கேள்விக்குரியாகியுள்ள ரோஹிங்கிய அகதிகளின் எதிர்காலம்!
றிப்தி அலி
புகலிடம் கோரி மிகவும் ஆபத்தான கடற் பயணம் ஊடாக இலங்கைக்கு வந்துள்ள 103 ரோஹிங்கிய அகதிகளின் எதிர்காலம் கேள்விக்குரியாகவே உள்ளது. மியன்மாரின் ரோஹிங்கிய பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக அந்நாட்டு அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக நெருக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதனால் பல இலட்சக்கணக்கான மக்கள் அந்நாட்டிலிருந்து இடம்பெயர்ந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலனோர் பங்களாதேஷில் தஞ்சமடைந்துள்ளனர். இன்னுமொரு தொகுதியினர் மியன்மாரிலுள்ள புனர்வாழ்வு முகாம்களில் வசித்து வருகின்றனர்.
இவர்களை கடந்த 12 வருட காலமாக ஐக்கிய நாடுகளுக்கான அகதிகள் பேரவை பராமரித்து வந்தது. எனினும், கடந்த 18 மாதங்களுக்கு முன்னர் குறித்த பேரவை மியன்மாரை விட்டு வெளியேறியுள்ளது. இதனால் புனர்வாழ்வு நிலையங்களில் வாழ்ந்த ரோஹிங்கிய மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
தற்போது அவர்களுக்கு சொந்த நாடான மியன்மாரில் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் 108 ரோஹிங்கியர்கள் இலங்கைக்கு படகில் செல்ல முடிவெடுத்துள்ளனர்.
இதற்காக அவர்கள் சொத்துக்களை விற்று மியன்மார் நாணயப் பெறுமதியில் எட்டு இலட்சம் ரூபாவினை வழங்கி படகுகளை கொள்வனவு செய்துள்ளனர்.
மூன்று படகுகளில் 108 ரோஹிங்கியர்கள் கடந்த டிசம்பர் மாதம் 4ஆம் திகதி இலங்கைக்கான பயணத்தினை ஆரம்பித்துள்ளர். இந்த படகின் ஊழியர்களாக 12 பேர் பணியாற்றியுள்ளனர்.
இவர்களின் பயணித்தின் இடையே இரண்டு படகுகள் பழுதடைந்துள்ளன. இதனையடுத்து 108 புகலிட கோரிக்கையாளர்களும் 12 படகு ஊழியர்களும் ஒரு படகிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதில் பயணித் ஐந்து புகலிடக் கோரிக்கையாளர்கள் ஆழ் கடலில் வைத்து, உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து அவர்களின் சடலங்களை கடலிலே வீசியதாக இலங்கை பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் ரோஹிங்கியர்கள் தெரிவித்துள்ளனர். 2 ஆண்களும், 2 பெண்களும் 1 சிறுவனுமே உயிரிழந்துள்ளனர்.
கடந்த 19ஆம் திகதி வியாழக்கிழமையே புகலிடக் கோரிக்கையாளர்களின் படகு முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் கடலை அண்டிய பிரதேசத்தினை வந்தடைந்துள்ளது. இதனை அவதானித்த முல்லைத்தீவு மீனவர்கள், இவர்களுக்கு தேவையான அடிப்படை உதவிகளை வழங்கியதுடன், கடற் படையினருக்கும் அறிவித்துள்ளனர்.
உரிய ஆலோசனைகளைப் பெற்ற கடற் படையினர் இந்தப் படகினை திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர். அங்குள்ள அஷ்ரப் இறங்குதுறையின் ஊடாக இந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் இலங்கையின் நிலப்பரப்பிற்குள் அழைத்து வரப்பட்டனர்.
இவர்களில் கற்பிணித் தாய் ஒருவர் உட்பட 39 ஆண்களும் 27 பெண்களும் 49 சிறுவர்களும் காணப்பட்டனர். குறித்த படகில் இருந்த அனைத்து புகலிடக் கோரிக்கையாளர்களும் தரையிறக்கப்பட்டு குருதி மாதிரிகள் பெறப்பட்டு சுகாதார பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.
திருகோணமலை துறைமுகத்திற்கு நீதவான் அர்யூன் அரியரெட்ணம் விஜயம் மேற்கொண்டு விசாரணைகள் மேற்கொண்டிருருந்தார். அதனைத் தொடர்ந்து அகதிகள் அனைவரையும் திருகோணமலை நீதிமன்றத்திற்கு அழைத்து வருமாறும் அறிவுறுத்தினார்.
திருகோணமலை பொலிஸார் இவர்களிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்ட பின்னர் திருகோணமலை நீதவான் முன்னிலையில் கடந்த 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தினர். இதன்போது பாரியளவில் மொழிப் பிரச்சினை எதிர்நோக்கப்பட்டுள்ளது.
இதன்போது 103 புகலிடக் கோரிக்கையாளர்களையும் மிரிஹான தடுப்பு முகாமிற்கு மாற்றுமாறு திருகோணமலை நீதவான் உத்தரவிட்டுள்ளார். அதேவேளை, 12 படகு ஊழியர்களையும் எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
குறித்த 103 அகதிகளும் திருகோணமலை, நிலாவெளி பிரதேசத்திலுள்ள ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டனர். மறுநாள் 21ஆம் திகதி சனிக்கிழமை இவர்கள் அனைவரும் விசேட பஸ்ஸொன்றில் மிரிஹான தடுப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
எனினும், இந்த பஸ் ஹபரனை பிரதேசத்தில் வைத்து மீண்டும் திருகோணமலைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. குறித்த தடுப்பு முகாமில் இவர்களை தடுத்துவைக்க போதிய வசதியின்மையினாலேயே இவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனார்.
இவ்வாறான நிலையில், மீண்டும் 23ஆம் திகதி திங்கட்கிழமை முல்லைத்தீவு, கேப்பாபிலவு விமானப் படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
புகலிடம் கோரி ரோங்கியர்கள் இலங்கைக்கு வருவது இது முதற் தடவையல்ல. இதற்கு முன்னரும் சில தடவைகள் ரோஹியங்கர்கள் புகலிடம் கோரி இலங்கை வந்துள்ளனர். அகதி அந்தஸ்தின் கீழ் தற்போது இவர்கள் இலங்கை வாழ்ந்து வருகின்றனர்.
எனினும், இவர்கள் பல்வேறு சொல்லொன்னா துயரங்களுக்கு மத்தியிலேயே வாழ்ந்து வருகின்றனர். ஐக்கிய நாடுகளின் அகதிகள் பேரவை இலங்கையிலிருந்து வெளியேறிய பின்னர், இவர்களுக்கான உதவிகள் சில தொண்டர் நிறுவனங்களினால் வழங்கப்பட்டு வருகின்றது.
எனினும், எவ்வளவு காலத்திற்கு வழங்கப்படும் என்பது பாரிய சவாலாகும். இதனால், இந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் விடயத்தில் இலங்கை அரசாங்கம் சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நிலைப்பாட்டினை உடனடியா மேற்கொள்ள வேண்டியுள்ளது. இல்லாதவிடத்து இந்த ரோஹிங்கியர்களின் எதிர்காலம் கேள்விக்குரியாகிவிடும்!
Comments (0)
Facebook Comments (0)