ஐக்கிய அரபு இராச்சியத்தின் பொது மன்னிப்பு காலப் பகுதியில் 1,175 இலங்கையர்கள் நாடு திரும்பல்

ஐக்கிய அரபு இராச்சியத்தின் பொது மன்னிப்பு காலப் பகுதியில் 1,175 இலங்கையர்கள் நாடு திரும்பல்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் வழங்கப்பட்ட பொது மன்னிப்பு காலப் பகுதியில் 1,175 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக டுபாயிலுள்ள கொன்சியூலர் ஜெனரல் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த ஸ்ரீPலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் ஃபிட்ஸ் ஏர் விமான சேவை நிறுவனங்களின்  சிறப்புச் சாவடிகளில் 1,175 விமான டிக்கெட்டுகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த செப்டம்பர் 01ஆம் திகதி முதல், அக்டோபர் 31ஆம் திகதி வரையான காலப் பகுதியில் வழங்கப்பட்ட ஐக்கிய அரபு இராச்சியத்தின் பொதுச் சலுகை நேர நிகழ்ச்சியின் போது ஐக்கிய அரபு இராச்சியத்திலுள்ள இலங்கையர்களுக்கு டுபாயிலுள்ள கொன்சியூலர் ஜெனரல் அலுவலக பல நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது.

இந்நிகழ்வானது, தனிநபர்கள் தங்கள் வீசா நிலைமைகளை முறைப்படுத்திக்கொள்ளவும், அல்லது அபராதங்கள் விதிக்கப்படாமல் இலங்கைக்கு திரும்புவதற்கும் ஒரு வாய்ப்பாக அமைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதற்கமைய, செப்டம்பர் 01ஆம் திகதி முதல் அக்டோபர் 17ஆம் திகதி  வரையிலான இப்பொது மன்னிப்பு திட்டத்துடன் தொடர்புடைய புள்ளிவிபரங்கள் பின்வருமாறு:

1. 8,513 நபர்கள் வழக்கமான தூதரக நேரங்களிலும் சிறப்புப் பொதுமன்னிப்பு நேரங்களிலும் உதவிஃசேவைகளுக்காக டுபாயிலுள்ள கொன்சியூலர் ஜெனரல் அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளனர்.

2. 1,128 கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

3. செல்லுபடியாகும் கடவுச்சீட்டைக் கொண்டிராதவர்களுக்கும், கடவுச்சீட்டைத் தொலைத்தவர்களுக்கும்  960 தற்காலிக பயண ஆவணங்களும் (TTDs), 252 தற்காலிக கடவுச் சீட்டுக்களும் (NMRP) வழங்கப்பட்டுள்ளன.

4. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் ஃபிட்ஸ் ஏர் நிறுவனத்தால் தூதுவர் நாயகத்தின் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புச் சாவடிகளில் 1175 விமான டிக்கெட்டுகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

செல்லுபடியாகும் கடவுச்சீட்டு இல்லாத மற்றும் கடவுச்சீட்டைத் தொலைத்த அனைத்து இலங்கையர்களும், ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிக்கடவு அட்டையைத் தயார்படுத்தி வழங்குவதற்கான போதிய கால எல்லையான 2024, அக்டோபர் 25 அன்று அல்லது அதற்கு முன், இலங்கை திரும்புவதற்கான தற்காலிக பயண ஆவணத்திற்கு (TTD) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தனர்.

இப்பொதுமன்னிப்புக் காலத்தின் போது இலங்கை சமூகத்திற்கு உதவுவதற்கு டுபாயிலுள்ள கொன்சியூலர் ஜெனரல் அலுவலம் உறுதிபூண்டுள்ளதுடன், தகுதியுடைய சகல நபர்களும் தமது வீசா நிலையை முறைப்படுத்துவதற்கு அல்லது பாதுகாப்பாக தாயகம் திரும்புவதற்கு கிடைக்கக்கூடிய சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு ஊக்குவிக்கிறமை குறிப்பிடத்தக்கது.