160 கோடி ரூபாவை ஏப்பம் விட்ட பிரிவேல்த் குளோபலின் பணிப்பாளர்கள் கைது
பாதிக்கப்பட்ட வைப்பாளர்களுக்கு நியாயம் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்
றிப்தி அலி
இஸ்லாமிய அடிப்படையில் செயற்படுவதாகக் கூறி நாட்டின் பல பிரதேசங்களில் இயங்கி 160 கோடி ரூபாவை ஏப்பம் விட்ட பிரிவேல்த் குளோபல் நிறுவனத்தின் பணிப்பாளர் சிஹாப் ஷெரீம் மற்றும் அவரது மனைவி பாத்திமா பர்சானா மார்கார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் திருச்சியிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட இவர்களை கடந்த வியாழக்கிழமை (26) இரவு விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
நாட்டில் பல நீதிமன்றங்களில் இவர்களுக்கு எதிராக பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் கைது செய்யப்பட்டுள்ள இவர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்ட பின்னர் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ள நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த 2014ஆம் ஆண்டு பெப்ரவரி 5ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்ட இந்த கம்பனியின் வியாபார நடவடிக்கைகள், 2016ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் திகதி கிழக்கு மாகாணத்திற்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளன. சுமார் 15 மாத காலப் பகுதிக்குள் இதன் ஐந்து கிளைகள் சம்மாந்துறை, கல்முனை, பொத்துவில், ஏறாவூர் மற்றும் மருதமுனை ஆகிய நகரங்களில் திறக்கப்பட்டுள்ளன.
இந்த நிறுவனத்தினால் வைப்பாளர்களுடன் 1,400 ஒப்பந்தங்களை மேற்கொண்டு சுமார் 160 கோடி ரூபா பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதற்கான இலாபம் கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வைப்பாளர்களுக்கு வழங்கப்படவில்லை.
அதேவேளை, ஒப்பந்தம் நிறைவடைந்த நிலையிலுள்ள வைப்பாளர்களிடம் வசூலிக்கப்பட்ட பணம் திரும்ப வழங்கப்படவுமில்லை. இதனால் ஆத்திரமடைந்த வைப்பாளர்கள் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளை பதிவுசெய்ததுடன் நீதிமன்றங்களில் வழக்குகளையும் தாக்கல் செய்தனர்.
இதனால், நீதிமன்றங்களில் ஆஜராகுமாறு இந்த நிறுவனத்தின் பணிப்பாளர் சிஹாப் ஷெரீம் மற்றும் அவருடைய மனைவி ஆகியோருக்கு அழைப்பாணைகள் பிறப்பிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து சிஹாப் ஷெரீம், அவருடைய மனைவி மற்றும் பிள்ளைகளுடன் இந்தியாவிற்கு படகு மூலம் கடந்த 2020.11.06ஆம் சட்டவிரோதமாக தப்பியோடினார். இதன்போது, நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் வைத்து இந்திய கடலோர பாதுகாப்புப் படையினரால் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் புழல் சிறையில் தம்பதியினர் அடைக்கப்பட்ட நிலையில், இவர்களின் பத்து வயது மகன் நாகையில் உள்ள அரசு காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் இரண்டு மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவித்த சிஹாப் மற்றும் அவரது மனைவி, திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தனித்தனியாக அடைக்கப்பட்டனர்.
நாட்டிலிருந்து சட்டவிரோதமாக தப்பியோடி இந்தியாவில் வாழும் இந்த தம்பதிக்கு எதிராக நிதி மோசடி புகார் இருப்பதால், அவர்களை அங்கிருந்து நாட்டுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இதனை அறிந்த சிஹாப், தமிழக அரசின் தனிப்பிரிவுக்கு முகாமில் இருந்து மனு ஒன்றை அனுப்பியுள்ளார். தங்களால் இலங்கைக்கு மீண்டும் செல்ல முடியாத காரணங்களை அந்த மனுவில் அவர் பட்டியலிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், அவரின் மனு நிராகரிக்கப்பட்டு கடந்த டிசம்பர் 26ஆம் திகதி இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளார். இவர்களை அனுப்புமாறு கோரி கடவுச்சீட்டு மற்றும் விமானப் பயணச்சீட்டு என்பவற்றை இலங்கை தூதரகம் அனுப்பியதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, இந்தியாவின் வெளிவிவகார அமைச்சு மற்றும் தமிழ்நாடு அரசு ஆகியவற்றின உத்தரவுடன் உரிய நடைமுறைகளைப் பின்பற்றி இவர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதாக தமிழ் நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
எப்படியோ, நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள இவர்களிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வைப்பாளர்களின் பணத்திற்கு என்ன நடந்தது என்ற விடயம் வெளிக்கொணரப்பட வேண்டும். அதேவேளை, பாதிக்கப்பட்ட வைப்பாளர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.
Comments (0)
Facebook Comments (0)