மாளிகாவத்தையில் செருப்புகள் சொன்ன செய்தி
றிப்தி அலி
இலங்கையின் சனத்தொகையில் 4.1 சதவீதத்திற்கு குறைவான மக்கள் வறுமையின் கீழ் வாழ்வதாக குடிசன மதிப்பீடு திணைக்களம் தெரிவிக்கின்றது. வறுமையான முதல் நான்கு மாவட்டங்களாக முறையே கிளிநொச்சி, முல்லைதீவு, மட்டக்களப்பு மற்றும் திருகோணமாலை ஆகியன காணப்படுகின்றன.
இந்த நான்கு மாவட்டங்களும் யுத்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவடங்களாகும். எனினும் வறுமையின் காராணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட மக்கள் நாடளாவிய ரீதியில் செறிந்து வாழ்கின்றனர்.
இவர்களுக்கான உதவிகள் அரசாங்கம், தனிப்பட்ட நிறுவனங்கள், உலக நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் என பல்வேறு தரப்பினரால் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றன.
எனினும், இந்த உதவிகள் எந்தளவு தூரம் வறுமையினை போக்குவதில் வெற்றியளித்துள்ளது என்பதும் இன்று வரை பாரிய கேள்வியாகும். இவ்வாறான நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு சட்டம் தொடர்ச்சியாக இரண்டு மாதங்களுக்கு நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்தது.
இதனால் நாட்டின் பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த நிலைமையின் காரணமாக பாரிய தொழிலதிபர் முதல் சாதாரன கூலித் தொழிலாளி வரை அனைத்து மக்களுக்கும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசாங்கம், தனி நபர்கள் மற்றும் அமைப்புக்கள் என பல்வேறு தரப்பினர் பல்வேறு வகையான உதவிகளினை இந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று வரை தொடர்ச்சியாக வழங்கி வருகின்றனர்.
எனினும், இந்த உதவிகள் தேவையான மக்களை சென்றடைகின்றதா என்ற கேள்வியொன்று உள்ளது. அதேவேளை, நகர்ப் புறங்களிலும் வறிய மக்கள் வாழ்கின்றனர் என்பதனை அனைத்து தரப்பினரும் மறந்துவிட்டமை கவலை அளிக்கும் விடயமாகும்.
கொழும்பு மாநகரத்தின் மாளிகாவத்தை மற்றும் மட்டக்குளி ஆகிய பிரதேசங்களிலேயே அதிகமான வறிய மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் தினசரி கூலித் தொழிலினையே மேற்கொள்கின்றனர்.
இந்த நிலையில் தொடர்ச்சியான ஊரடங்கு சட்ட அமுல் காரணமாக இவர்கள் பல சொல்லொண்ணத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில் மாளிகாவத்தை பிரதேசத்தில் வாழும் ஏழை, எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் கடந்த வாரம் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையொன்று பாரிய அனர்த்தமாக மாறிய சம்பவம் அனைத்து மக்கள் மத்தியிலும் கலையினை தோற்றுவித்துள்ளது.
வாகன உதிரிப் பாகங்களை விற்பனை செய்யும் தெஹிவளை பிரதேசத்தினைச் சேர்ந்த முஹம்மத் சரூக் என்பவர், ஒவ்வொரு வருடமும் புனித ரமழான் மாதத்தின் 27ஆம் தினத்தன்று மாளிகாவத்தை பிரதேசத்தில் வாழும் ஏழை மக்களுக்கு பண உதவி வழங்குவது வழமையாகும்.
இந்த உதவித் திட்டம் கடந்த 40 வருடங்களாக குறித்த நபரின் குடும்பத்தினாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதாவது இந்த வர்த்தகரின் தந்தையாரினால் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையினை அவரது மக்கள் இன்று வரை முன்னெடுத்து வருகின்றனர்.
இதற்கமைய கடந்த மே 21ஆம் திகதி வியாழக்கிழமை (புனித நோன்பு 27ஆம் தினம்) மாளிகாவத்தை பிரதேச மக்களுக்கு குறித்த வர்த்தகருக்கு பண உதவி வழங்குவதாக அப்பிரதேசத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனை அறிந்து, வறுமையின் காரணமாக கடுமையாக வாழும் சுமார் 300 முதல் 400 பேர் வரையான அப்பிரதேச மக்கள் அங்கு ஒன்று திரண்டிருந்தனர். எனினும் குறித்த தினம் கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே - மாளிகாவத்தை, ஜும்ஆ மஸ்ஜித் வீதியிலுள்ள தாருஸ் ஸலாம் பாடசாலைக்கு எதிர்த் திசையில் அமைந்துள்ள முற்றிலும் மதில்களால் மூடப்பட்டு கறுப்பு நிற வாயில் போடப்பட்டுள்ள குறித்த வர்த்தகருக்கு சொந்தமான மோட்டார் வாகன உதிரிப்பாக களஞ்சிய வளாகத்தில் வியாழக்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் குறித்த நிதியுதவி வழங்கப்பட்டது.
இதன்போது ஒருவருக்கு 1,500 ரூபா வீதம் பணம் வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் பலருக்கு பண உதவி வழங்கப்பட்டுள்ள நிலையில், அதனை பெற்றவர்கள் வெளியே செல்லாமல், அறிவித்தல் ஒன்றுக்கு அமைவாக மீளவும் இரண்டாவது தடவையாகவும் பணம் பெறும் நோக்கில் அந்த வளாகத்துக்குள்ளேயே இருந்துள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்திலேயே அங்கு பாரிய சன நெரிசல் ஏற்பட்டு நிலைமை பாரதூரமாக மாறியுள்ளது எனும் தகவல் ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சன நெரிசலை கட்டுப்படுத்த ஏற்பட்டாளர்கள் முயற்சித்த போதும் அது முடியாமல் போன நிலையில் மூன்று பெண்கள் உயிரிழந்ததுடன் ஒன்பது பேர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவ்வாறு காயமடைந்த ஒன்பது பேரில் ஏழு பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாளிகாவத்தை லக்சித்த உயன தொடர்மாடி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய உமா அகிலா, ஜும்மா மஸ்ஜித் வீதியைச் சேர்ந்த 59 வயதுடைய பௌசியா நிஸா, லக்சித்த செவன தொடர்மாடி குடியிருப்பை சேர்ந்த 68 வயதுடைய பரீனா முஸம்மில் ஆகிய மூவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு கொழும்பு மேலதிக நீதிவான் காஞ்சனா நெரஞ்சலா டி சில்வா நேரில் விஜயம் செய்து நீதிவான் நீதிமன்ற விசாரணைகளை நடாத்தினார்.
பிரதேத பரிசோதனைகளை தொடர்ந்து உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட ஜனாஸாக்கள் கடந்த வெள்ளிக்கிழமை மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதேவேளை, குறித்த பண உதவி வழங்க ஏற்பாடு செய்த மோட்டார் வாகன உதிரிப்பாக வர்த்தகர் மற்றும் அவரது மகன் உள்ளிட்ட ஏழு பேரை மாளிகாவத்தை பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்தனர்.
மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் அறிக்கை
"எவ்வித கவனமும் இன்றி மிக ஆபத்தான முறையில் நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்தமை, ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் அதனை மீறி மக்களை ஒன்று திரட்டியமை, கொவிட் 19 தொற்று பரவல் தொடர்பில் தனிமைப்படுத்தல் சட்ட ஒழுங்குகளுக்கு அமைய சமூக இடைவெளியை பேணாமல் நடந்துகொண்டமை ஆகியவற்றின் ஊடாக மூன்று பேரின் மரணத்துக்கு காரணமாக இருந்தமை தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக" மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.
"நாட்டில் தற்போது பரவிவரும் கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் எந்த சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளையும் அவர்கள் கையாண்டிருக்கவில்லை எனவும், சமூக இடைவெளி இல்லாமல் அவர்கள் அனைவரும் அந்த களஞ்சிய வளாகத்தில் ஒன்று கூடியுள்ளதாகவும்" அவர் சுட்டிக்காட்டினார்.
"குறித்த வர்த்தகர் தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் தனது வர்த்தக நிலையத்துக்கு செல்வதாக கூறி ஊரடங்கு அனுமதி பத்திரம் பெற்றுள்ளார். எனினும் மக்களை ஒன்று திரட்டி இவ்வாறு உதவித் தொகை வழங்குவது குறித்து பொலிஸாருக்கோ அல்லது பிரதேசத்தின் பொது சுகாதார பரிசோதகருக்கோ அறிவிக்கவில்லை" எனவும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கூறினார்.
"இதனை அவர் பாதையில் வைத்து செய்திருந்தால் பொலிஸாரின் கண்களிலாவது சிக்கியிருக்கும். எனினும் சுமார் 300 இற்கும் அதிகமானோரை மதில்களால் மூடப்பட்ட தனது வர்த்தக களஞ்சிய வளாகத்தில் வர்த்தகர் ஒன்று சேர்த்திருக்கின்ன்றார். தற்போதைய சூழ்நிலையில் இது எவ்வளவு ஆபத்தான விடயம். சமூக இடைவெளி, கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் எவையும் பின்பற்றப்படவில்லை" என சம்பவம் குறித்து அவர் மேலும் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, அனைவரையும் ஜுன் 4ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் பிரதமரின் அறிக்கை:
இதேவேளை, இந்த சம்பவம் நாட்டு மக்களின் அவல நிலையை எடுத்து காட்டுகின்றது என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இந்நிலையில், நாட்டின் பொருளாதார நிலை குறித்த உண்மை தன்மையினை பொது மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
"இன்று மக்கள் வாழ்வது கடினமாகியுள்ளது. பணம் இல்லை, வேலைகள் இல்லை, வருமானம் இல்லை. நாளுக்கு நாள், விலைகள் உயர்கின்றன. தற்போதைய அரசாங்கம் நிதிநெருக்கடியை சந்தித்து வருகிறது. ஆனால் அந்த பிரச்சினைகளை முகாமைசெய்ய இன்னும் சிறந்த பொருளாதாரத் திட்டத்தை வகுக்கவில்லை" என முன்னாள் பிரதமர் குறிப்பிட்டார்.
ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டனம்
இந்த நிதி உதவி வழங்கியபோது இடம்பெற்ற அசம்பாவிதத்தை வன்மையாகக் கண்டிப்பதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்தது.
இது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
"கொரோனா வைரஸில் இருந்து அனைவரையும் பாதுகாப்பதற்கு பல்வேறுபட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற நிலையில், நாட்டின் சுகாதாரத் துறையினர், பாதுகாப்பு தரப்பினரால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்களை பின்பற்றாமல் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற அசம்பாவிதத்தைக் கண்டிகின்றோம்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு சுவனம் கிடைக்க வேண்டும் எனவும் காயமடைந்தவர்கள் அவசரமாக குணமடைய வேண்டும் என பிரார்த்திப்பதாகின்றோம்.
நிவாரண உதவிகளை முறையாக உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி உரிய சட்டங்களை பேணி முன்னெடுக்குமாறு ஜம்இய்யத்துல் உலமா வழிகாட்டியுள்ள நிலையில், இவ்வாறான அசம்பாவிதங்கள் மன வேதனையைத் தருகின்றது.
நெருக்கடியின் போது ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது, எனினும் உதவிகளை வழங்கும்போது நாட்டின் சட்டம் மற்றும் சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களை கண்டிப்பாக பின்பற்றி நடக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொலிஸாரின் அசட்டை
இந்த சம்பவம் தொடர்பில் பிரதேச பொலிஸார் அசட்டையாக செயற்பட்டாhகளா என்பது தொடர்பிலான விசாரணைளை பொலிஸ் தலைமையகம் முன்னெடுத்துள்ளது.
இதுவரை சம்பவ இடத்திலிருந்த 23 பொலிசார் தமது வாக்குமூலத்தை வழங்கியுள்ளனர்.
மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் உத்தரவில் இந்த விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
குறித்த பகுதிக்கு சென்ற புலனாய்வு அதிகாரி ஒருவர், கமராவை திருப்பி வைத்ததாகவும், பணம் விநியோகிக்கப்படவுள்ளதை அவர் முன்னமே அறிந்திருந்தும் உயர் பொறுப்பதிகாரிக்கு அதனை தெரியப்படுத்தவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஒருவருக்கு 1,500 ரூபா வீதம் வழங்கப்பட்ட பணத்தினை பெறுவதற்காக முண்டியடித்த போதே இந்த சம்பவம் இடம்பெற்ற தெளிவாக விளங்குகின்றது.
செருப்புகள் சொன்ன செய்தி
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் மற்று; உயிர் தப்பியவர்கள் என பலரதும் செருப்புகள் அந்த களஞ்சியசாலைக்கு வெளியே குவிந்து வைக்கப்பட்டிருந்தன. இந்த செருப்புகளின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டன.
அந்த செருப்புகள் தான் அவர்களது வறுமையின் குறிகாட்டிகளாக இருந்தன. பிய்ந்தும், தேய்ந்தும் போயிருந்த அந்த செருப்புச் சோடிகளே அவர்கள் 1,500 ரூபாவுக்கு முண்டியடித்ததை நியாயப்படுத்த போதுமானவை. கொரோனாவை விட பசி கொடியது என்பதை மாளிகாவத்தையில் நடந்த சம்பவம் நமக்கு உணர்த்தி நின்கிறது.
ஸகாதின் அவசியம்
இந்த வறுமையினை போக்குவதற்கு ஸகாத் மற்றும் சதகா போன்ற பல்வேறு வழிகளை இஸ்லாம் கட்டித் தந்துள்ளது. இலங்கையில் தனவந்தர்கள் ஸகாத் வழங்குகின்ற போதிலும் அது உரிய முறையில் பகிர்ந்தளிக்கப்படுகின்றனவா என்பது கேள்விக்குரியாகும்.
பெரியதொரு தொகைப் பணத்தில் சில ஆயிரம் ரூபாய்க்களாகப் பிரித்து வழங்குவதை விடவும் பெரிய தொகைகளை வழங்கிய மக்களை வறுமையிலிருந்தும், கடனிலிருந்தும் பாதுகாக்க முடியும்.
அதுபோன்று சுய தொழிலுக்கு உதவுவதன் மூலமாக இந்த வருடத்தில் ஸகாத் பெறுபவர்களை அடுத்த வருடம் ஸகாத் கொடுப்பவர்களாக மாற்ற முடியும். எனவே தான் முஸ்லிம் சமூகத்தில் வறுமையை ஒழிப்பதற்காக ஸகாத்தை முறையாக பகிர்ந்தளிப்பதற்கான வேலைத்திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
அதன் மூலமே இவ்வாறான அனர்த்தங்களுக்கும் உயிரிழப்புகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
Comments (0)
Facebook Comments (0)