான ரவுப் தென்னை பெருந்தோட்டச் செய்கை, நெற்செய்கை மற்றும் நன்னீர் மீன் வளர்ப்பு போன்ற பல்வகைத் தன்மை மிக்க விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒரு விவசாயியாவார்.

யானை - மனித மோதலால் மிகவும் பாதிக்கப்படும் மாகாணமாக ரவுப் வாழும் வடமேல் மாகாணத்தை இலங்கை வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் அடையாளம் கண்டுள்ளது.

"எமது கிராமம் முற்றுமுழுதாக விவசாயத்திலேயே தங்கியுள்ளது. எனவே, எம்மையும் எமது நிலத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்தையே சார்ந்தது"  என்கிறார் ரவூப். தான் இழந்த தென்னை மரங்களுக்காக எந்தவித நட்டஈட்டையும் அரசாங்கம் வழங்கவில்லை என்ற தனது ஆதங்கத்தையும் அவர் எம்முடன் பகிர்ந்து கொண்டார்.


 
அழிவு: ரவூபின் தென்னந்தோட்டம் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளது.

அக்கிராம மக்கள் இது தொடர்பில் கொண்டுள்ள ஏமாற்றம் கிராம அலுவலகர் தனுஷ்க சந்தருவனின் கருத்திலும் பிரதிபலிக்கின்றது. "யானைகளின் தாக்குதல் காரணமாக மனிதர்கள் உயிரிழக்கும் வேளை அல்லது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படும் போது சமூக சேவகள் திணைக்களம் நட்டஈடு வழங்குகின்றது.

எனினும் பயிர்கள் எனும் போது நெல், மிளகாய், கௌபி, சோளம் மற்றும் ஏனைய சிறுபயிர்களே இந்நட்டஈட்டுத் திட்டத்துக்குள் உள்ளடக்கப்படுகின்றன. தென்னை மரங்கள் இத்திட்டத்துக்குள் உள்வாங்கப்படவில்லை" என்கிறார் தனுஷ்க.

தனது குடும்பத்தின் வாழ்வாதார இருப்பை பேணும் ஒரு விவசாய நடவடிக்கையாகவே ரவுப் தென்னை மரங்களை நட்டிருந்தார். பல வருடங்களாக இளம் தென்னை நாற்றுக்களுக்கு நீர் பாய்ச்சுதல் மற்றும் உரமிடுதல் போன்ற பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்காக தனது முயற்சியை அர்ப்பணித்ததை அவர் நினைவு கூர்ந்தார்.

மேலும், இத்தென்னை மரங்களை வளர்த்தெடுக்க அவர் குறிப்பிடத்தக்க அளவான பணத்தை முதலீடு செய்திருந்தார். எனினும், தென்னை மரங்கள் பலன் தர ஆரம்பிக்கும் பருவத்தை எட்டும் வேளை அடிக்கடி யானைகளால் அழிக்கப்படுவது ரவுபின் வாழ்வாதாரத்தை தொடர்ச்சியாக நெருக்கடிக்குள் தள்ளியது.

"தென்னை மரங்களை எனது சொந்தப் பிள்ளைகள் போன்றே நான் பராமரித்து வந்தேன், ஒரு மரத்தை இழப்பது எனது ஒரு பிள்ளை இறந்து போவது போன்ற வலியை ஏற்படுத்தியது" என்று ரவூப் கூறும் வேளை கடந்த சில வருடங்களாக அவர் அடைந்த வேதனை காரணமாக அவரின் குரல் தழுதழுத்தது.

பாதுகாப்புக்கான விலை: ரவூப் உருவாக்கிய மின்சார வேலியின் ஒரு பகுதி

தென்னை மற்றும் நெற்பயிர்ச் செய்கைகளில் உத்தரவாதப்படுத்தப்பட்ட விளைச்சல் எதுவும் இல்லாத நிலையில் ரவூப் சிறிய அளவின் நன்னீர் மீன் வளர்ப்புப் பண்ணை ஒன்றை ஆரம்பித்தார்.

கடந்த வருடத்தின் ஆரம்பப் பகுதியில், தனது தென்னந் தோட்டத்தை யானைகளிடம் இருந்து பாதுகாப்பதற்காக ரூபாய் 200,000 செலவில் தோட்டத்தைச் சூழ மின்சார வேலியை அமைத்தார்.

தோட்டத்துக்குள் உப வேலிகளையும் அமைத்து தனது மீன் பண்ணை முன்னெடுப்புக்காக செயற்கை குட்டைகளையும் அமைத்தார். இந்த உப வேலிகளை அமைப்பதற்காக அவருக்கு ரூபாய் 30,000 செலவாகியதுடன் இது அவரது இயலுமைக்கு அப்பாற்பட்ட செலவாகக் காணப்பட்டது.

தென்னை மற்றும் நெற்பயிர்ச் செய்கைகளில் உத்தரவாதப்படுத்தப்பட்ட விளைச்சல் எதுவும் இல்லாத நிலையில் ரவுப் சிறிய அளவின் நன்னீர் மீன் வளர்ப்புப் பண்ணை ஒன்றை ஆரம்பித்தார்.

கடந்த வருடத்தின் ஆரம்பப் பகுதியில், தனது தென்னந்தோட்டத்தை யானைகளிடம் இருந்து பாதுகாப்பதற்காக ரூபாய் 200,000 செலவில் தோட்டத்தைச் சூழ மின்சார வேலியை அமைத்தார். தோட்டத்துக்குள் உப வேலிகளையும் அமைத்து தனது மீன் பண்ணை முன்னெடுப்புக்காக செயற்கை தடாகங்கங்களையும் அமைத்தார். இந்த உப வேலிகளை அமைப்பதற்காக அவருக்கு ரூபாய் 30,000 செலவாகியதுடன் இது அவரது இயலுமைக்கு அப்பாற்பட்ட செலவாகக் காணப்பட்டது.


புதிய முன்னெடுப்புகள்: ரவூபின் அன்புக்குரிய நெற்செய்கை நன்னீர் மீன்வளர்ப்புக்காக கைவிடப்படுகின்றது

"இந்த வேலிகளை அமைக்க நாம் கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டோம். தென்னை மரங்களை இனி மேல் இழக்க முடியாது என்பதால் நான் கடன் வாங்கி இந்த வேலிகளை அமைத்தேன்"

"பெரும்பாலும் கடன் வாங்கி வேலிகள் கட்ட வேண்டியிருந்தது. எங்கள் தென்னந்தோப்புகளை இழக்கத் தயாராக இல்லாததால் நான் கடன் வாங்கி வேலிகள் கட்டினேன்" என்று ரவூப் கூறுகின்றார்.

விரக்தியின் எல்லையில் அவர் இவற்றை தெரிவிக்கிறார். கிராமத் தலைவர்கள் மற்றும் பிரதேச செயலக அலுவலகத்தின் உதவியைப் பெறுவதற்கான அவரது முயற்சிகள் செவிடன் காதில் சங்கூதுவதை போலவே இருந்தது. மேலும் அவர் அரசாங்கத்திடமிருந்து ஒரு சிறிய இழப்பீடு கூட பெறவில்லை.

தனது பண்ணைக்கு சர்வ சாதாரணமாக அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில் இதற்கு முன் பிரத்தியேகமாக நெல் விவசாயத்தில் ஈடுபட்டிருந்த ரவூப், தற்போது அதனை தற்காலிகமாக கைவிட்டுள்ளார்.

நெல் வயல்களின் அடிக்கடி அழிவுக்கு உட்படுவதால் அவர் படிப்படியாக அவற்றின் நெல் விவசாயத்தை கைவிட்டு கோழிப் பண்ணைகளை ஆரம்பித்து அதன் மூலம் கால்நடை விவசாயத்திற்கு மாறினார். பின்னர் அதனையும் கைவிட்டு மீன் வளர்ப்பில் ஈடுபட்டார்.

"அந்த நேரத்தில் என் கணவர் தோட்டத்திற்குச் செல்லும் போது நாங்கள் எப்போதும் அச்சுறுத்தலின் விளிம்பில் இருந்தோம். குழந்தைகளும் நானும் எப்போதும் கவலையுடனும் பயத்துடனும்தான் இருந்தோம். அவர் வேலை முடிந்து வீடு திரும்பும் வரை நிம்மதி கிடையாது" என்று ரவூப்பின் மனைவி அசீமா கூறுகிறார்.

யானைகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாக்க கிராமவாசிகள் பெரும்பாலும் இரவு நேரக் கண்காணிப்புச் சாவடிகளை அமைப்பதால், ரவூப்பின் குடும்பத்தினர் உணர்ந்த கவலை மாகாணத்தில் உள்ள விவசாய சமூகம் முழுவதும் மீண்டும் மீண்டும் வருகிறது.

போராடும் விவசாயிகளுக்கு, அரசு தரப்பில் இருந்து வரும் மோதலைத் தடுக்க பட்டாசு மட்டுமே உதவியாக உள்ளது. பட்டாசுகள் பலகையில் இணைக்கப்பட்டு யானைகள் வரும்போது பயமுறுத்தவோ அல்லது விரட்டவோ பயன்படுத்தப்படும். ஆனால் இவை பயனுள்ள நடவடிக்கைகளா?

இது ஒரு நிலையான தீர்வு அல்ல என்று உள்ளூர் சுற்றுச்சூழல் ஆர்வலர் பாலிந்த பெரேரா கருதுகிறார். "அரசால் நமக்கு வழங்கப்படும் இந்த பட்டாசுகள் நீண்ட காலத்திற்கு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தப் போவதில்லை. மக்களுக்கு வேறு வழியில்லை என்றால், அவர்கள் அதை சமாளிக்க வேண்டும். பட்டாசுகளின் நம்பகத்தன்மையற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம் தீவிரமாக மாற்றீடுகள் குறித்து சிந்திக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.


அரசாங்கம் வழங்கிய பட்டாசுகள்

இலங்கை மழைக்காடு பாதுகாப்பாளர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜயந்த விஜேசிங்கவும் இதே கவலையை வெளிப்படுத்தினார். "அரசாங்கம் வழங்கும் பட்டாசுகளுக்கு மாற்று வழிகளைக் கண்டுபிடிப்பது காலத்தின் தேவை. யானைகளை வெடி வைத்து விரட்டுவது பாதுகாப்பான முறை அல்ல. யானைகளால் அச்சுறுத்தப்படும் கிராமங்கள் மற்றும் விளைநிலங்களுக்கு மின்சார வேலி அமைப்பதே சிறந்த தீர்வாக இருக்கும்" என அவர் தெரிவிக்கிறார்.

ரவுப் மற்றும் அவரைப் போன்ற மாகாணத்தில் உள்ள விவசாயிகளுக்கு அடிப்படை பாரம்பரிய பாதுகாப்பு முறைகள்தான் இன்னும் உயிர்வாழ்வதற்கான பாதுகாப்பு முறைகளாக உள்ளது.

பெரும்பாலும் இந்த நடவடிக்கைகள் விவசாயிகள் கையில் இருக்கும் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். அதாவது பாத்திரங்களை அடித்து சத்தத்தை உருவாக்குவது, மரங்களில் கண்காணிப்பு கோபுரங்களை அமைப்பது மற்றும் மின்சார போகஸ் விளக்குகளைப் பயன்படுத்தி வெளிச்சத்தை உருவாக்குவது போன்றவை ஆகும்.

ஆனால் இவற்றில் வினைத்திறன் குறைவாக குறைவாக உள்ளது மற்றும் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலைமையை ஏற்படுத்துகின்றது. இந்த மோதலில் நவீன முறைகளை பயன்படுத்தி நிலைமையை மாற்றியமைப்பதற்கான நேரம் இது என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மனித விலங்கு மோதல் ஆய்வுகளில் கவனம் செலுத்தும் மாணவி சோனாலி வீரசிங்க நம்புகிறார்.

மேலும் நில ஆக்கிரமிப்பினால் மட்டுமே அதிகரிக்கும் பிரச்சினைக்கு மிகவும் சாத்தியமான தீர்வை உருவாக்க இயற்கையான வழிமுறைகளை பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை இலங்கை கொண்டிருப்பதைப் பற்றி அவர் பேசுகிறார்.

சோனாலியைப் பொறுத்தவரை, தேனீக்கள் மற்றும் ட்ரப் குரப்பிங் முறைகளைப் பயன்படுத்துவது யானைகள் மற்றும் அவற்றின் பிரதேசங்களில் அமைந்துள்ள கிராமங்கள் இரண்டிற்கும் சவால்களை  ஏற்படுத்தாமல் குறிப்பிடத்தக்க நேர்மறையான முடிவுகளைத் தரும் நம்புகின்றார்.

தேனீக் கூடு முறை என்பது விவசாய நிலங்களில் செயற்கையாக தேன் கூடுகளை உருவாக்கும் செயன்முறை ஆகும். இதனால் விவசாய நிலத்திற்கு அருகில் யானைகள் கூட்டமாக வருவதை குறைக்க முடியும்.

இதேபோல் ட்ரப் குரொப்பிங் முறைமையில்; யானைகள் விரும்பாத கற்றாழை மற்றும் பிற முள் செடிகள் போன்ற தாவரங்களை விவசாய நிலங்களுக்கு அருகில் வளர்ப்பதன் ஊடாக யானைகள் வருவதை தடுக்க முடியும். யானைகள் அத்தகைய தாவரங்களை உண்பதை விரும்புவதில்லை, மேலும் காலப்போக்கில் அது விவசாய நிலங்களை ஆக்கிரமிப்பதைக் குறைக்கும்.

மோதலைத் தவிர்ப்பதில் வெளிநாடுகளில் இந்த இயற்கை முறைகளின் ஒப்பீட்டு வெற்றியை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பல ஆபிரிக்க நாடுகள் தேனீக் கூடு முறையை ஒரு வெற்றிகரமான தீர்வாக அடையாளம் கண்டுள்ளன.

எவ்வாறாயினும் வவுனியா பல்கலைக்கழகத்தின் உயிரியல் சிரேஷ்ட விரிவுரையாளர் விஜயமோகன் சண்முகசுந்தரம், ஆசிய யானைகளுக்கு இதை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் எச்சரிக்கையை வெளியிடுகின்றார். ஏனெனில் ஆசிய யானைகள் அனுபவத்தின் மூலம் கற்றுக்கொள்ளும் திறன் கொண்டவை என்று அவர் கூறுகிறார்.

விஜயமோகனைப் பொறுத்தவரை நீண்ட காலத்திற்கு இந்த அமைப்புகளில் தங்கியிருப்பது இலங்கையில் தொடர்ந்து சரிவைக் காணக்கூடியதாக இருக்கும். விவசாய சூழலில் முட்கள் நிறைந்த தோட்டங்களை வளர்ப்பதால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்தும் அவர் எச்சரித்தார்.

"ட்ரப் குரொப்பிங் முறை மூலம், குக்குல் கட்டு, கற்றாழை, தேசிக்காய் போன்ற முள் செடிகளை வளர்ப்பதன் மூலம் யானைகளிடம் இருந்து பாதுகாப்பு பெறலாம். ஆனால், அத்தகைய செடிகளை தேர்ந்தெடுக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். உதாரணமாக நாகத்தலி போன்ற முட்செடிகள் வேகமாக பரவி வளர்வதால் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது" என அவர் மேலும் தெரிவித்தார்.

ரவூஃப்பைப் பொறுத்தவரை அவரது பிரச்சினைகள் அவசரமாக தீர்வு காண வேண்டிய பிரச்சினைகள் ஆகும். இப்போது அவரது மீன் பண்ணையை பராமரிக்கும் அதேவேளை கடனை அடைப்பதிலும் சிரமங்களை எதிர்கொள்கிறார். வீட்டை விட்டு வெளிநாட்டில் வேலை செய்தும், கடனை திருப்பி செலுத்தும் கவலையாலும் ரவுப்பின் குடும்பம் எந்த உதவியும் இல்லாமல் பரிதவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இலங்கையில் மனித யானை மோதலைத் தீர்ப்பதற்கு தேசிய செயற்றிடத்தை தயாரிப்பதற்காக 2020 ஜூலை 22 அன்று ஜனாதிபதி குழு ஒன்று நியமிக்கப்பட்டது. இலங்கை மற்றும் வெளிநாடுகளில் உள்ள அனைத்து மனித - யானை மோதலைத் தீர்க்கும் முறைகள் பற்றிய மீளாய்வை இந்தக் குழு நடத்தியது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட கலாநிதி பிரிதிவிராஜ் பெர்னாண்டோவின் தலைமையில் கலாநிதி பிலப்பிட்டியவும் அங்கம் வகித்த குழுவினால் இந்த செயற்திட்டம் தயாரிக்கப்பட்டது.

இந்த தேசிய செயற்றிட்டத்திற்காக ஏற்றுக்கொள்ளப்படும் செயற்பாடுகள் அவற்றின் நிரூபிக்கப்பட்ட செயற்றிறன், பொருத்தமான புவியியல் மற்றும் நேர அளவில் செயல்படுத்தப்படும் திறன் மற்றும் செலவு செயற்றிறன் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

"வயல்களைச் சுற்றி பருவகால விவசாய வேலிகள் மற்றும் கிராமங்களைச் சுற்றி சமூக அடிப்படையிலான கிராம வேலிகள் அமைக்கப் பார்க்கிறோம். டாக்டர் பெர்னாண்டோ வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் இந்த மாதிரியை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார். மேலும் போதுமான காடுகள் இல்லாத பகுதிகளில் நாங்கள் அதை அமைக்கிறோம்" என்று அவர் விளக்கினார்.

வட மேல் மாகாணங்களில் வயல்களுக்கு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதாக பணிப்பாளர் தெரிவிக்கின்ற போதிலும் யானை மனித மோதல் அதிகமாக இடம்பெறுகின்ற வட மேல் மாகாணத்தின் முக்கிய இடங்களில் ஒன்றான நிக்கவரட்டிய பிரதேசத்தில் அரசாங்கத்தினால் வேலிகள் எதுவும் அமைக்கப்படவில்லை என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றார்கள்.

தற்போது வட மேல் மாகாணத்தின் சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பெரும்பாலான மின்சார வேலிகளில் யானைகள் இருபுறமும் இருப்பதாகவும் அதில் எந்த அர்த்தமும் இல்லை என்றும் வேலிகள் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் உள்ள காடுகளின் எல்லையில் அமைந்துள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கிறார்கள்.

இதனை ஜயந்த விஜேசிங்கவும் உறுதிப்படுத்துகின்றார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த பிலாபிட்டிய 'மனிதர்கள் நிர்வாக வேறுபாடுகளை புரிந்து கொண்டாலும் யானைகள் புரிந்து கொள்வதில்லை. யானைகள் சூழலியலை மட்டுமே புரிந்து கொள்கின்றன. எனவே காடுகளுக்குள் உள்ள வேலிகளை சுற்றுச்சூழல் எல்லைக்கு மாற்ற வேண்டும்.' என்றார்.

யானை மனித மோதல்களை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நிதிகள் பயன்படுத்தப்படும் முறைமை தொடர்பாக வினவியபோது தேவையான அளவு நிதி இருக்கின்றபோதிலும் அதை திறமையான முறையில் பயன்படுத்துவதற்கு முடியாமால் இருப்பதாக பிலாபிட்டிய தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்டக் கட்டுப்பாடுகள் காரணமாக அரசாங்கம் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பெயரளவிலான தொகையை நடைமுறைப்படுத்துவதற்கு ஒதுக்கியுள்ளதாக பிலாபிட்டிய குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் முதற்கட்டமாக உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் அனுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் நீர்ப்பாசனம் மற்றும் விவசாய ஆதரவில் ஈடுபட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் கிராம வேலிகளுக்கு சில வசதிகளைக் கொண்டிருப்பதாக அவர் வெளிப்படுத்தினார்.

அநுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்களின் பிரதேச செயலகங்களும் இத்திட்டத்தில் ஈடுபடுவதற்கு பொது நிர்வாக அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதுடன் பிரதேச செயலகங்கள் மற்றும் கமநல அபிவிருத்தி திணைக்களத்திற்கான பயிற்சிகளை மேற்கொள்வதற்கான பணிகளில் குழு தற்போது ஈடுபட்டுள்ளது.

"2023 ஆம் ஆண்டிற்கு நாம் அனுராதபுரம் மற்றும் குருநாகலில் மட்டுமே கவனம் செலுத்த முயற்சிக்கிறோம். அங்குதான் ஏதாவது செய்ய பணம் கிடைக்கும்.

செயல்திறனின் அடிப்படையில் 2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கம் இதனை நாடு தழுவிய ரீதியில் விரிவுபடுத்துவதற்கு பணத்தை ஒதுக்குவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது" என்று பிலபிட்டிய கூறினார்.

கடந்த வருடம் மின்சார வேலிகளை அமைப்பதற்காக 500 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பொருட்கள் மற்றும் சேவைகளை கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்ட போதிலும் 630 மில்லியன் ரூபாய் செலவு செய்யப்பட்டதன் ஊடாக 130 மில்லியன் ரூபாய்கள் அதிகமாக செலவு செய்யப்பட்டுள்ளன.

27 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் வனவிலங்கு பாதுகாப்புத் துறைக்கு சர்வதேச ஒத்துழைப்புக்கான ஜெர்மன் ஏஜென்சி திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது என்பதை பெப்ரவரி 19, 2022 அன்று நடத்தப்பட்ட கணக்காய்வில் இனங்காண முடிந்தது.

ஆனால் 2020ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் வெளிநாட்டு உதவித் திட்டங்களில் ,ருந்து பெறப்பட்ட சொத்துக்கள் பதிவு செய்யப்படாவிட்டால் ஏற்படும் அபாயங்கள் குறித்து சுட்டிக்காட்டப்பட்டிருந்த போதிலும் அந்த எண்ணிக்கை இன்னும் இருப்புநிலைக் குறிப்பில் குறிப்பிடப்படவில்லை.

அதேவேளை 2020ஆம் ஆண்டில் மின்சார வேலிகளுக்காக 221 மில்லியன் ருபாய் செலவிடப்பட்டது. இந்த செலவில் கட்டப்பட்ட மின்சார வேலிகளின் மொத்த நீளம் 4,756 கிலோ மீற்றர் ஆகும். மேலும் 2019 ஆம் ஆண்டில் அரசாங்கம் 275 மில்லியன் ருபாய் செலவில் மின்சார வேலிகயை அமைப்பதற்காக பயன்படுத்தியுள்ளது.

சிக்கல் கவனிக்கப்படாமல் போகவில்லை, மேலும் மோதலைத் தடுக்க புதிய முறைகள் உருவாக்கப்படுகின்றன. தொங்கும் மின்சார வேலிகள் அமைப்பதே ,லங்கைக்கு பொருத்தமான தீர்வாக அமையும் என விரிவுரையாளர் விஜயமோகன் தெரிவிக்கிறார்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள தொங்கும் மின்சார வேலிகள் மிகவும் நடைமுறை சாத்தியம் மற்றும் பயனுள்ள முறையாக நிரூபிக்கப்பட்டுள்ளன. ஆசிய யானைகள் அனுபவத்தில் இருந்து கற்றுக்கொள்ளும் அளவுக்கு புத்திசாலித்தனமாக உள்ளன என்பதால் இப்போது சாதாரண மின்சார வேலிகளை உடைக்கும் வழிகளைக் கண்டறிந்துள்ளன. இதன் விளைவாக தற்போது தொங்கும் மின்சார வேலிகள் ஒரு சிறந்த நீண்ட கால தீர்வாக இருக்கும்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீட விரிவுரையாளர் நுவான் குருவிட்டாரச்சியின் தலைமையிலான வயர்லெஸ் சென்சார் அடிப்படையிலான வலையமைப்பு மூலம் யானைகளை விரட்டும் முறைமை ஒன்றை கண்டறிந்துள்ளது. இலத்திரனியல் மற்றும் இலத்திரனியல் பொறியியலாளர்கள் ஸ்தாபனத்தின் சர்வதேச வெளிவரும் தொழில்நுட்ப மாநாட்டில் (2021) இந்த ஆய்வு வெளியிடப்பட்டது.

வாதங்களின் அனைத்து பக்கங்களையும் அங்கீகரிப்பதுடன் கலாசாரம் மற்றும் குறைந்து வரும் யானைகளின் எண்ணிக்கை ஆகியவற்றை விட விவசாயிகளின் சவால்களை ஏற்றுக்கொள்வதே இப்போது மிக முக்கியமானது என்று விஜயமோகன் நம்புகிறார்.

விஞ்ஞான முறைகள் மூலம் மோதலுக்கு சாத்தியமான தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். இலங்கையில் 42 சதவீத யானைகள் இயற்கையான காரணங்களால் இறக்கின்றன.

யானைகளைக் காப்பாற்றுவதில் கவனம் செலுத்துவது இன்றியமையாததாக இருந்தாலும், மக்கள் நலனுக்காக அரசு தீவிரமாகச் செயல்படும்போதுதான் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும்.

மதம், கலாசாரம், மனிதநேயம் மற்றும் மரபுகளுக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தை விட விஞ்ஞான அணுகுமுறைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதற்கு அரசாங்கமும் இலங்கை விவசாயிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தனது குடும்பத்திற்கும் சிறு வயதிலிருந்தே நேசித்த தொழிலுக்கும் திரும்ப முடியாமல் அந்நிய தேசத்தில் தவிக்கும் ரவுபிற்கு இதெல்லாம் கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது.