இலங்கையில் ஓர் புதிய அரசியல் தலைமைத்துவம், அரசியல் கலாச்சாரத்தின் ஆரம்பம்

 இலங்கையில் ஓர் புதிய அரசியல் தலைமைத்துவம், அரசியல் கலாச்சாரத்தின் ஆரம்பம்

ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் Y. N. ஜெயரத்ன

இலங்கையில் அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல், தீவு தேசத்தில் புதிய மற்றும் இளைய அரசியல் தலைமைத்துவத்திற்கான கதவுகளைத் திறந்துள்ளது. அனுரகுமார திஸாநாயக்க (AKD) மூன்றாம் தரப்பு வேட்பாளராக இருந்து ஜனாதிபதியாக பதவியேற்றமை சௌகரியமான மற்றும் மகிழ்ச்சியான பயணமாக இருக்கவில்லை, ஏனெனில் அந்த பாதையில் அவர் இரண்டு பாரம்பரியமான குடும்பங்களால் இயக்கப்பட்ட அரசியல் சக்திகளுக்கு எதிராக போட்டியிட்டார்.

இருப்பினும், AKD பிரதிநிதித்துவப்படுத்திய அமைப்பும் சிந்தனையும் இவை அனைத்தையும் தாங்கியதுடன் இன்று அவரது கட்சி ஆட்சியில் உள்ளது. அரசியல் சீர்திருத்தங்களுக்கான ஜனாதிபதியின் உந்துதலுக்கு ஆதரவளிப்பதன் மூலம் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த அனைத்து இளைய திறனுடைய அரசியல் தலைவர்களும் இந்த புதிதாக கிடைக்கப்பெற்ற சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் செழிப்பாக்கவும் உழைக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்.
    
எனது தலைமுறை கூட எமது ஐம்பதுகளில் ஏங்கிக்கொண்டிருக்கும் மாற்றம் இதுவாகும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை! இங்குள்ள பாரம்பரிய அரசியல் கட்சிகள் எவையும் இளைய ஆற்றல் மிக்க அரசியல் தலைவர்களை உருவாக அனுமதிக்கவில்லை.

புதிதாக உருவாக்கப்பட்ட பொஹொட்டுவ (ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன), 2019 இல் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் 2020 இல் பாராளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்ற பின்னர், குடும்ப நலன்கள் மற்றும் நிகழ்ச்சி நிரல்களால் இறுக்கமாக கட்டுப்படுத்தப்பட்டதால், அதுவும் வேறுபட்டதல்ல.

ஆச்சரியமற்ற வகையில், தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளிலும் கூட இந்தப் போக்கினை காணக்கூடியதாக உள்ளதுடன், அங்கு பாரம்பரியத் தலைவர்கள் எளிதாக ஆதிக்கம் செலுத்தி, இளைய தலைமுறையின் இழப்பில் பேரம் பேசுகிறார்கள்.

சிறுபான்மை அரசியல் கட்சிகள் என்று அழைக்கப்படுபவற்றில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், அவை எப்போதும் இனவாதத்தின் மீது சாய்ந்து, பாரம்பரிய கட்சிகளுடன் பேரம் பேசும் உத்தியைப் பின்பற்றுகின்றன. அவை இத்தகைய உத்திகளில் செழித்து வளர்கின்றன.

ஆனால், எனது பார்வையில், அவை தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான காரணத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான பெரும் வாய்ப்பை இழந்துவிட்டன. எதிர்வரும் பொதுத் தேர்தலில் இந்தக் கூறுகள் - அதாவது குடும்பத்தை மையமாகக் கொண்ட அரசியல் கட்சிகள் தேசத்தின் அடுத்த கட்டத் தலைமைத்துவத்தின் இழப்பில் தங்களுக்கு நன்மை பயக்கும் அரசியல் மற்றும் வாக்களிக்கும் கலாச்சாரத்தைப் பாதுகாக்க அனைவரும் ஒன்று கூடுவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

அண்மைய தேர்தலில் ஏற்கனவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொருளாதாரத்தின் மீட்சியானது தாம் வெற்றி பெறுவதைப் பொறுத்தே அமையும் என அறிவித்திருந்ததற்கான அறிகுறிகள் ஏற்கனவே காணப்பட்டன. அதேபோல, எதிர்க்கட்சிக்குள், இளைஞர்களுக்கு இடமில்லாமல், தீர்மானமெடுக்கும் செயன்முறை எந்தளவிற்கு மையப்படுத்தப்பட்டது என்பதை அந்தக் கட்சிகளின் தலைமைத்துவத்திலிருந்து பார்க்க முடிந்தது.

வாக்காளர்கள் மத்தியில் புதிய சிந்தனை முறைகளை உள்வாங்குவதில் அப்போது பதவியில் இருந்த மற்றும் பிரதான எதிர்க்கட்சிகளின் தோல்விகள் தேர்தலில் அவர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது.

இதன் அர்த்தம் எமது கட்சிகளில் உண்மையான அரசியல் தலைவர்கள் இல்லை என்பதல்ல, அவர்கள் எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் செயற்படுவதற்கான வழிவகைகளும் பாதைகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இந்த விடயத்தில் நாமல் ராஜபக்ச தேர்தலில் படுதோல்வி பெறுவது உறுதியான போதிலும், அவர் போட்டியிடும் தீர்மானம் தைரியமானதாகவும் துணிச்சலானதாகவும் இருந்தது என நான் ஊகிக்கிறேன்.

ராஜபக்ச சகித்துக்கொண்டார், அவர் தற்போது ரணில் விக்கிரமசிங்கவுடன் இருக்கும் அவரது குடும்பத்தின் தீவிர ஆதரவாளர்களிடமிருந்து விலகி, அவரது உண்மையான அரசியல் அடித்தளத்தை இப்போது அறிந்திருக்கிறார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

அவர் பாதுகாத்த அடித்தளத்தை அவர் தொடர்ந்து கட்டியெழுப்ப வேண்டியதுடன் கடந்த காலத்திலிருந்து விலகி, ஒரு புதிய அரசியல் பாதையை செதுக்குவதற்கான தனது நோக்கம் தொடர்பில் சாத்தியமான மற்றும் உண்மையான ஆதரவாளர்களை நம்ப வைக்க வேண்டும்.

ஏனைய கட்சிகளைப் பொறுத்தமட்டில், SJBயில் ஹர்ஷ டி சில்வா மற்றும் எரான் விக்கிரமரத்ன போன்றவர்கள் தமது கட்சியின் உயர்மட்டத் தலைமைத்துவத்தால் ஓரளவு ஓரங்கட்டப்பட்டனர். ஆயினும் அவர்கள் நமது அரசியல் பரப்பில் வேறுபட்ட சிந்தனையை பிரதிபலிக்கின்றனர்.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும் இதையே கூறலாம் என நினைக்கிறேன். ஆயினும்கூட, நமது அரசியல் கலாச்சாரத்தில், தலைமைத்துவத்திலிருந்து வேறுபட்டு சிந்திக்கும் காரணத்திற்காக எல்லோரும் அவரை நிராகரிப்பதனால் அவர் ஒருபோதும் வெற்றிபெற மாட்டார் என்பது எனது யூகமாகும்.

சிறுபான்மைத் தலைவர்களுக்கும் இதே கதிதான் ஏற்பட்டுள்ளது. அருண் சித்தார்த்தன் போன்ற ஓர் இளைய, வளரும் ஆளுமைக்கு யாரும் வாய்ப்பளிக்க மாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன், ஏனெனில் பாரம்பரிய அரசியல் கட்சிகள் தமக்கு சவால் விடும் எந்தவொரு யாழ்ப்பாணத்தை தளமாக கொண்ட இளைய தலைமைத்துவத்தையும் பார்க்க விரும்பவில்லை!

கொழும்பில் கல்வி கற்று கொழும்பில் வசித்த இந்த “கொழும்பு வர்க்க” தமிழ் அரசியல்வாதிகள், தேசியத் தலைமையை இழந்தாலும் யாழ்ப்பாணத்தில் தங்களது வாக்குத் தளம் அப்படியே இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இந்த இளைஞர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும், அடிமட்டத்தில் இருந்து வரும் அடுத்த தலைமுறையை அவர்கள் நிச்சயம் வளர்க்க மாட்டார்கள்.

முஸ்லிம் சமூகத்தில் ஓர் புதிய இளைய தலைமைக்கான சாத்தியம் என்ன? இங்கே கூட, வாய்ப்புகள் மங்கலாகவே உள்ளன. இந்நிலையில் புதிய இளைய அரசியல் தலைமைகள் காலூன்றி நிற்க வேண்டும் என நான் கருதுகின்றேன். அவர்கள் சவால் விடுவதற்கும் வெற்றி பெறுவதற்கும் துணிவாக இருக்கிறார்கள்.

அரசியல் ஒரு சவாலான துறையாகும் என்பதுடன் அதனைத் தொடர விரும்பும் எவரும் மிகுந்த ஏமாற்றத்திற்கு ஆளாக நேரிடும். ஆனால் இலங்கையின் அரசியலின் மாறுபாடுகளுக்கும் புதிய அரசியல் தலைமைத்துவ வர்க்கம் எதிர்கொள்ளும் கடுமையான தடைகளுக்கும் இடையில் நாம் வரைய வேண்டிய நேர்த்தியான எல்லை எங்கே?

சிந்தனைக் குழுக்கள் மற்றும் ஊடகங்கள் மிகவும் புத்திசாலித்தனமாகவும் மிகவும் பொறுப்புடனும் விடயங்களை நிர்வகிப்பதன் மூலமாக பொதுமக்கள் இங்கு வர வேண்டும் என்று நான் உறுதியாக நினைக்கிறேன். இதில் அரச உத்தியோகத்தர்களுக்கும் வகிபங்கு உள்ளது.

அவர்கள் இராணுவ அதிகாரிகளின் பிரிவுச் செயலாளர்களாக இருக்கட்டும், அது அவர்கள் அனைவரும், நாம் அனைவரும், நமது அடுத்த அரசியல் தலைவர்களை வளர்க்க வேண்டும் என்பதே இலங்கையின் பொது நலனாகும்.
    
இதற்கு சிரேஷ்ட தலைமுறையினர் அதிகமாக செய்ய வேண்டும் என்று நான் நம்புகிறேன். துரதிர்ஷ்டவசமாக, இந்தத் தலைமுறை நம்மால் பாரியளவில் தோல்வியடைந்துள்ளது. ஒரு ஆய்வாளராக, நானும் தோல்வியுற்றேன் என்று என்னால் வெளிப்படையாகச் சொல்ல முடியும், ஏனென்றால் நான் இந்தப் பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டும்போது, எனது கரிசனங்களைப் புரிந்துகொண்டு அவற்றை நிவர்த்தி செய்ய உழைக்காமல் செய்தி வழங்குனரை கொன்றுவிடுவதற்கு எனது மேலதிகாரிகள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளனர்.

ஆயினும்கூட, அரசியல் கலாச்சாரங்கள் மாறுகின்றன என்று, நாம் சாதாரணமாக கருதுவதை விட மிக வேகமாக மாறுகின்றன என்பதை மறுக்க முடியாது. இந்த நிகழ்வு இலங்கைக்கு மட்டுமல்ல அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும்.

உதாரணமாக, 1990களில், இந்திய நாடாளுமன்றத்தில் இன்று இருப்பதை விட அதிகமான போராட்டக்காரர்கள் இருந்தனர். இப்போது, அவர்கள் அனைவரும் திறமையான, படித்த அறிவுஜீவிகளால் பிரதியிடப்பட்டுள்ளனர். ஜனாதிபதி AKDயின் பதவியேற்பு அடுத்த தலைமைத்துவத்திற்கு அதிக இடமளிக்கும் என்று நம்புவோம். அது இலங்கைக்கு அவசரமான தேவையாகும்.

ரியர் அட்மிரல் Y. N. ஜெயரத்ன (ஓய்வுநிலை) இலங்கை கடற்படையின் தலைமை அதிகாரியும் தலைமை நீரியல் படவரைஞரும் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் கூட்டுத் தலைமை நீரியல் படவரைஞருமாவார். ஓய்வுபெற்ற போது ஐக்கிய நாடுகள் சபையால் கடலுக்கடியில் உள்ள கேபிள்களுக்கான சர்வதேச ஆலோசகராகப் நியமிக்கப்பட்டதன் மூலமாக அவரது சேவைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. அவரை ynjayarathna@hotmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.