அறியாமை, தீவிர சமய நம்பிக்கையினால் சமூகத்தில் அதிகரிக்கும் ஆபத்தான பிரசவங்கள்

அனுராதபுரம் மாவட்டத்தின் கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹா கிரிப்பே கிராமத்தினைச் சேர்ந்த 19 வயதான கலீல் சுமையா தனது கணவரின் ஆலோசனையின் பிரகாரம் அவருடைய கர்ப்ப காலத்தில் மருத்துவ பாராமரிப்பினை புறக்கணித்துள்ளார்.

இதனால் அவரும், அவருடைய கணவரான அப்துல் ரயீஸ் ரமீஸ் ஆகிய இருவரும் தற்போது குற்றவியல் சட்டத்தின் கீழ் நீதிமன்ற விசாரணைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

கடந்த ஜுலை 30ஆம் திகதி காலை 8.00 மணியளவில் சுமையா, தனது முதலாவது பிரசவத்தின் ஊடாக ஆண் குழந்தையொன்றை பிரசவித்துள்ளார். தனது ஏழு பிள்ளைகளையும் வீட்டு பிரசவத்தின் ஊடாக பெற்றெடுத்த சுமையாவின் தாயாரான ஹபீப் முஹம்மது உம்மு ஹபீபா மற்றும் சுமையாவின் கணவர் ரமீஸ் ஆகியோரினால் அவர்களின் வீட்டிலேயே இந்த பிரசவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது பாதுகாபற்ற முறையில் சாதாரண சவர அலகினால் (பிளேட்) தொப்புள் கொடி வெட்டப்பட்டுள்ளது. றமீஸ் முஹம்மத் என பெயர் சூட்டப்பட்ட குறித்த குழந்தை மூச்சின்றி இறந்த நிலையிலேயே பிறந்துள்ளது.

இந்த இறப்பு தொடர்பில் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் யாருக்கும் அறிவிக்கப்படமால் நான்கு மணித்தியாலங்களுக்குள் குழந்தையின் சடலம் பிரதேச முஸ்லிம் மையவாடில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

சுமையாவின் கணவரான றமீஸ் புனித அல் - குர்ஆனை மனனம் செய்த ஒரு ஹாபிஸாவார். கணவன் தவிர்ந்த வேறோரு ஆணுக்கு பெண்ணொருவர் தனது உடலை காண்பிப்பதை இஸ்லாம் தடை செய்துள்ளது என ஹாபீஸ் றமீஸ் தனது மனைவிக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்த வாதம் - இஸ்லாமிய போதகர்களினாலும், முஸ்லிம் சமூகத்தினாலும் இன்றைய கால கட்டத்தில்  நிராகரிக்கப்பட்டுள்ள போதிலும் மிகச் சிறு தொகையானோர் இதனை பின்பற்றுகின்றமையே இவ்வாறான உயிரிழப்புகளுக்கு காரணமாக அமைந்துள்ளது.

தான் கார்ப்பமாகியுள்ள விடயத்தினை கடந்த 2018ஆம் ஆண்டு ஓக்டோபர் 10ஆம் திகதி அறிந்துகொண்ட சுமையா, கணவனின் ஆலோசனையின் பிரகாரம் பிரசவ காலத்தில் மருத்துவ பரிசோதனைகளுக்காக தனியார் வைத்தியசாலை உள்ளிட்ட எந்தவொரு வைத்தியசாலைக்கும் செல்லவில்லை.

2019ஆம் ஆண்டு ஜுலை 22ஆம் திகதி பிரசவம்  நிகழ் எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெளிவாக அறிவுறுத்தப்பட்ட நிலையில் கடந்த ஜுலை 29ஆம் திகதி இரவு அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

எனினும் வீட்டிலேயே இந்த பிரசவம் மேற்கொள்ளப்பட வேண்டும் என குடும்பத்தினர் ஏற்கனவே தீர்மானித்தமையினால் சுமையாவின் கணவர் அவரை அருகிலுள்ள வைத்தியசாலைக்கு கூட அழைத்துச் செல்லவில்லை.

இந்த நிலையில் ஜுலை 29ஆம் திகதி காலை 8.00 மணியளவில் இறந்த நிலையில் கிடைக்கப் பெற்ற குழந்தை நண்பகல் 12.00 மணியவளில் நல்லடக்கம் செய்யப்பட்டதாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் குறித்த கிராமத்திற்கு பொறுப்பான கிராம சேவகர் ரண் பண்டாகே ரசிகா பிரியதர்ஷினி என்பவரினால் கடந்த ஓகஸ்ட் 6ஆம் திகதி கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து 10 நாட்களே நல்லடக்கம் செய்யப்பட்ட 38 சென்றிமீற்றர் நீளமான குறித்த குழந்தையின் சடலம் 200 பிரதேசவாசிகளின் முன்னிலையில் அனுராதபுர நீதவான் கே.எம்.ஜே.ஜீ சமரசிங்கவின் உத்தரவின் பிரகாரம் தோண்டி எடுக்கப்பட்டு அனுராதபுர போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் எஸ்.எம்.எச்.எம்.கே. சேனாநாயக்கவினால் பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

"இந்த சடலம் அழுகிய நிலையில் காணப்பட்டமையினால் மரணத்திற்கான காரணத்தினை உறுதிப்படுத்த முடியவில்லை. பெரும்பாலும் குழந்தை பிரசவத்திற்கு முன்னரே உயிரிழந்துள்ளது" என பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"வயிற்றுக்குள் 10 மாதம் முதிர்ச்சியடைந்த இந்த குழந்தை வன்முறைக்குட்படுத்தி கொல்லப்படவில்லை" எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ரமீஸ் மற்றும் சுமையா ஆகியோர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். இந்த மனு தொடர்பான அடுத்த விசாரணை எதிர்வரும் 23ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

"வைத்திய ஆலோசனைகள் எதுவுமின்றி நாங்கள் வீட்டில் பிரசவம் மேற்கொண்டமை பாரிய தவறாகும்' என குறித்த பெண்ணின் தந்தையான எம்.கலீல் தெரிவித்தார்.

"எனது மனைவிக்கு வீட்டில் பிரசவம் மேற்கொண்டு ஏழு குழந்தைகளை பெற்றது போன்று மகளுக்கும் வீட்டில் பிரசவம் மேற்கொள்ள முயற்சித்தோம்" என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் கலீலை நாம் தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டு வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தவறான நம்பிக்கை, அறியாமை

கடுமையான மத நம்பிக்கைகள் மற்றும் அறியாமை காரணமாக  வைத்தியசாலையில் பிரசவம் மேற்கொள்ளும் நடவடிக்கை தவிர்க்கப்படுவதனால் அதிக சிசு மரணங்கள் ஏற்பட வாய்ப்புள்ளன. இலங்கையைப் பொறுத்தவரை வைத்தியசாலையைத் தவிர்த்து நடக்கும் இந்த போக்கு முஸ்லிம்கள் மத்தியிலேயே அதிகமாக உள்ளது.

வீட்டு பிரசவம் தொடர்பாக பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும் இவ்வாறான விடயங்களை காணுமிடத்து அது தொடர்பில் அறிவிக்குமாறு கடந்த 2018ஆம் ஆண்டு ஜுலை 13ஆம் திகதி குடும்ப சுகாதார பணியகத்தினால் பகிரங்க வேண்டுகோள் விடுக்கப்பட்டமை இங்கு கவனிக்கத்தக்கதாகும்.

பேருவளை பிரதேசத்தில் கடந்த இரண்டு வருடங்களிற்கு முன்னர் வீட்டில் பிரசவம்  மேற்கொள்ள முயற்சித்த போது குழந்தையொன்று இறந்த சம்பவம் பதிவாகியுள்ளது. இந்த இறப்பு தொடர்பில் குறித்த குழந்தையின் தந்தையான இஸ்லாமிய போதகரை தொடர்புகொண்டு விசாரித்த போது  அவர் இது தொடர்பில் கருத்துக் கூற மறுத்ததுடன் "இறைவனின் நாட்டப்படி குழந்தை பிறக்கும் போதே இறந்துவிட்டது" என்றார்.

இது போன்ற பல சம்பவங்கள் நாட்டின் பல பிரதேசங்களில் இடம்பெற்றுள்ள போதும் அவை ஆவணங்களில் பதிவாகவில்லை. இதேவேளை, "வைத்தியசாலைகளில் பிரசவம் மேற்கொள்வதே பாதுகாப்பான முறையாகும்" என சிரேஷட் இஸ்லாமிய அறிஞரும், தேசிய சூரா சபையின் பிரதி தலைவர்களில் ஒருவருமான அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பழீல் தெரிவித்தார்.

"தாய் மற்றும் குழந்தை ஆகியோரின் பாதுகாப்பு கருதி வீடுகளில் பிரசவம் மேற்கொள்வதை தவிர்ப்பது சிறந்தது" என அவர் குறிப்பிட்டார்.

"அத்துடன் உயிரை கொள்ளும் அளவிற்கு கண்மூடித்தனமாக எதனையும் பின்பற்றுமாறு இஸ்லாம் ஒருபோதும் பிரசாரம் செய்யவில்லை" எனவும் அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பழீல் மேலும் கூறினார்.

ஆனால் துரதிஷ்டவசமாக சில முஸ்லிம்கள் வீடுகளில் பிரசவம் மேற்கொண்டு சிக்கல் ஏற்படுகின்ற நிலையிலேயே வைத்திய உதவியினை நாடுவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

இதேவேளை, வீட்டு பிரசவம் அதிகமாக முஸ்லிம் சமூகத்திலேயே மேற்கொள்ளப்படுகின்றது என சுகாதார அமைச்சின் கீழுள்ள குடும்ப நல  சுகாதார பணியகம் தெரிவித்தது.

குறிப்பாக பாணந்துறை மற்றும் நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களில் இந்த வீட்டுப் பிரசவம் அதிகமாக மேற்கொள்ளப்படுவதாக பணியகம் குறிப்பிட்டது.

"வைத்தியசாலைகளிலேயே பிரசவம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது அரச கொள்கையாகும்" என குடும்ப சுகாதார பணியகத்தின் வைத்திய நிபுணரான கலாநிதி ஈரோஷா நிலவீர, எமக்கு தெரிவித்தார்.

"வீட்டு பிரசவத்தின் போது குழந்தையும், தாயும் பல்வேறு வகையான சுகாதார பிரச்சினைகளை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. இதனால் வீட்டு பிரசவம் ஒரு தண்டனைக்குரிய குற்றமாகும். எனினும் இதற்கு எதிராக நாட்டில் எந்தவித சட்டமும் இதுவரை அமுல்படுத்தப்படவில்லை"  என அவர் குறிப்பிட்டார்.

"சில நாடுகளில் வீட்டில் பிரசவம் மேற்கொள்ளப்படுகின்றது. அந்த நாடுகளில் வீட்டு பிரசவத்தின் போது எதிர்பாராவிதமாக ஏற்படும் மருத்துவ ரீதியான ஆபத்துக்களை  எதிர்க்கொள்ளகூடிய வகையிலான மருத்து வசதிகள் உள்ளதாக" வைத்திய நிபுணரான ஈரோஷா நிலவீர மேலும் தெரிவித்தார்.

வைத்தியசாலை பிரசவங்களை எதிர்ப்போரின் கருத்து

இஸ்லாமிய போதகர்கள் என தம்மை தாமே அறிமுகப்படுத்திக் கொள்ளும் சிலரே வைத்தியசாலைகளில் பிரசவம் மேற்கொள்வதற்கு எதிராக பாரிய பிரசாத்தினை நாடளாவிய ரீதியில் முன்னெடுத்துள்ளதாக அவதானிகள்
தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, இஸ்லாமிய போதகரான நுஸ்ரான் பின்னூரியினால் வீட்டு பிரசவத்தினை சமூக ஊடகங்கள் மற்றும் தனிநபர்களின் ஊடாக பாரியளவில் பிரசாரப்படுத்தி வருகின்றமை தெரியவந்துள்ளது.

அதேபோன்று தடுப்பூசி ஏற்றலுக்கு எதிராகவும் பிரசாரம் மேற்கொள்ளும் இவரிடம் மருத்துவம் தொடர்பில் எந்தவித கல்வித் தகைமையும் கிடையாது. இந்தியாவின் கேரளா பிரதேசத்தில் சிறுநீர நோய்க்கு சிகிச்சை பெறச் சென்ற போதே நுஸ்ரான் பின்னூரிக்கு மருத்துவத் துறையில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து Raha Natural Herb Pvt Ltd எனும் பெயரில் கொழும்பு – 14, கிரேன்ட்பாஸ் பகுதியில் குப்த அல்லது குர்ஆன் வசனங்களின் மூலம் சிகிச்சை அளிக்கும் மருத்துவ நிலையமொன்றை அவர் இன்று வரை நடத்தி வருகின்றார்.

அது மாத்திரமல்லாமல் வீட்டுக்கு ஒரு மருத்துவர் எனும் செயற்திட்டத்தின் கீழ் 'மருத்துவம் ஓர் அறிமுகம்' எனும் தலைப்பில் ஆறு நாள் இஸ்லாமிய மருத்துவ கற்கை நெறியொன்று இவரின் தலைமையின் கீழ் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நுஸ்ரான் பின்னூரியின் மருத்துவ நிலையத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்ட முறைப்பாடொன்றினை தொடர்ந்து கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் திகதி குறித்த மருத்துவ நிலையம் அதிகாரிகளினால் முற்றுகையிடப்பட்டு சில நாட்கள் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

"மேற்கத்தைய மருத்துவத்தினை கண்மூடித்தனமாக பின்பற்றல்"

வீட்டுப் பிரசவம் தொடர்பில் நுஸ்ரான் பின்னூரியினை நாம் தொடர்புகொண்டு வினவிய போது, "மேற்கத்தைய மருத்துவத்தினை மக்கள் இன்று கண்மூடித்தனமாக பின்பற்றுகின்றார்கள்" என்றார்.

"வைத்தியசாலைகளில் பிரசவம் மேற்கொள்ளப்படும் போது பெண்கள் கடுமையாக அவதூறுக்குட்படுத்தப்படுகின்றனர்" என அவர் மேலும் குறிப்பிட்டார்.

"அரசாங்கம் அனுமதி வழங்கினால் சாதாரன முறையில் 100 வீட்டு பிரசவத்தினை என்னால் மேற்கொள்ள முடியும். இதன்போது வைத்தியசாலையில் இடம்பெறும் மரணத்தினை விட குறைந்த மரணங்களே இங்கு இடம்பெறும்" என அவர் சவால் விட்டார்.

-றிப்தி அலி-