2024 இலங்கைத் தேர்தல்கள்: ஜனரஞ்சக இடதுசாரிகளின் முக்கியமான எழுச்சி

2024 இலங்கைத் தேர்தல்கள்: ஜனரஞ்சக இடதுசாரிகளின் முக்கியமான எழுச்சி

ரமிந்து பெரேரா

செப்டம்பர் 23 அன்று, தேசிய மக்கள் சக்தியின் (NPP) இடதுசாரி தலைவரான 56 வயதான அனுரகுமார திசாநாயக்க இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்றார். ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக தேர்தலில் நின்ற முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்கட்சித் தலைவரான ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) சஜித் பிரேமதாச மற்றும் திஸாநாயக்கவின் NPP கூட்டணிக்கு இடையில் மும்முனைப் போட்டி நிலவியது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான நாமல் ராஜபக்சவும் ஒரு காலத்தில் அதிகாரம் செலுத்திய ராஜபக்ச வம்சத்தின் பாரம்பரியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) சார்பில் போட்டியிட்டார்.

தேர்தல் முடிவுகள் இலங்கை அரசியலில் ஒரு வியத்தகு மாற்றத்தைக் காட்டியதுடன், 2019ஆம் ஆண்டு முன்னைய ஜனாதிபதித் தேர்தலில் தேசிய வாக்குகளில் 3 சதவீதத்தை மட்டுமே பெற்ற திசாநாயக்க மொத்த வாக்குகளில் 42 சதவீதத்தைப் பெற்று முன்னணியில் இருந்தார்.

அவர் தனது நெருங்கிய போட்டியாளரான பிரேமதாசாவை விட 1.3 மில்லியன் வாக்குகளால் முன்னிலை பெற்றுள்ள அதேவேளையில் விக்கிரமசிங்க பின்தங்கி வெறுமனே 17 சதவீத வாக்குகளையே பெற்றார்.

கடந்த 2019 தேர்தலில் 6.9 மில்லியன் வாக்குகளைப் பெற்ற SLPP வெறுமனே 0.3 மில்லியன் வாக்குகளாகக் குறைந்து ஒரு அவமானகரமான தோல்வியை தழுவியது. திஸாநாயக்கவின் எழுச்சி பல அவதானிப்பாளர்களுக்கு ஆச்சரியமாக இருந்ததுடன், சர்வதேச ஊடகங்கள் ஒரு "மார்க்சிஸ்ட்" இலங்கையின் ஜனாதிபதியாக வருவதைப் பற்றிய செய்திகளால் நிரம்பி வழிகின்றன.

பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பம்

சுதந்திரத்திற்குப் பிந்தைய வரலாற்றில் இலங்கை எதிர்கொள்ளும் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அனுரகுமார திஸாநாயக்கவின் தேர்தல் வந்துள்ளது.

2022ஆம் ஆண்டில் கொவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்ட நிதியியல் அதிர்ச்சியின் பின்னணியிலும், சுற்றுலாத் துறையின் சரிவு மற்றும் வெளிநாட்டுப் பணம் அனுப்புகை வீழ்ச்சியினால் வெளிநாட்டு வருமானம் குறைந்தமையிலும், நாடு கடுமையான சென்மதி நிலுவை நெருக்கடிக்குள் நுழைந்தது.

அதிகரித்த வெளிநாட்டு கடன் தொடர்பான கடப்பாடுகள் நிலைமையை மோசமாக்கியது. 2022 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் பொருளாதாரம் ஸ்தம்பிதமடைந்ததுடன், மின்வெட்டு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை ஆகியவை அன்றாட வாழ்வை முடங்கும் விளைவை ஏற்படுத்தியது.

மேலும் வாசிக்க: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாகிஸ்தான் நிவாரணம் வழங்கல்

பொருளாதார நெருக்கடியானது ஓர் வெகுஜன எதிர்ப்பு போராட்டத்தைத் தூண்டியதுடன், இது மில்லியன் கணக்கானவர்கள் வீதிகளில் இறங்க வழிவகுத்தது. "அரகலயா" ("போராட்டம்" என்பதன் சிங்களச் சொல்) என்று பிரபலமாக அறியப்படும் எதிர்ப்பலையானது, அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி நீக்கம் செய்யக் கோரிய ஓர் சுயமான எழுச்சியாகும்.

பல தெற்காசிய நாடுகளைப் போலவே, இலங்கையின் அரசியலும் பெரும்பாலும் சக்திவாய்ந்த அரசியல் குடும்பங்களால் வடிவமைக்கப்பட்டது. 2000களில் மஹிந்த ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் முக்கியத்துவம் பெற்ற ராஜபக்ஷ குடும்பம், சிறுபான்மையினரான தமிழ் மற்றும் முஸ்லிம் சகாக்களுக்கு எதிராக பெரும்பான்மை சிங்கள சமூகத்தை முன்நிறுத்தியதன் மூலம் ஓர் கடும்போக்கான இன - தேசியவாத நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்தது.

மஹிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதரரான கோட்டாபய ராஜகபக்ஷ "சிங்களவர்களுக்கு உரிய இடத்தை" மீட்டெடுப்பதாக உறுதியளித்து 2019 தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்ததுடன், இது முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வுகளை அணிதிரட்டியது.

மேலும் வாசிக்க: புல்மோட்டையில் நடந்தது என்ன?

தேர்ந்தெடுக்கப்பட்டபோது பெரும் புகழைப் பெற்றிருந்த கோட்டாபய ராஜகபக்ஷ, பொருளாதார நெருக்கடியால் தோல்வியடைந்து, 2022 ஜுலையில் வெகுசன எதிர்ப்புக்களால் நாட்டை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டார்.

அவரது ராஜினாமாவிற்குப் பிறகு, இன்னமும் ராஜகபக்ஷவின் SLPP ஆதிக்கம் செலுத்தும் பாராளுமன்றம், ரணில் விக்ரமசிங்கவை புதிய ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்ததுடன், அவர் நாட்டினை மீட்பதற்கான நிவாரணத்தைப் பெற சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) பேச்சுவார்த்தை நடாத்தினார்.

மார்ச் 2023 இல் இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் விரிவாக்கப்பட்ட நிதியளிப்பு வசதியை IMF அங்கீகரித்துள்ளதுடன், இது வரி அதிகரிப்பு மற்றும் மின்சாரம் மற்றும் எரிபொருள் மானியங்களை நீக்குதல் போன்ற சிக்கன நடவடிக்கைகளை அரசாங்கம் விதிக்க வேண்டும் என்ற கடுமையான நிபந்தனைகளுடன் கிடைத்தது.

ஜே.வி.பி: கொரில்லா போரிலிருந்து பாராளுமன்றம் வரை

திசாநாயக்க மற்றும் NPPயின் எழுச்சியின் வேர்கள் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பங்கள் காரணமாக பொதுமக்களின் எண்ணங்களில் ஏற்பட்ட மாற்றங்களில் காணப்பட்டது.

இடதுசாரி அரசியல் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) ஒரு முயற்சியாக 2019 இல் NPP உருவாக்கப்பட்டது. பல்வேறு மாறுதல்களையும் உருமாற்றங்களையும் உள்ளடக்கிய ஜேவிபியின் வரலாற்றுப் பாதையைப் புரிந்து கொள்ளாமல் NPP யை புரிந்து கொள்ள முடியாது.

1960களின் நடுப்பகுதியில் ஒரு போர்க்குணமிக்க புரட்சிகரக் குழுவாக ஸ்தாபிக்கப்பட்டு, தன்னை ஒரு "மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்" அமைப்பாக அடையாளப்படுத்திக் கொண்டு, ஜேவிபி 1971 மற்றும் 1987-89ல் அரசாங்கத்திற்கு எதிராக இரண்டு ஆயுதமேந்திய கிளர்ச்சிகளை வழிநடாத்தியது.

இந்த எழுச்சிகளின் போது, சிங்கள கிராமப்புறங்களில் இருந்து தீவிரப்போக்குடைய இளைஞர்களின் தலைமுறையை கட்சி ஈர்த்தது. இரண்டு கிளர்ச்சிகளும் நசுக்கப்பட்டதுடன் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கொல்லப்பட்டனர். 1987-89 காலப்பகுதியில், ஜே.வி.பி. அதன் ஸ்தாபகரான ரோஹன விஜேவீர உட்பட அதன் முதல் தலைமுறைத் தலைவர்களை இழந்தது.

மேலும் வாசிக்க: திட்டமிட்ட முறையில் இயங்காமையினால் குப்பை மேடாக மாறிய அஷ்ரப் நகர் நில நிரப்புதளம்

1990களின் நடுப்பகுதியில், சோமவன்ச அமரசிங்கவின் (1987-89 அரச பயங்கரவாதத்தில் இருந்து தப்பிய பழைய ஜே.வி.பி. யின் ஒரே அரசியல் குழு உறுப்பினர்) தலைமையில், ஜே.வி.பி மறுசீரமைக்கப்பட்டு பிரதான பாராளுமன்ற அரசியலில் நுழைந்தது.

அநுரகுமார திஸாநாயக்க ஜே.வி.பி வரலாற்றின் பாராளுமன்றக் கட்டத்தில் உருவாக்கப்பட்ட ஜே.வி.பி தலைமையின் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்தவராவார். திஸாநாயக்க 1980களின் பிற்பகுதியில் ஜே.வி.பி.யின் மாணவர் பிரிவில் சேர்த்துக்கொள்ளப்பட்டதுடன் அரச பயங்கரவாதத்திலிருந்து தப்பித்து மறைந்திருந்தார்.

ஜே.வி.பி. மீண்டும் பணியை ஆரம்பித்ததும், அவர் ஓர் மாணவர் தலைவராக உருவெடுத்து, ஜே.வி.பி.யுடன் இணைந்த சோசலிச மாணவர் ஒன்றியத்தின் தேசிய அமைப்பாளராக ஆனார். 2000 ஆம் ஆண்டில், அவர் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் அன்றிலிருந்து பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.

ஜே.வி.பி பிரதான அரசியலில் பிரவேசித்ததன் பின்னர், சுதந்திரத்திற்குப் பின்னர் நாட்டை ஆட்சி செய்த இரண்டு பிரதான கட்சிகளுக்கு வாக்களிக்கப் பழகிய பரந்த வாக்காளர் மக்களைச் சென்றடைவதற்கான ஒரு கடினமான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

பாரம்பரிய இரு கட்சி முறைமையால் ஏமாற்றமடைந்த வாக்காளர்களை ஈர்க்கும் முயற்சியின் ஆரம்ப காலகட்டத்தின் பின்னர், 2000 களில், ஜே.வி.பி. நாட்டில் இன முரண்பாடு அதிகரித்து வந்த சூழலில் சிங்கள தேசியவாத நிலைப்பாட்டை ஏற்கும் நோக்கில் நகர்ந்தது.

பிரிவினைவாதப் போருக்கு இராணுவத் தீர்வை முன்வைத்து, தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) வட இலங்கையில் செயற்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், JVP 2005 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்தது.

அது ஒரு தற்காலிக தேர்தல் ஊக்கத்தை கொண்டு வந்தாலும், கூட்டு அரசியலின் சோதனை மற்றும் சிங்கள தேசியவாதத்துடனான கூட்டணி ஜே.வி.பிக்கு ஓர் பேரழிவாக முடிந்தது. ராஜபக்சே சிங்கள தொகுதிகளில் மிகவும் பிரபலமானதுடன், இதன் விளைவாக ஜேவிபியின் ஆதரவு தளம் குறைவடைந்தது.

மேலும் வாசிக்க: 'கட்டாய ஜனாஸா எரிப்பு: சன்ன பெரேராவின் நிபுணர் குழுவே நடைமுறைப்படுத்தியது'

ஜே.வி.பி.யின் கிராமப்புற வெகுஜனத் தளம் பெருமளவில் ராஜபக்சவிடம் திரும்பியதுடன், தேர்தல் பரப்பில் ஓர் விளிம்புநிலை சக்தியாக மாற்றமடைந்தது (கீழே உள்ள அட்டவணையைப் பார்க்கவும்).

NPP ஐ உருவாக்குதல்

இந்த சாதகமற்ற சூழ்நிலையில்தான் 2014இல் அனுரகுமார திஸாநாயக்க ஜே.வி.பி தலைவராக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையின் கீழ், கட்சியானது சிங்கள தேசியவாத பிரச்சாரங்களுடனான அதனது முந்தைய தொடர்புகளில் இருந்து விலகி, பரந்த மக்களை சென்றடைவதற்கான ஒரு பிரபலமான வேண்டுகோளாக "ஊழல்-எதிர்ப்பை" ஏற்றுக்கொண்டது.

மேலும், ஜே.வி.பி சமூகத்தின் பல்வேறு பிரிவுகளை ஈர்க்கக்கூடிய ஒரு பரந்த வெகுசன இயக்கத்தை நிறுவ முயன்றது. அதன்படி, 2019 இல் NPP உருவாக்கப்பட்டது. புதிய தளம் பல்வேறு சிவில் சமூக ஆர்வலர்கள், தொழிற்சங்கங்கள், தொழில்முறை அமைப்புகள் மற்றும் புத்திஜீவிகளை ஒன்றிணைத்ததுடன் இரண்டு பாரம்பரிய பிரதான கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் அரசியல் ஸ்தாபனத்திற்கு மாற்றீடாக தன்னை முன்வைத்தது.

முன்னரே விபரித்தது போல், 2022 பொருளாதார நெருக்கடி மற்றும் அரகலயா எதிர்ப்பு இயக்கம் NPP ஓர் பாரிய இயக்கமாக வளர தேவையான சூழ்நிலைமைகளை வழங்கியது. பொருளாதார நெருக்கடியின் போது SLPP இன் சரிவு நாட்டில் பெரும் அரசியல் வெற்றிடத்தை உருவாக்கியது.

நெருக்கடியால் உருவாக்கப்பட்ட அரசியல் "தருணத்தை" NPP வெற்றிகரமாகக் கைப்பற்றியுள்ளது என்பதை சமீபத்திய தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. இந்த வெற்றிக்கு பொதுமக்களின் பார்வையில் தன்னை ஒரு சாத்தியமான அரசியல் மாற்றீடாக நிலைநிறுத்துவதில் வெற்றி பெற்ற NPP பின்பற்றிய அரசியல் மூலோபாயமே காரணம் என்று கூறலாம்.

ஒருபுறம், பொருளாதாரச் சரிவு நாட்டின் பாரம்பரிய அதிகார உயரடுக்கின் ஊழல் நடத்தையுடன் தொடர்புடையது என்று இப்போது நம்பும் வெகுசனங்களின் அபிலாஷைகளை நிவர்த்தி செய்யும் திறன் கொண்ட ஓர் திசைதிருப்பும் மூலோபாயத்தை NPP பின்பற்றியது.

இடதுசாரி ஜனரஞ்சக மூலோபாயத்தை பிரதிபலிக்கும் வகையில், திசாநாயக்க, மக்களிடமிருந்து அதிகாரத்தை அபகரித்துள்ள "ஊழல் அரசியல் உயரடுக்கிற்கும்" அதன் தவறான செயல்களால் பாதிக்கப்படுகின்ற "மக்களுக்கும்" இடையே ஒரு அரசியல் எல்லையை வரையறுத்துள்ளார்.

"மறுமலர்ச்சி யுகத்திற்கு" அழைப்பு விடுத்து, "கீழ்நிலை மக்களின் இயக்கம்", "மக்கள் இயக்கம்" என பிரஸ்தாபிக்கப்பட்ட NPP ஆனது இரண்டு பிரதான கட்சிகளால் பராமரிக்கப்படும் நிலைக்கு எதிராகப் போராடுகிறது.

இந்த பிரச்சாரத்தை வளர்ப்பதில், NPP தன்னை ஓர் நடுநிலை-இடதுசாரி தளமாக நிலைநிறுத்தி, ஜனாதிபதி விக்கிரமசிங்க மற்றும் SJB இன் நவ-தாராளவாத அரசியலில் இருந்தும் பல்வேறு சிறிய தீவிர இடது போக்குகளிலிருந்தும் தன்னை விலத்திக் கொண்டது.

NPP பிரச்சாரத்தின் மையத்தில் மக்களின் கோரிக்கை முறையீடு இருந்தபோதிலும், முக்கிய செய்தியுடன் வேறு பல கருப்பொருள்களும் இடம்பெற்றன. அத்தகைய மூன்று விடயங்கள் குறிப்பிடத்தக்கவையாகும்.

முதலாவதாக, திசாநாயக்கவின் அரசியல் தளமானது வறுமையின் பிடியிலுள்ளதும் மோசமான பொருளாதார நிலைமைகளை கொண்டதுமான அடிப்படைமட்ட சமூக மக்களை அதிகளவில் கொண்டதாக காணப்பட்டது.

NPP நிகழ்ச்சித் திட்டமானது, பொருளாதார நெருக்கடி மற்றும் IMF ஆணையிட்ட சிக்கன நடவடிக்கைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களுக்கு உடனடி பொருளாதார நிவாரணம் வழங்குவதாக உறுதியளித்தது.

மேலும், கல்வி மற்றும் சுகாதாரத்தை பொது சேவைகளாக பாதுகாக்கவும், பொது சேவைகள் மற்றும் சமூக நலனில் முதலீட்டை அதிகரிக்கவும், கூட்டாக பேரம் பேசுவதை வலுப்படுத்துவதாகவும் அறிவித்தது.

இரண்டாவதாக, NPP வகுப்புவாத அரசியலுக்கு எதிராக முறையீட்டை முன்னெடுத்தது. சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தில் இன மற்றும் மத சமூகங்களுக்கு இடையில் பிளவை விதைத்தமைக்காக அரசியல் உயரடுக்கை விமர்சித்த திஸாநாயக்க, இன, மொழி மற்றும் மத வேறுபாடுகள் இருந்தபோதிலும், உயரடுக்கின் ஸ்தாபனத்தை தோற்கடிக்க NPP யைச் சுற்றி அணிதிரளுமாறு அனைத்து மக்களையும் வலியுறுத்தினார்.

பல பொது உரைகளில், திஸாநாயக்க 2019 இல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக பயன்படுத்தப்பட்ட இஸ்லாமிய வெறுப்பு பிரச்சார ராஜபக்சக்களை தாக்கினார். மூன்றாவதாக, சமூக உள்ளடக்கம் தொடர்பான விடயங்களில் அவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்தார். உதாரணமாக, தேர்தலுக்கு நீண்ட காலத்திற்கு முன்பு, NPP பெண்களுக்கான தளத்தை அறிமுகப்படுத்தியதுடன், அது அரசியலில் பெண்களின் குறைவான பிரதிநிதித்துவம், ஊதியம் பெறாத பராமரிப்பு வேலை மற்றும் பால்நிலை தொடர்பான பிற அநீதிகள் போன்ற பிரச்சினைகளை முன்னிலைப்படுத்துகிறது.

பெண்கள் தலைமையிலான இந்த தளமானது நாடு முழுவதும் அரசியல் பேரணிகளை ஏற்பாடு செய்ததுடன், இது குறிப்பாக கிராமப்புறங்களில் ஆயிரக்கணக்கான பெண்களை ஈர்த்தது. இந்த "பெண்களை மட்டும் கொண்ட" பேரணிகள் இலங்கை அரசியல் வரலாற்றில் முன்னெப்போதுமில்லாத ஒன்றாகும். இயலாமையுடையவர்களுக்கான தனியான தேர்தல் அறிக்கையை வெளியிட்ட முதலாவது அரசியல் கட்சியும் NPP ஆகும்.

"களமட்டத்திலிருந்து" ஒரு கூட்டணி

நிறுவன மட்டத்தில், எந்தவொரு முக்கிய அரசியல் கட்சியுடனும் அல்லது அந்த கட்சிகளின் அறியப்பட்ட அரசியல்வாதிகளுடனும் இணைய மறுப்பதன் மூலம், அரசியல் பிரதான நீரோட்டத்தின் மீதான வெறுப்பு உறுதியாக பேணப்பட்டது. அதற்கு பதிலாக, NPP நாடு முழுவதும் "அரசியல் சபைகள்" (Kottasha Sabhas) எனப்படும் களமட்ட அளவிலான வலையமைப்பை நிறுவியதுடன் கடந்த காலத்தில் பிரதான கட்சிகளை ஆதரித்த உள்ளூர் ஆர்வலர்களுக்கு இந்த சபைகளின் கதவுகளைத் திறந்தது.

மேலும், NPP ஒரு போராட்ட கட்சி மட்டுமே, அரசாங்க கட்சியாக ஆக இயலாது என்ற எதிர்க்கட்சிகளின் கூற்றை எதிர்கொள்வதற்கு நாட்டின் தொழில்முறையான உத்திகளை ஒழுங்கமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இறுதியாக அநுரகுமார திஸாநாயக்கவின் தனிப்பட்ட பிம்பமும் தேர்தல் பிரச்சாரத்தில் கணிசமான பங்கை வகித்தது. பல தசாப்தங்களாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த திஸாநாயக்க இரு பிரதான கட்சிகளினதும் பல்வேறு தவறான செயற்பாடுகளை கடுமையாக விமர்சிப்பவராக ஓர் ஈர்க்கக்கூடிய வரலாற்றினைக் கொண்டிருந்தார்.

சுவாரஸ்யமாக, 2024 ஜனாதிபதித் தேர்தலில், திஸாநாயக்கவுக்கு எதிரான மூன்று பிரதான போட்டியாளர்களும் அரசியல் குடும்பங்களைச் சேர்ந்த முன்னாள் ஜனாதிபதிகளின் மகன்கள் அல்லது மருமகன்கள் போன்ற தனிநபர்கள் என்பதுடன், கொழும்பில் உள்ள உயர்தர பாடசாலைகளில் கற்றவர்கள் என்பதுடன் சிறுவயதில் இருந்தே அனைத்து வகையான சலுகைகளையும் பெற்றவர்களாவர்.

மாறாக, அநுராதபுர மாவட்டத்தின் கிராமப்புறத்திலிருந்து வந்த தொழிலாள வர்க்கக் குடும்பத்தின் மகனான நாட்டின் இலவசக் கல்வி முறையின் விளைபொருளான திஸாநாயக்க, தனது வாழ்நாள் முழுவதும் மற்ற போட்டியாளர்களுக்கு மாறாக உயரடுக்கின் ஊழல்களை கடுமையாக விமர்சித்தவராவார்.

முன்னோக்கியுள்ள வழி

திஸாநாயக்க தனது வாக்குறுதிகளை நிறைவேற்றும் திறன் பல காரணிகளைச் சார்ந்துள்ளதுடன், அவர் சர்வதேச மற்றும் உள்நாட்டு துறைகளில் பல சவால்களை எதிர்கொள்வார். நாட்டின் பொருளாதாரத் திறனைப் பெரிதும் பாதித்துள்ள கடன் நெருக்கடிதான் முதன்மையான சவாலாகும்.

கடந்த ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட இருதரப்பு மற்றும் வர்த்தக கடன் வழங்குநர்களுடனான கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் இன்னமும் நிறைவடையவில்லை. நாட்டின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு கணிசமான கடன் நிவாரணம் பெறுவது இன்றியமையாததாக இருந்தாலும், இலங்கையின் திவால் நிலை காரணமாக பேரம்பேசும் சக்தி குறைவாக இருக்கும் இலங்கையின் இந்தத் தேவைக்கு சர்வதேச கடன் வழங்குபவர்கள் எந்தளவிற்கு நெகிழ்வாக இருப்பார்கள் என்பது கவலைக்குரியதாகவே உள்ளது.

மறுபுறம், இலங்கை மக்கள் தற்போது அனுபவித்து வரும் சமூக மற்றும் மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொள்ளும் சவாலையும் திஸாநாயக்க முகங்கொடுக்கின்றார். அவரது பிரச்சாரத்தின் போது, திசாநாயக்க IMF உடன் தொடர்ந்து பணியாற்றுவதாக உறுதியளித்தார், ஆனால் சிக்கன நடவடிக்கைகளால் எழும் பொருளாதார சுமையை இலகுபடுத்த IMF உடன்படிக்கை தொடர்பில் மீண்டும் பேச்சுவார்த்தை நடாத்துவதாகக் கூறினார்.

IMF இந்த அழைப்பை எந்தளவு தூரம் கருத்திலெடுக்கும் என்பது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட விடயமாகும். கடுமையான IMF சிக்கன நடவடிக்கைகள் மக்களுக்கு உடனடி பொருளாதார நிவாரணம் வழங்குவதற்கும், பொருளாதாரத்தின் உற்பத்தித் துறையை வலுப்படுத்தும் நோக்கில் நாட்டின் பொருளாதாரத்தை மேலும் வளர்ச்சி பாதையை நோக்கி செலுத்துவதற்குமான NPP இன் வாக்குறுதியுடன் மோதும் போக்கில் செல்ல வாய்ப்புள்ளது.

உள்நாட்டில், வலதுசாரி எதிர்ப்பை மறுசீரமைப்பதில் இருந்து வரும் சவால்களைத் தவிர, செப்ரெம்பர் தேர்தலில் அவருக்கு வாக்களிக்காத தொகுதிகளில் NPP வெற்றிபெற வேண்டும். சிங்கள பெரும்பான்மை பிரதேசங்களில் அவர் சிறப்பாக செயற்பட்டு முஸ்லிம் வாக்காளர்கள் மத்தியில் தனது வாக்குத்தளத்தை மேம்படுத்திக்கொண்ட போதிலும் வடக்கில் தமிழ் பெரும்பான்மை பிரதேசங்களில் கணிசமான வாக்குகளை திஸாநாயக்கவால் பெற முடியவில்லை.

இந்த குறைவான செயற்திறனுக்கு போர்க்குணமிக்க சிங்கள தேசியவாதத்துடனான ஜே.வி.பி.யின் கடந்தகால தொடர்பு, "தேசிய ஐக்கியம்" என்ற NPPயின் யோசனைக்கும் தமிழ் அரசியலின் அரசியல் அபிலாஷைகளுக்கும் இடையிலான தொடர்பைத் துண்டித்தமை மற்றும் தமிழ் அரசியல் உயரடுக்கின் ஒரு பகுதியினர் இடதுசாரிகளை விட தெற்கில் உள்ள வலதுசாரி கட்சிகளுடன் ஒத்துழைக்கும் போக்கு உட்பட பல காரணங்கள் உள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் தனது முதல் உரையை ஆற்றிய திஸாநாயக்க, தனது ஆணையின் அளவு மற்றும் "சேர்க்கை" குறித்து தான் உணர்ந்துள்ளதாகவும், செப்ரெம்பர் தேர்தலில் தனக்கு வாக்களிக்காத பிரிவினரை அணுகுவதற்கு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்றும் அறிவித்தார்.

திஸாநாயக்கவின் மறுமலர்ச்சி யுகத்தை கொண்டுவருவதாக அளித்த வாக்குறுதி உண்மையாக இருக்க வேண்டுமெனில், இலங்கையில் இன முரண்பாட்டைக் கட்டுக்குள் கொண்டுவருவது என்பது அவர் வெற்றியடைய வேண்டிய ஓர் தீவிரமான பணியாகும்.

ரமிந்து பெரேரா இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சட்டக் கற்கைகள் துறையின் விரிவுரையாளராவார். அவரை raminduezln@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.