'ஒரே நாடு - ஒரே சட்டம்' செயலணி - வக்பு சபை கலந்துரையாடல்
பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான 'ஒரே நாடு - ஒரே சட்டம்' செயலணிக்கும் வக்பு சபைக்கும் இடையிலான முக்கிய கலந்துரையாடலொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.
நீதி அமைச்சர் அலி சப்ரியின் அழைப்பின் பேரில் நீதி அமைச்சில் நடைபெற்ற இந்த சந்திப்பில் வக்பு சபையின் தலைவர் சப்ரி ஹலீம்தீன் கலந்துகொண்டார்.
வக்பு சபை தொடர்பில் பொதுமக்களால் செயலணியிடம் முன்வைக்கப்பட்ட சிக்கல்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டடுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, “ஒரே நாடு – ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதிச் செயலணியினர், நீதி அமைச்சர் அலி சப்ரி, வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர ஆகியோரை கடந்த சில தினங்களில் சந்தித்து, செயலணியின் கடந்தகால மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.
இனம் அல்லது மதம் சார்ந்த குழுக்களாக இணைந்து, பிரிதோர் இனத்தைச் சார்ந்தவர்களை வித்தியாசமாக நடத்தக் கூடாதென்று தெரிவித்த ஜனாதிபதிச் செயலணியினர், ஜனாதிபதியின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள “ஒரே நாடு – ஒரே சட்டம்” எண்ணக்கருவைச் செயற்படுத்துவதன் முக்கியத்துவம் பற்றி இதன்போது விவரித்தனர்.
இதுவரையில் நாடு முழுவதிலும் மேற்கொள்ளப்பட்ட கருத்தறிதல் மற்றும் கொழும்பு பண்டாநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற சாட்சியப் பதிவுகள் தொடர்பிலும், அமைச்சர்கள் மூவருக்கு இதன்போது தெளிவுபடுத்தப்பட்டது.
நீதித் துறையில் நீதி நிர்வாகத்தை விரைவுபடுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள டிஜிட்டல்மயமாக்கல் வேலைத்திட்டம், புதிய நீதிக் கட்டமைப்பு, நீதி அமைச்சினால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய சட்டமூலங்கள் தொடர்பான தகவல்களை, நீதி அமைச்சர் அலி சப்ரி, குறித்த செயலணியிடம் கையளித்தார்.
Comments (0)
Facebook Comments (0)