இலங்கை எவ்வாறு சுதந்திரம் பெற்றது?

 இலங்கை எவ்வாறு சுதந்திரம் பெற்றது?

சாந்தனி கிரிண்டே  

1918ஆம் ஆண்டில், இலங்கை சட்டவாக்க சபையின் உறுப்பினரான ஜோர்ஜ் வில்லே, ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக பிரித்தானியாவுடன் பிணைக்கப்பட்டிருந்த போதிலும், எந்தவொரு அரசியல் உரிமைகளும் இல்லாமை குறித்து இலங்கையர்களிடையே அதிகரித்து வரும் சோர்வை விவரிப்பதற்கு ஒரு சுவாரஸ்யமான உருவகத்தை மேற்கோள் காட்டினார்.

1918.12.13 இல் சிலோன் சீர்திருத்த கழகம் மற்றும் சிலோன் தேசிய சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டாவது சீர்திருத்த மாநாட்டில் பேசிய வில்லே, இலங்கை தேசத்தை " பராமரிக்க தமது சொந்தப் பிள்ளைகள் பலரை கொண்டிருந்த பெற்றோர் வளர்ப்புப் பிள்ளைக்கு முன்னுரிமை அளிப்பதில் - ஒரு வகையாக, ஆனால் மிகவும் முன்னேற்றகரமான பெற்றோராக அல்லாத பெற்றோரின் பராமரிப்பில் உள்ள ஒரு வளர்ப்பு மகனுடன்” ஒப்பிட்டார்.

“வளர்ப்பு மகனுக்கு செழிப்பான மற்றும் சிறியளவில் கல்வி எனும் வடிவத்தில் சிறிது செலவுக்கான பணம் கொடுக்கப்பட்டுள்ளது; ஆனால் அவரது தந்தை இன்னமும் மகனை தனது மேலங்கியில் கட்டியிருப்பார். செழுமையும் கல்வியும் முன்னேற்றத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்தும் என்பதை தந்தையால் உணர முடியாது.

இந்த அப்பா தன் வளர்ப்பு மகனிடம் சொல்வதை இன்று பார்க்கலாம். ‘இப்போது நான் உன்னை தண்ணீருக்குள் போக அனுமதிக்கவில்லை, அதனால் உனக்கு நீந்தத் தெரியாது; நீ நீந்த முடியாது என்பதால் இப்போது உன்னை தண்ணீருக்குள் செல்ல என்னால் அனுமதிக்க முடியாது’.”

அன்றைய காலகட்டத்தின் மிக முக்கியமான சிங்கள அரசியல்வாதிகளில் ஒருவரான ஜேம்ஸ் பீரிஸ், பொறுப்பான அரசாங்கத்தை உணர்ந்து கொள்வதற்கான அடிப்படையாக பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக நாட்டில் சுய-அரச நிறுவனங்களின் தீவிரமான வளர்ச்சிக்கு அழைப்பு விடுத்து முன்மொழிந்த தீர்மானத்தை ஆதரிக்கும் போதே வில்லே இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

அந்தத் தீர்மானம் நாடு ஒரு முடியின் கீழான காலனித்துவமாக மாற வேண்டும் என்று பரிந்துரைக்கவில்லை, ஆனால் மக்கள் தங்கள் அரசியல் உரிமைகளைப் பயன்படுத்துவதற்கு அதிகமான வாய்ப்பை எதிர்பார்த்தது.

அதே நாளில் சீர்திருத்தக் கழகம் மற்றும் இலங்கை தேசிய சங்கத்தின் (CNA) தலைவரான சேர் பொன்னம்பலம் அருணாசலம் ஆற்றிய உரையில் இலங்கையர்கள் தங்கள் சொந்த அலுவல்களை நிர்வகிக்க அனுமதிக்கப்பட வேண்டிய சரியான காலத்திற்கு ஏன் வந்துள்ளோம் என்பதை விரிவாகக் கூறினார்.

"இலங்கையில், பிரிட்டிஷ் வணிகரும் பிரிட்டிஷ் பெருந்தோட்டக்காரரும் பொதுக் கொள்கை மற்றும் நடவடிக்கைகளில் அதிகமாக செல்வாக்கு செலுத்தினர். இரவு உணவு மேசையில், கிளப் அல்லது கோல்ஃப்-விளையாட்டில் ஒரு அரட்டை, பல வாதங்கள் அல்லது பல மாத கிளர்ச்சியை விட அதிகமாக செயற்படுத்தப்படுகின்றது.

ஒவ்வொரு துறைத் தலைவரும், அரசாங்கத்தின் ஒவ்வொரு உறுப்பினரும், சட்டமியற்றும் அதிகாரப் பெரும்பான்மை உறுப்பினர்களும், பிரிட்டிஷ் வணிகர் மற்றும் பெருந்தோட்டக்காரரின் உறவினர்கள் அல்லவா?”

நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடைந்துள்ள நிலையில், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல துறைகளில் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், அரசியல் ரீதியாக நாடு தேக்கமடைந்து வருவதாக இலங்கை உறுப்பினர்களின் வாதம் காணப்பட்டது.

1833ஆம் ஆண்டு இலங்கை சட்டவாக்க சபையானது தங்கியுள்ள மக்களுக்கான பிரதிநிதித்துவத்தை வழங்கும் நோக்கத்திற்காக அமைக்கப்பட்ட போதிலும், அதன் அமைப்பு 16 உறுப்பினர்களில் பத்து உத்தியோகபூர்வ உறுப்பினர்களுடன் உத்தியோகபூர்வமற்ற உறுப்பினர்கள் ஆறுபேரை மட்டுமே கொண்டதுடன் திருப்திகரமானதாக இருக்கவில்லை.

ஆறு பேரும் சிங்கள, தமிழ் மற்றும் பர்கர் சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்த தலா ஒரு அங்கத்தவரை உள்ளடக்கியிருந்ததுடன், ஏனையவர்கள் பெருந்தோட்ட மற்றும் வணிக சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்திய ஐரோப்பியர்களாவர்.

சபையின் அமைப்பு 75 ஆண்டுகளாக மாறாமல் இருந்ததுடன், கண்டி சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு மேலதிக உறுப்பினர்களை உள்ளடக்கிய ஒரே மாற்றங்கள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டன.

K.M. டி சில்வா தனது இலங்கையின் வரலாறு என்ற நூலில் குறிப்பிடுகையில், 1833 இல் சட்ட சபையை நிறுவியதன் மூலம் இலங்கை அரசியலமைப்பின் முன்னோடியாகக் கருதப்பட்டாலும், 50 ஆண்டுகளுக்குள் மற்றைய காலனித்துவங்கள் அதனை முந்தியதுடன், மொரிஷியஸ், ஜமைக்கா மற்றும் டிரினிடாட் போன்ற நாடுகள் அரசியலமைப்பு விருத்தியில் மிகவும் முன்னால் காணப்படுகின்றன.

பல தசாப்தங்களாக அரசியல் முன்னணியில் இருந்த தேக்க நிலை மேலும் அரசியல் உரிமைகளுக்காக உருவாகிவரும் பரப்புரைக்கு வழிவகுத்தது. இவை 1917 இல் இலங்கை சீர்திருத்தக் கழகம் மற்றும் சிலோன் தேசிய சங்கம் ஆகியவற்றை அமைப்பதற்கு வழிவகுத்ததுடன், இது அரசியலமைப்பு சீர்திருத்தங்களுக்கான உந்துதலுக்கு உத்வேகமளித்தது.

1919 இல் இலங்கை தேசிய காங்கிரஸின் ஸ்தாபனமானது நாட்டிற்கு அரசியல் சுயாட்சிக்கான அழைப்புகளை மேலும் வலுப்படுத்தியது, ஆனால் குடிமக்களுக்கு சர்வஜன வாக்குரிமை வழங்குதல் போன்ற முக்கியமான விடயங்களில் கூர்மையான வேறுபாடுகளுடன் காங்கிரசுக்குள் உயர்மட்ட உறுப்பினர்களுக்கிடையிலான உட்பூசல்கள் முன்னேற்றத்தை தாமதப்படுத்தியது.

டொனமூர் ஆணைக்குழு அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து சட்டவாக்க சபைக்கு மாற்றாக அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன, 1931 இல் நடைபெற்ற முதலாவது அரசுப் பேரவைக்கான தேர்தல்களுடன், அரசியல் சுயாட்சியின் முன்னணி பரப்புரையாளர்களான டி.பி. ஜயதிலக மற்றும் டி.எஸ்.சேனநாயக்க ஆகியோர் பேரவையில் ஆதிக்கம் செலுத்தினர்.

இரண்டாவது அரசுப் பேரவைக்கான தேர்தல் 1936 இல் நடைபெற்றது. மீண்டும், இலங்கை அரசியலின் இரண்டு முக்கியஸ்தர்களும் போட்டியின்றித் திரும்பினர். ஆனால் 1928 மற்றும் 1931 க்கு இடையில் அறிமுகப்படுத்தப்பட்ட சர்வஜன வாக்குரிமையுடன், இடதுசாரிக் கட்சிகள் அரசியல் அரங்கில் கால் பதித்தன.

இரண்டாவது அரசுப் பேரவைக்கு தெரிவு செய்யப்பட்டவர்களில் மார்க்சிஸ்ட் லங்கா சமசமாஜக் கட்சியின் (LSSP) முக்கிய பிரமுகர்கள், N. M. பெரேரா மற்றும் பிலிப் குணவர்தன ஆகியோர் உள்ளடங்குவர்.

அத்துடன் சிங்கள மகா சபையின் தலைமைப் பொறுப்பை ஏற்று ஒரு சக்தியாக மாறிக் கொண்டிருந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்காவும் பிரபலமடைந்தார்.

அரசியல் அடுக்குகளில் புதிய ஆர்வலர்கள் இருந்தபோது, அதிகார பரிமாற்றத்தின் இறுதிக் கட்டமான டொமினியன் அந்தஸ்து வழங்கப்பட்டு இலங்கையின் முதல் பிரதமராக பதவியேற்ற D.S. சேனநாயக்காவால் நாட்டின் அதிகாரம் முன்னெடுக்கப்பட்டது.

D.S, தனது சகோதரர்களான F.R மற்றும் D.C சேனநாயக்கவுடன் இணைந்து, 20ஆம் நூற்றாண்டின் முதல் இரண்டு தசாப்தங்களில் பலம் வாய்ந்த சக்தியாக இருந்த தன்னடக்க இயக்கத்தின் மூலம் தேசிய அரசியலில் நுழைந்தார்.

இப்போது சுதந்திர இயக்கத்தின் முன்னணியில் தள்ளப்பட்ட D.S, அதிகாரப் பரிமாற்றத்திற்கான பேச்சுவார்த்தைகளில் (1947-1948) அவருக்கு உதவுவதற்காக, தனது உள்ளூர் ஆலோசகர்களாக நாட்டின் முன்னணி வழக்கறிஞர்களில் இருவரான L. M. D de சில்வா (1893-1962) மற்றும் H. V. பெரேரா (1890-1969) ஆகியோரை நியமித்தார்.

இதில் நாட்டின் தலைசிறந்த சிவில் சேவையாளர்களில் ஒருவரான A. G. ரணசிங்க, பின்னர் சேர் ஆர்தர் மற்றும் 1941 இல் நம்பிக்கைக்குரிய கல்வியாளராக இலங்கைக்கு வந்த வில்லியம் ஐவர் ஜென்னிங்ஸ் ஆகியோரும் இருந்தனர்.

K. M de சில்வா எழுதுகையில், 'ஆதிக்க நிலை' பற்றிய தற்போதைய வரலாறுகளை நன்கு அறிந்திருந்த “D de சில்வாவும் பெரேராவும் D. S. இற்கு அதிகாரப் பரிமாற்றம் தொடர்பான பிரச்சினைகளுக்கு மிக முக்கியமான ஆலோசகர்களாக இருந்தபோது, பிரிட்டிஷ் அரசாங்கத்துடனான அவர்களின் பேச்சுவார்த்தைகள் முழுவதும் நிபுணத்துவ கருத்தைப் பெற அவர்கள் நம்பியிருந்த அதிகாரத்தரப்பு ஜென்னிங்ஸ் அவர்களேயாகும்.

De சில்வா மேலும் குறிப்பிடுகையில், “20 பெப்ரவரி 1947 அன்று, பிரித்தானிய அமைச்சரவை இந்தியாவின் சுதந்திரம் குறித்த தனது வரலாற்றுக் கொள்கை அறிக்கையை வெளியிட்டது. இந்திய துணைக்கண்டத்தை இந்தியா மற்றும் பாகிஸ்தானாக பிரித்து, பர்மாவிற்கு சுதந்திரம் வழங்கியதன் மூலம், பிரித்தானிய அரசின் இந்த முன்னாள் பிரிவுகளுடன் சேனநாயக்க மற்றும் சேர் ஒலிவர் குணதிலக்க (சிவில் பாதுகாப்பு ஆணைக்குழு மற்றும் டி.எஸ்.ஸின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவர்) இருவராலும் வைட்ஹாலுடனான அவர்களின் பேச்சுவார்த்தைகளின் போது வலியுறுத்தப்பட்ட ஒரு விடயமான சமத்துவ நடத்தைக்கான இலங்கையின் கோரிக்கைகள் கவனிக்கப்படாமல் இருக்க முடியாது.

1947 ஆம் ஆண்டு யூன் 10 ஆம் திகதி, பிரிட்டிஷ் அரசாங்கம் சிலோன் "பிரிட்டிஷ் பொதுநலவாய நாடுகளுக்குள் முழுப் பொறுப்பான அந்தஸ்தைப் பெற வேண்டும்" என்று உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

ஆகஸ்ட் மற்றும் செப்ரெம்பர் மாதங்களுக்கு இடையில், புதிதாக உருவாக்கப்பட்ட சோல்பரி அரசியலமைப்பின் கீழ் நாட்டில் முதல் தேசிய தேர்தல் நடைபெற்றது. D. S. சேனநாயக்கவின் புதிதாக உருவாக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி (UNP) பெரும்பான்மை ஆசனங்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அது வீழ்ச்சியடைந்து 95 ஆசனங்களில் 42 ஆசனங்களை மட்டுமே வென்றது.

"1947 பொதுத் தேர்தல் முடிவுகள் D. S. இற்கு ஏமாற்றத்தை அளித்தது, ஏனெனில் அவரால் புதிதாக உருவாக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி (UNP) அவரும் அவரது ஆதரவாளர்களும் எதிர்பார்த்த கணிசமான வெற்றியைப் பெறவில்லை," என்று de சில்வா தனது அவதானத்தை முன்வைக்கின்றார்.

எவ்வாறாயினும், வடக்கில் பெரும்பான்மையான ஆசனங்களைப் பெற்றிருந்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் (ACTA) ஆதரவுடன் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை அமைத்த அதே நேரத்தில் N. M. பெரேரா எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டார்.

இலங்கை சுதந்திர சட்டமூலம் டிசம்பர் 1947 இல் பிரித்தானிய சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டதுடன், நாடு பெப்ரவரி 4, 1948 அன்று சுதந்திரத்தை பிரகடனப்படுத்தியது. D. S. நான்கு ஆண்டுகள் மட்டுமே பிரதமராக பணியாற்றினார். பல தசாப்த கால காலனித்துவ ஆட்சியிலிருந்து நாட்டை சுதந்திரம் அடைய வழிவகுத்த அவர் 22 மார்ச் 1952 இல் தனது 68 வயதில் காலமானார்.

சாந்தனி கிரிண்டே ஒரு சிரேஷ்ட அரசியல் மற்றும் வரலாற்று கட்டுரையாளர் என்பதுடன் இலங்கையில் நீண்டகாலமாக பாராளுமன்ற நிருபராக பணியாற்றி வருகின்றார். அவரை chandani.kirinde2016@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியினூடாக அணுகலாம்.