146 எம்.பி.க்கள் மாத்திரமே கொவிட்-19 தடுப்பூசி பெற்றுள்ளனர்!
றிப்தி அலி
225 பாராளுமன்ற உறுப்பினர்களில் இதுவரை 146 பேர் மாத்திரமே கொவிட் - 19க்கு எதிரான தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் ஏற்றியுள்ளதாக பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை கடந்த பெப்ரவரி 16ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. அன்று முதல், ஓகஸ்ட் 12ஆம் திகதி வரையான காலப் பகுதியில் 146 பேர் மாத்திரமே கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசியினை முழுமையாக பெற்றுள்ளதாக தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.
இதில் 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் நாரஹேன்பிட்டியிலுள்ள இராணுவ வைத்தியசாலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அஸ்ட்ராசெனிகா தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர்.
இதற்கு மேலதிகமாக 24 பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திலுள்ள சுகாதார நிலையத்தில் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் தடுப்பூசியினை பெற்றுக்கொண்டுள்ளனர்.
எனினும், "அமெரிக்காவின் மொடர்னா மற்றும் பைஸர், சீனாவின் சினோபார்ம் மற்றும் ஜப்பானில் தயாரிக்கப்பட்ட அஸ்ட்ராசெனிகா ஆகிய தடுப்பூசிகளை பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொண்டமைக்கான எந்தத் தகவலுமில்லை" என பாராளுமன்றத்தின் உதவி செயலாளர் நாயகமும் தகவல் அதிகாரியுமான டிகிரி கே. ஜயதிலக்க தெரிவித்தார்.
இதேவேளை, கொவிட் - 19க்கு எதிரான தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத பாராளுமன்ற உறுப்பினர்களின் விபரம் மற்றும் அதற்கான காரணங்கள் தொடர்பான விபரங்கள் எதுவும் தம்மிடம் இல்லை என்றும் அவர் கூறினார்.
'பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தடுப்பூசியேற்றல்' தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தகவல் அறியும் விண்ணப்பத்திற்கு கடந்த ஓகஸ்ட் 12ஆம் திகதி வழங்கப்பட்ட பதிலிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர, ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹன திசாநாயக்க மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பிரான திலீப் வெதஆராச்சி ஆகிய ஐந்து பேரும் கடந்த 14 நாட்களுக்குள் கொவிட் - 19 தொற்றுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)